அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண அபிவிருத்திப் பணிகள் முடங்கிப் போயுள்ளமைக்கு தென்பகுதி ஒப்பந்தக்காரர்களே காரணம் - சிவசக்தி ஆனந்தன்


வடமாகாண குளங்களின் திருத்த வேலைகள் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ்வரும் வீதிகள் தென்பகுதி பெரும்பான்மையின ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டும் முழுமை பெறாமலும் வடமாகாண அபிவிருத்திப் பணிகள் முடங்கியுள்ளதாக த.தே.கூ பா.உ. ந. சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:


வடமாகாண வீதி புனரமைப்பு மற்றும் நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைக்கும் வருடாந்தப் பணிகள,; தென்பகுதிப் பெரும்பான்மையின ஒப்பந்தக்காரர்களிடமே ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அரசின் உயர்மட்ட அமைச்சரின் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் இவ் ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் தமது வேலைகளை இடைநடுவில் நிறுத்துவதுடன் இவர்களால் மேற்கொள்ளப்படும் திருத்தவேலைகளில் முன்னேற்றமின்மையால் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்றவும் ஒப்பந்தக்காரர்களையோ மேற்பார்வையிடும் நிறுவனத்தையோ மாற்றவோ தட்டிக் கேட்கவோ முடியாமலுமுள்ளனர்.
வடமாகாண நீர்ப்பாசன திணைக்களத்தினால் ஒப்பந்தக்காரர்ரிடம் ஒப்படைக்கப்பட்ட குளத்திருத்த வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
ஒப்பந்தக்காரர்களான காமினி கொன்ஸ்ரக்சன், W.A.D பண்டாரநாயக்கா, ரஜரட்டே கொன்ஸ்ரக்சன் மற்றும் லியனகே முதலானோர் குறைந்த விலைக் கேள்வியில் இவ்வேலைகளைப் பொறுப்பேற்றுள்ளதுடன், கூலித்தொழிலாளர்களும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களே வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா கல்மடுக்குளம் 46 மில்லியன் ரூபாவிற்கு ஒப்பந்தமேற்கப்பட்டு அரைவாசி வேலையில் நிறுத்தப்பட்டுள்ளது. சேமமடுக்குளம் 43 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் கெயர் நிறுவனத்தினால் ரஜரட்டே கொன்ஸ்ரக்சன்ஸ் இடம் வேலை ஒப்படைக்கப்பட்டும் இன்னமும் அதன் அணைக்கட்டு, வாய்க்கால் வேலைகள் முழுமை பெறவில்லை.
மன்னாரில் பண்டிவிரிச்சான்குளம் 79 மில்லியனுக்கும் பெரியமடுக்குளம் 80 மில்லியனுக்கும் மற்றும் முள்ளிக்குளம் 50 மில்லியனுக்கும் எஸ. எம். ஏ கொன்ஸ்ரக்சன்ஸ் மற்றும் பத்மினி கொன்ஸ்ரக்சன்ஸ் இடம் வேலைகள் ஒப்படைக்கப்பட்டும் வேலைகள் முடிவுறவில்லை.
அனேகமான குளத்திருத்தவேலைகள் 2011ஆம் ஆண்டு இவ் நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எஸ். எம். ஏ கொன்ஸ்ரக்சன்ஸ் நிறுவனம் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் ஒப்பந்த அடிப்படையில் பெரும்பாலான குள அபிவிருத்திப் பணிகளைப் பொறுப்பேற்றுள்ளது. துணுக்காயில் வவுனிக்குளம் ரூபா. 376 மில்லியனுக்கு வேலைகளப் பொறுப்பேற்றும் கடந்த இரண்டு வருடங்களில் இதுவரை 30வீதப் பணியையே நிறைவு செய்துள்ளது.
ஆனால் ரூபா. 10 இலட்சத்திற்கு மேற்படாத குளத் திருத்த வேலைகளை உளளூர் விவசாயிகள் அமைப்பிடமோ ஒப்பந்தக்காரர்களிடமோ பிரித்து வழங்கினால் புனரமைப்பு பணிகள் நிறைவாக முடிவுற வாய்ப்புள்ளது. எமது பிரதேசம் என்ற உணர்வுடன் காணப்படும் இப்பிரதேச தொழிலாளர்களும் ஒப்பந்தக்காரர்களும் எமது பிரதேசத்தை வசந்தப்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.
வவுனியாவின் ஏ9 வீதியின், தாண்டிக்குளத்திலிருந்து ஆரம்பமாகும் தாண்டிக்குளம் கல்மடு வீதியின் 15 கி. மீட்டர் பகுதி குண்றும் குழியுமாக பல வருடங்களாக காணப்படுகின்றது.
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் வரும் இவ்வீதியின் பத்தினியார் மகிழங்குளம் பாலையடிச்சந்தி வரையான ஒன்றரைக் கிலோமீட்டர் திருத்த வேலைகள் 2011 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆகஸ்ட் மாதம் முடிவுறும் விசேட திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டன.
தற்போது அங்கு கல் மற்றும் சீமெந்து உலர் கலவையிடப்பட்டு அரைகுறையாக வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் ஒரு வருட காலமாக இவ்வழியால் வாகனங்கள் பயணிக்க முடியாதுள்ளதுடன் மாணவர்கள், நோயாளிகள், மற்றும் அன்றாட வேலைகளுக்காக செல்லும் தொழிலாளர்கள், இதனை சைக்கிள், மோட்டார் வாகனங்களில் கடக்கையில் டயர் பழுதடைந்து விதுகின்றது. இவ்வேலை ஒப்பந்தம் CEC நிறுவனத்திடமே வழங்கப்பட்டது.
இதேபோன்று, இத்திணைக்களத்தின் மாகாண நிதிமூலம் நிறைவேற்றப்பட வேண்டிய வவுனியா பூந்தோட்ட வீதியும் குன்றும் குழியுமாக உள்ளது. ஓமந்தை சேமமடு வீதியும் நெடுங்கேணி மருதோடை வீதியும் மற்றும் புதூர்- பாலமோட்டை வீதி உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் நிதியைப்பெற்றும் இவ்வேலைகள் கிடப்பில் உள்ளன. பிரதான வீதிகளின் நடுவிலும் ஓரங்களிலும் மாதக்கணக்கில் கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் திருத்தவேலைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை.
புதிது புதிதாக அரசினால் அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வடமாகாண சபையின் 13வது திருத்தச் சட்ட மூலத்தினூடான குறைந்தபட்ச அதிகாரங்களைப் பறித்து மத்தியில் குவித்துள்ள 'திவிநெகும' வாழ்வின் எழுச்சி மற்றும் வறுமையற்றதோர் இலங்கையை உருவாக்கும் நோக்குடனான சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக நடைமுறைப்படுத்த வழங்ப்படும் முன்னுரிமையானது மேலும் வடக்கின் அபிவிருத்தியை சிதைத்து விடுமோ என்ற ஐயத்தையே தோற்றுவித்துள்ளது எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண அபிவிருத்திப் பணிகள் முடங்கிப் போயுள்ளமைக்கு தென்பகுதி ஒப்பந்தக்காரர்களே காரணம் - சிவசக்தி ஆனந்தன் Reviewed by NEWMANNAR on January 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.