ஷ்யாமாவின் மரணம் கொலை எனத் தெரியவந்துள்ளது
தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடலியல் மருத்துவரின் (Physiotherapist) மரணம், கழுத்து நெரிக்கப்பட்டு செய்யப்பட்ட ஒரு மனிதக் கொலை என்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கார் ஒன்றினுள் இருந்து 33 வயதுடைய ஷ்யாமா தர்ஷனியின் சடலம் மீட்கப்பட்டமை முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த மரணம் தொடர்பில் எழுந்த சந்தேகம் காரணமாக பொலிஸார் பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அதன் பலனாக நேற்று (24) அதிகாலை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் சிறு பிள்ளை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி கைதடி பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே, ஷியாமாவின் காதலன் எனக் கூறப்படும் 43 வயதுடைய பிரதான சந்தேகநபரும், கொஸ்கொல்ல ஹொரம்பாவை பகுதியைச் சேர்ந்த அவரது 35 வயதுடைய மனைவியும் வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, குறித்த பிரதான சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ், ரஜவெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரும் நுவரெலியா பிராந்திய குற்றவியல் பணியக அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று (24) இரவு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிகம பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ஷ்யாமா, கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான காதலன், ஹோட்டல் அறையில் இருந்து ஷியாமாவின் உடலை தூக்கிச் செல்லும் சிசிடிவி (CCTV) காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், அது தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
7 நாட்களாக சந்தேகநபரைத் தேடி, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் பின்னரே சந்தேகநபர் இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஷியாமா தங்கியிருந்த அறைக்குச் சென்ற போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், பயம் காரணமாக சடலத்தை காரில் ஏற்றி தெல்தெனியவிற்கு கொண்டு வந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
ஷ்யாமாவின் மரணம் கொலை எனத் தெரியவந்துள்ளது
Reviewed by Vijithan
on
June 25, 2026
Rating:
Reviewed by Vijithan
on
June 25, 2026
Rating:


No comments:
Post a Comment