அண்மைய செய்திகள்

recent
-

உப்பு தட்டுப்பாட்டிற்கான காரணத்தை கூறிய அமைச்சர்

 உப்பு உற்பத்தி செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாகவே இலங்கையில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். 


இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யவிருந்த உப்பு தாமதமாகியுள்ளது. எவ்வாறாயினும் புதன்கிழமை இலங்கைக்கு உப்பு கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார். 

நாடு முழுவதும் தற்போது நிலவும் உப்பு பற்றாக்குறை குறித்து விசாரிப்பதற்காக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , அதிகாரிகள் குழு நேற்று (19) புத்தளம் - பாலாவி உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். 

குறித்த உப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இந்த விஜயத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான் மற்றும் முஹம்மட் பைசல் உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலரும் விஜயம் செய்தனர். 

இதன்போது, உப்பு உற்பத்தி குறைந்தமைக்கான காரணத்தை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் தலைமையிலான குழுவினர், உற்பத்தி உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் இயந்திர பற்றாக்குறை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். 

மேலும், உப்பு உற்பத்தி செய்யும் இடங்களையும், இயந்திர சாதனங்களையும் பார்வையிட்ட அமைச்சர் தலைமையிலான குழுவினர், உப்பு கூட்டுத்தாபன அதிகாரிகளுடனும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுடனும் கலந்துரையாடினர். 

இங்கு தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் கூறுகையில், 

உப்பு உற்பத்திக்கு நீர், காற்று மற்றும் வெப்பம் மிகவும் அவசியமாகும். இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் உப்பை உற்பத்தி செய்ய முடியாது. 

இலங்கையில் தொடர்ச்சியாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த வானிலை மாற்றம் உப்பு உற்பத்திக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிகமாக உப்பு உற்பத்தி செய்யப்படும் இடங்களான ஹம்பாந்தோட்டை, ஆனையிறவு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக மாறி, மாறி மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தியை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. 

உப்பு தட்டுப்பாட்டுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமோ, அதிகாரிகளோ பொறுப்பல்ல. வானிலைதான் காரணமாகும். இலங்கையின் அதிக மழை காலங்களில் இவ்வாறு உப்பு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. இது இயற்கையின் நியதி. 

கடல் நீரை எடுத்து சேமித்து வைத்து அதனை உப்பாக மாற்ற முடியாது. அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினால்தான் எமக்கு தேவையான உப்பை பெற முடியும். 

சிங்கள - தமிழ் புதுவருடத்திற்கு முன்பே இலங்கையில் உப்புக்கு தட்டுப்பாடு வந்திருக்க வேண்டும். எனினும் கையிருப்பில் உள்ள உப்பை நாங்கள் சரியான முறையில் நிர்வகித்ததால்தான் உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சந்தர்ப்பங்களில் கூட மக்களுக்கு நாளாந்தம் தேவையான உப்பை விநியோகித்து வருகிறோம். 

எனவே, இலங்கையின் மோசமான வானிலை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியாவில் இருந்து தற்காலிகமாக உப்பு இறக்குமதி செய்ய கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது. 

எமது நாட்டில் உணவுக்காக, கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக மற்றும் உரத் தேவைக்காக என பல தரப்பினர் உப்பு பயன்படுத்துகின்றனர். எனவே, அனைவருக்கும் தேவைக்கு ஏற்ப தேவையான உப்பு இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கு பொருத்தமான உப்பு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில்தான் இருக்கிறது. 

எனவேதான் குஜராத் மாநிலத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய முடிவு செய்தோம். எனினும் பாகிஸ்தான் - இந்தியா போர் காரணமாக குஜராத் துறைமுகம் ஒருவாரம் மூடப்பட்டிருந்தது. எனினும் நாளை புதன்கிழமை ஒரு தொகுதி உப்பு எமது நாட்டை வந்தடையவுள்ளது. 

இதேவேளை, இலங்கையின் வானிலை மாற்றம் அடைய வேண்டும் என நாம் எல்லோரும் பிரார்த்திப்போம் எனத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உப்பு உற்பத்தியில் அடுத்த வருடம் முறையான திட்டத்தை தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.



உப்பு தட்டுப்பாட்டிற்கான காரணத்தை கூறிய அமைச்சர் Reviewed by Vijithan on May 20, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.