மன்னார் உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட 'A' Division இறுதிப்போட்டியில் கில்லறி அணி அசத்தல்-படங்கள்
மன்னார் உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட 'A' Division அதாவது முதலாம் தர அணிகளுக்கிடையிலான லீக் முறையிலான ஆட்டம் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று 10.08.2014 நேற்று முடிவுக்கு வந்தது.
10.08.2014 நேற்று இச்சுற்றின் இறுதிப்போட்டியானது மன்னார் பொது விளையாட்டரங்கில் சாவற்கட்டு கில்லறி வி க வுக்கும் பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் வி க வுக்குமிடையே நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் மத்தியில் மாலை 3.45 மணிக்கு இச்சுற்றுப்போட்டியின் நிதி அனுசரணையாளரும் போட்டியின் பிரதம விருந்தினருமாகிய சமூக சேவையாளர் திரு சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்களை இரு அணி வீரர்களும் லீக் நிர்வாகத்தினரும் மாலை அணிவித்து மங்களகரமாக வரவேற்று வீரர்களின் அறிமுகத்தை தொடர்ந்து 4.00மணிக்கு இறுதிப்போட்டி ஆரம்பமாகியது.
போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த அணி வெல்லும் என தெரியாதவாறு இரு அணிகளும் மிகவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஆடிக்கொண்டிருந்தனர்.
32ம் நிமிடத்தில் கில்லறி அணியின் நம்பிக்கை நட்சத்திரம் றஞ்சன் தமது அணிக்காக முதலாவது கோலைப் போட 41ம் நிமிடத்தில் சென் ஜோசப் அணியின் முன்கள வீரர் சிந்துஜன் தமது அணிக்காக முதலாவது கோலைப்போட இடைவேளையின்போது ஆட்டம் 1-1 என சமநிலையில் காணப்பட்டது.
இரண்டாம் பாதியில் 70ம் நிமிடத்தில் சென் ஜோசப் அணிக்கு ஒரு பெனால்டி உதை வழங்கப்பட அதை றொண்சன் உதைக்க கில்லறி கோல் காப்பாளர் சரோன் சிறப்பாக தடுத்து அணிக்கு உதவினார். தொடர்ந்து 79ம் நிமிடத்தில் கில்லறி அணிக்காக றஞ்சன் மிகவும் சிறப்பாக மீண்டும் ஒரு கோலைப்போட்டு அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இருந்தும் சென் ஜோசப் அணியினர் இறுதிவரை கடுமையாக போராடியும் ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கில் முடிவுற்றது.
2014ம் ஆண்டிற்கான லீக்கின் 'A' Division கிண்ணத்தை கில்லறி வி க தனதாக்கிக் கொண்டது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த இப்போட்டியில் கில்லறி வி க வானது அனைவரது பாராட்டையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் திரு சார்ள்ஸ் அவர்களுடன் மன்னார் நகர பிதா கௌரவ ஞானப்பிரகாசம் அவர்களும் மாவட்ட விளையாட்டு அதிகாரி பர்சுக் அவர்களும் லீக் தலைவர் தங்கேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
லீக் செயலாளர் திரு.ஞானராஜ் அவர்களின் நன்றியுரையைத்தொடர்ந்து வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசும் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது.
மன்னார் உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட 'A' Division இறுதிப்போட்டியில் கில்லறி அணி அசத்தல்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:

No comments:
Post a Comment