நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நேற்று (29) இரவு 8:00 மணி முதல் இன்று (30) இரவு 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சுமார் 50,000 மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவிக்கையில், பதிவாகிய மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகளில் இதுவரை 14,030 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறினார்.
மீதமுள்ள மின்சார தடைகளை விரைவாக சரிசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் மின்சார தடைகளை சரிசெய்யும் பணிகளை மின்சார சபை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மின்சார தடைகள் தொடர்பாக பதிவாகிய முறைப்பாடுகளில் மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டார்.
அதன்படி, மத்திய மாகாணத்தில் பதிவாகிய 15,000 மின்சார தடைகளில் 5,300 முறைப்பாடுகளும், மேல் மாகாணத்தில் பதிவாகிய 10,000 மின்சார தடைகளில் 1,700 முறைப்பாடுகளும் இதுவரை மின்சார சபையால் சரிசெய்யப்பட்டுள்ளன.
தற்போது வரை மின்சார விநியோகம் சீராகாத பகுதிகள் இருந்தால் அல்லது மின்சார கம்பிகள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால், மின்சார சபையின் 1987 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு அளிக்குமாறும், அல்லது மின்சார சபையின் CEB Care கைப்பேசி செயலி (mobile app) மூலம் அறிவிக்குமாறும் மின்சார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு
Reviewed by Vijithan
on
May 30, 2025
Rating:
Reviewed by Vijithan
on
May 30, 2025
Rating:


No comments:
Post a Comment