பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் விரும்பாத செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம்-மன்னாரில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க தெரிவிப்பு
மன்னார் மாவட்டத்தில் காற்று,கணிய மணல் போன்ற வளங்கள் காணப்படுகிறது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் விரும்பாத செயற்பாடுகளை செய்ய மாட்டோம் என கூட்டுறவு பிரதி அமைச்சரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (28) மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கான உத்தியோகபூர்வ அலுவலக திறப்பு விழா நிகழ்வின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
கடந்த கால அரசாங்கங்கள் ஊடாக இந்த கனிய மணல் அகழ்வில் ஈடுபட இருக்கின்ற நிறுவனங்கள் முறையற்ற முறையில் சரியான அனுமதி பெறாமல் அரசியல் ரீதியான சலுகைகளை வைத்து கொண்டு இந்த செயற்பாட்டுக்கான அனுமதியை பெற்றுக் கொண்டுள்ளனர் .
அவர்கள் இந்த அனுமதியை சும்மா பெறவில்லை. முன்பு இங்கு இருந்த அரசியல்வாதிகள்,அரச அதிகாரிகள்,சமூக மட்ட அமைப்புக்களின் அனுமதியை உத்தியோக பூர்வமாக பெற்று அதை நடைமுறைப்படுத்த வருகை தந்திருக்கிறார்கள்.
ஆனால் எங்களுடைய அரசாங்கத்தை பொறுத்த வரையில் மக்களின் பாதுகாப்பு சூழல், மக்களின் விருப்பம் என்பவற்றுக்கு முதன்மை அழிப்போம் .
எங்கள் நாட்டிலே எங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரக்கூடிய பல வளங்கள் காணப்படுகிறது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் காற்று என்பது மிக சிறந்த வளம். அதே போன்று இந்த கணிய மணல் மிக சிறந்த வளம் .
விஞ்ஞான ரீதியில் இவ்வகையான செயற்பாட்டினால் இப்பகுதிக்கு அல்லது சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அதன் பிறகு அதற்கான நடவடிக்கைகள் எடுக்க கூடியதாக இருக்கும்.
பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் இந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ,அரச ஊழியர்கள் இந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இந்த சூழல் போன்ற விஷயங்களை கருத்தில் கொள்வோம்.
அதில் பாதிப்பு மக்களிடம் எதிர்ப்பு இருக்கும் என்றால் அவ்வகையான நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது கணிய மணல் அகழ்வுக்கான நவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப் படாது என தெரிவித்த போதும் தொடர்ச்சியாக கணிய மணல் அகழ்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment