நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு, இன்றைய தினத்திற்கான (12) வெப்பமான காலநிலை தொடர்பான 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை நிலையத்தின் தகவல்படி, பகல் வேளையில் குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை - 'எச்சரிக்கை' நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பச் சுட்டெண்
வெப்பச் சுட்டெண் என்பது ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்டு கணக்கிடப்படுவதாகவும், இது மனித உடல் உணரும் வெப்பத்தை பிரதிபலிக்கிறதே தவிர, அது முன்னறிவிக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை அல்ல என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலைத்தளங்களில் உள்ளவர்கள் போதியளவு நீர் அருந்துவதுடன், நிழலில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும்.
முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.குழந்தைகளை ஒருபோதும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.
கடினமான வேலைகளைக் குறைத்துக்கொள்வதுடன், நிழலில் இருக்கவும், அதிகளவு நீர் அருந்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன், இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
Reviewed by Vijithan
on
July 12, 2026
Rating:


No comments:
Post a Comment