அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாதிகளுக்கு ஹலால் நிதியா? உடன் வந்து விசாரணைகளை நடத்துக; புலனாய்வுப் பிரிவுகளை அழைக்கிறது உலமா சபை


ஹலால் சான்றிதழ் நிதி பாவனை தொடர்பில் பொதுபல சேனா வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாகத் தமது அலுவலகத்துக்கு வந்து விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறியுமாறு உலமா சபை தேசிய புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கு எழுத்துமூலம் அழைப்பு விடுக்கத் தீர்மானித்துள்ளது.


விசாரணையின் பின்னர் உண்மை நிலைமையை அரச மேலிடத்தின் ஊடாக சிங்கள மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் உலமா சபை முன்வைக்கத் தீர்மானித்துள்ளது.

அத்தோடு, இப்பிரச்சினையைப் பூதாகரமாக்கும் பொதுபல சேனா அமைப்பைச் சந்தித்து அவர்களுக்கு உண்மையை ஆதாரங்களுடன் விளக்குவதற்கான ஏற்பாட்டிலும் உலமா சபையின் ஹலால் சான்றிதழ் பிரிவு ஈடுபட்டுள்ளது.

தமது கணக்கறிக்கைகள் மிகவும் தெளிவாகவும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளன என்று தெரிவித்திருக்கும் உலமா சபை,  மக்கள் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக எவர் வேண்டுமானாலும் அந்த அறிக்கைகளை ஊடகங்களில் பிரசுரிக்க முடியும் என்று வெளிப்படையான அறிவித்தல் ஒன்றையும் உலமா சபை விடுத்துள்ளது.

ஹலால் சான்றிதழ்கள் மூலம் உலமா சபைக்கு வருடந்தோறும் 90 கோடி ரூபா கிடைக்கின்றது என்றும் அந்தநிதி வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறதா என்றும் அரசு உடன் விசாரணை நடத்தவேண்டும் என்றும் பொது பலசேனா நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஹலால் சான்றிதழ் தொடர்பாகவும், அதன் மூலம் பெறப்படும் நிதி தொடர்பாகவும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை நீக்குவதற்காக உலமா சபை கடந்த வாரம் விடியோ மூலமான விளக்கமொன்றை வழங்கியது.

இதனைத் தொடர்ந்து மேலும் தெளிவாக்கலை வழங்கி ஹலால் சான்றிதழ் தொடர்பான சிங்கள மக்களின் தப்பெண்ணத்தை அடியோடு வேறருக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு, தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை பரந்துபட்ட விசாரணையை மேற்கொள்வதற்கான கதவை உலமா சபை திறந்துள்ளது.

இதில் முக்கியமாக விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவினரின் ஊடாகவும், அரச மேல்மட்டத்தின் ஊடாகவும் ஆதாரத்துடன் சிங்கள மக்களுக்கு உண்மைநிலையைத் தெரிவிக்கும் முயற்சியில் உலமா சபை இறங்கியுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு ஹலால் நிதியா? உடன் வந்து விசாரணைகளை நடத்துக; புலனாய்வுப் பிரிவுகளை அழைக்கிறது உலமா சபை Reviewed by NEWMANNAR on January 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.