அண்மைய செய்திகள்

recent
-

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் நடந்து என்ன? விளக்குகின்றது ஏற்பாட்டு குழு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் நடந்து என்ன? விளக்குகின்றது ஏற்பாட்டு குழு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி அவசர அவசரமாக ஏற்பாடு செய்ததால் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். அத்தோடு அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகத்தினரையும் பிரிக்க பலர் பல கதைகளை சொல்கிறார்கள் எனவும், அதிலெல்லாம் உண்மைகள் கிடையாது எனவும் தவத்திரு வேலன் சுவாமிகள் மேலும் தெரிவித்துள்ளார்.

 நேற்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தவத்திரு வேலன் சுவாமிகள் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. அரசியல் அபிலாசையை பெற்றுக்கொள்ள நீதியை பெற்றுக்கொள்ள அறத்தின் வழி உரிமையை பெற்றுக்கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டிய தேவை இன்றைய காலம். ஈழத் தமிழர்களாக மட்டுமல்லாமல் அனைத்து தமிழர்களும் ஒன்றுபட வேண்டிய தேவையிருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு முன்பாக எமது மக்களின் மன உணர்வுகளை கட்சி தனிநபர்களை முன்னிறுத்தாமல் வெளிக்கொணர வேண்டிய தேவையிருந்தது. மட்டக்களப்பை சேர்ந்த சிவயோகநாதன் என்னை தொடர்பு கொண்டு இந்த போராட்டத்தை செய்ய வேண்டுமென்றார்.

 இதன்படி வடக்கு மாகாணத்தில் நானும் கிழக்கு மாகாணத்தில் அவரும் கூட்டங்களை ஒழுங்கு செய்தோம். காலம் குறைவாக இருந்ததால் 50 பேர் வரை பேரணிக்கு வர மாட்டார்கள் என பலர் கூறினார்கள். இவ்வளவு நடந்த பின்னும் பூகோள நிலைமையில் சாதகமான அம்சங்கள் இக்கும் காலத்தில் இன்றும் கட்சி தனிநபர் சார்ந்து சிந்திக்கிறார்களே யார் வந்தாலும் வராவிட்டாலும் நானும் சிவயோகநாதனும் மட்டுமேயென்றாலும் இந்த பேரணியை நடத்துவதென ஓர்மம் கொண்டிருந்தேன்.

 அவசர அவசரமாக ஏற்பாடு செய்ததால் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம். பேரணிக்காக பொத்துவில் செல்லும் போது சமய தலைவர்களை முன்னிறுத்தி நடக்க வேண்டுமென சிவயோகநாதன் தெரிவித்தார். போராட்டத்திற்கு முன்னதாக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. தடையில் எனது பெயரும் உள்ளதா என மறித்து மறித்து சோதனையிட்டார்கள். மத தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

 கைது செய்வார்களா? தடுக்கப் போகிறார்களா? என்பது தெரியவில்லை. நாங்கள் அங்கு சென்ற போது மழை பெய்ய தொடங்கியது. மழை காவல்துறையின் தடைகளின் மத்தியில் எல்லோரும் போட்டி போட்டக்கொண்டு நடந்தார்கள். நீதிமன்ற தடையை முன்னிறுத்தி சாணக்கியனுடன் பொலிசார் முரண்பட்டனர். அவர் மிக துணிவாக அதை கையாண்டார். முதல்நாளில் குறைந்தளவாக மக்கள்தான் இருந்தார்கள். 

 இயற்கை தடை, நீதிமன்ற தடை காரணமாக அந்த பயமிருந்திருக்கலாம். போகபோக மக்கள் கூட தொடங்கினார்கள். இதற்கிடையில் சில சில தொடர்பாடல் தகவல்கள் இருந்ததால் சில சல சலசலப்புக்கள் இருந்தன. இஸ்லாமிய மக்களின் ஆதரவு எமக்கு மிக அதிகளவாக இருந்தது. இஸ்லாமிய- தமிழ் உறவு மீளவும் புதுப்பிக்கும் வாய்ப்பேற்பட்டுள்ளது. மூன்றாம் நாளில் திருகோணமலையில் சில தடைகள் இருந்தது. ஆனால் வேறு தடைகள் இருக்கவில்லை. 3ஆம் நாள் முடிவில் பேரணியை மேலும் ஒரு நாள் நீடிக்க முடிவு செய்தோம். மக்களின் பேராதரவு வழியில் ஏற்படுத்தப்பட்ட தடைகள் காரணமாக இந்த முடிவை எடுத்தோம்.

 இது மக்களின் போராட்டம். ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள்தான் நாம் ஒழுங்கமைத்தோம். மிகுதி எல்லாமே மக்கள்தான் செய்தார்கள். அவர்களின் எழுச்சியின் பின்னால்த்தான் நாம் சென்றோம். 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மக்களின் பெரிய எழுச்சியாக இது இருக்கும். தமது உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொணரும் சந்தர்ப்பமாக இது இருந்தது. எற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில் பொலிகண்டி செம்மீன் படிப்பகத்தில் அடிக்கல் நாட்டி பிரகடனத்தையும் வாசித்தோம்.

 இனப்படுகொலைக்கு நீதி வேண்டி வடக்கு கிழக்கு தமிழர் தாயமாக பிரகடனப்படுத்த வேண்டி இந்த பிரகடனம் அமைந்தது. கடும் போக்கான இராணுவ மயப்பட்ட ஆட்சி நிகழும் போதும் மக்களின் எழுச்சி புலம்பெயர் தேச மக்களிற்கும் உந்ததலை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டம் நாம் அனைவரும் ஒன்றுபட்டால்தான் எமது விடுதலை சாத்தியமாகும். இதற்கு வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இருக்கும்.

 அரசியல் பிரமுகர்களின் வகிபாகம் பலம் எமக்கு ஆதரவாக இருந்தது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் என்ற பெயரில் ஒரு மக்கள் இயக்கத்தை இங்கு அங்குரார்ப்பணம் செய்கிறோம். மக்கள் பேரியக்கம் தொடர்ந்து போராட்டங்களை செய்யும். நிலத்திலும் புலத்திலும் எமது உரிமைகளை வென்றெடுப்போம். மிக குறுகிய காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமாக இருந்தது. கடந்த 12 வருடங்கள் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்த கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு இடங்களில் பல சம்பவங்கள் நடந்தன.

 கடந்த 12 வருடங்களில் பல நிகழ்வுகளை நாம் ஒழுங்கமைத்திருந்தாலும் இது போன்ற கூட்டிணைவு இதுதான் முதல்முறை. பல இடங்களிலும் தன்னிச்சையாக பல சம்பவங்கள் நடந்தன. மக்களின் உணர்வுடனான விடயம் இது. தனி நபரின் உணர்வின் விளைவுகளே பெரியவை. இதில் ஒரு சமூகத்தின்- கிராமத்தின் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயம். பருத்தித்துறை நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக 2, 3 இடங்களை இரகசியமாக தெரிவு செய்து வைத்திருந்தோம். 

அடிக்கல் நாட்டுவதாகவும் ஆலடியில் கூட்டம் நடத்துவதாகவும் தீர்மானித்தோம். நாம் போகும் போது ஆலடி மக்கள் வழிமறித்து தமது பிரதேசத்தில் நிகழ்வை நடத்துமாறு கேட்டார்கள். செம்மீனில் நடத்தி விட்டு வரலாம் வாருங்கள் என்றோம். அதுவும் தந்திரோபாய ரீதியில்தான் செயற்பட்டோம். அங்கு அடிக்கல் நாட்டி விட்டு ஆலடியில் வந்து பிரகடனம் வாசித்தோம். அங்கு சென்றதன் பின்னர்தான் பொலிகண்டி கிழக்கு மேற்கு பகுதிக்குள் இருந்த பிரச்சனைகளை அறிந்தோம்.

 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி எங்கெல்லாம் பிளவுகள் இருந்ததோ அங்கெல்லாம் ஒற்றுமை ஏற்பட்டது. தமிழ் அரசியல் கட்சிகளிற்குள் இணக்கப்பாடு ஏற்பட்டது. தமிழ் முஸ்லிம் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. பொலிகண்டியில் இரண்டு கிராமங்களிற்கிடையில் ஒற்றுமை ஏற்பட்டது. அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகத்தினரையும் பிரிக்க பலர் பல கதைகளை சொல்கிறார்கள். அதிலெல்லாம் உண்மைகள் கிடையாது என்றார்.

 1/தவத்திரு வேலன் சுவாமிகள் - வடக்கு கிழக்கு சிவில் சமூக இணைத்தலைவர். 

2/ச.சிவயோகநாதன் - வடக்கு கிழக்கு சிவில் சமூக இணைத்தலைவர். 

3/அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்.



பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் நடந்து என்ன? விளக்குகின்றது ஏற்பாட்டு குழு Reviewed by Author on February 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.