மஹரகமையில் வீடொன்றிற்குத் தீ வைப்பு - தாயும் மகளும் பலி!
மஹரகமையில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தை, இரண்டாவது குறுக்கு ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 16 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (18) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அயலவர்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைத்து, காயமடைந்த இரு ஆண்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் வீட்டைச் சோதனையிட்ட போது, அறையொன்றுக்குள் தாயும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல் நடந்த இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதோடு, வீடொன்றிற்குத் தீ வைத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் கொலைச் சம்பவம் இதுவென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மஹரகமையில் வீடொன்றிற்குத் தீ வைப்பு - தாயும் மகளும் பலி!
Reviewed by Vijithan
on
April 19, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 19, 2026
Rating:


No comments:
Post a Comment