அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றில் தடம்பதிக்கும் புதிய திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்

புதிய திருத்தந்தை பற்றிய செய்திக்காக உலகம் காத்திருந்தது. கத்தோலிக்கர் மட்டுமல்ல அனைத்து மக்களுமே இச்செய்தியை எதிர்பார்த்திருந்தனர். புதிய திருத்தந்தை பற்றிய செய்திகளை அனைத்து மின்னியல் ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் முண்டியடித்துக்கொண்டு வெளியிட்டு வருகின்றன. செய்தி வேட்டையில் ஈடுபட்டிருக்கும் உலகத்தின் அனைத்து ஊடகங்களின் பார்வையும் இப்போது வத்திக்கானை நோக்கிய உள்ளது.

ஆர்ஜென்ரீனாவில் மகிழ்ச்சி 

  ஆர்ஜென்ரீனா நாட்டின் உயர் மறைமாவட்டப் பேராயராகப் பணிபுரிந்த கர்தினால் ஜோர்ச் மரியோ பெர்கோக்லியோ (வயது 76) உலகக் கத்தோலிக்கர்களின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமையை அறிந்து அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். சிலர் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். சிலர் மகிழ்ச்சிப்பாடல்களைப் பாடி ஆடினர். செய்தி வெளியாகியவுடனே அந்நாட்டு மக்கள் தமது வாகனங்களின் ஹோர்ன்களை அழுத்தி ஒலி எழுப்பி தமது புளகாங்கிதத்தை வெளிப்படுத்தினர். அந்நாட்டுத் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் மகிழ்ச்சியால் கூச்சலிட்டனர். புதிய திருத்தந்தை கர்தினாலாகப் பணியாற்றிய பேராலயத்திற்கு பெருவெள்ளமாக மக்கள் கூடத்தொடங்கினர்.   

இலத்தீன் அமெரிக்கப் பகுதி
  உலகத்தில் உள்ள 120 மில்லியன் கத்தோலிக்கர்களின் 42 வீதமானவர்கள் இலத்தின் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். பிறேசில், மெக்சிக்கோ, கொலம்பியா, ஆர்ஜென்ரீனா, பேரு, வெனிசுவெலா, சிலி, ஈக்குவாடோர், கௌத்தமாலா, கியூபா, போன்ற 23 நாடுகளை உள்ளடக்கிய பகுதியே இலத்தின் அமெரிக்கா என அழைக்கப்படுகின்றது. 
  இலத்தின் அமெரிக்காவில் இருந்து திருத்தந்தை தெரிவுசெய்யப்பட்டமையானது கத்தோலிக்க திருச்சபையிலும், உலகத்திலும் இந்தப் பகுதியின் வளர்ந்துவரும் தாக்கத்தைக் காட்டுவதாக திருச்சபை அதிகாரிகளும் உலகத் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 
  இத்தெரிவானது உலகத்தை தொடர்;ந்து வடிவமைப்பதில் இந்தப் பகுதியின் பலத்தையும், உயிர்த்துடிப்பையும் பேசுகிறது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டுள்ளார். 'புதிய உலகத்தில்' இருந்து திருத்தந்தை தெரிவுசெய்யப்பட்டமையானது வரலாற்றுச் சிறப்புமிக்க உண்மையான சரியான நிகழ்வாகும் என அவுஸ்ரேலியப் பிரதமர் யூலியா கிலார்ட் தெரிவித்திருந்தார். 

 வரலாற்றுச் சிறப்புக்கு உரியவர் 
  திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் அவர்களின் பின்னணியை நோக்கும்போது இவர் மூன்று வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தந்தையாக தடம் பதிக்கின்றார். ஒன்று அவருடைய தாயகம் மற்றையது அவர் சார்ந்திருக்கும் துறவற சபை, மூன்றாவது அவர் தேர்ந்தெடுத்துள்ள பெயர். 

  இலத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றாகிய ஆர்ஜென்ரீனா நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஒருவர் திருத்தந்தை என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இந்த வகையில் இலத்தின் அமெரிக்க நாடுகளின் வரலாற்றில் இவர் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். 

 அடுத்து கத்தோலிக்க திருச்சபையின் மிகப்பெரும் குருக்களுக்கான துறவற சபைகளில் ஒன்றாகிய இயேசு சபையில் (துநளரவைள) இருந்து இவரே முதன் முதலாக திருத்தந்தையாக வந்துள்ளார். இது இயேசு சபைக்குக் கிடைத்த மிகப்பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும். 

  மூன்றாவதாக திருச்சபை வரலாற்றில் பிரான்சிஸ் என்ற பெயரை தேர்;ந்துகொண்ட முதல் திருத்தந்தையாகவும் இவர் விளங்குகின்றார். புனித பிரான்சிஸ் அசிசி என்ற புனிதரின் பண்புகள் மிகவும் உயர்ந்தவை. ஏழைகள்பால் இரக்கம், எளிமை, தாழ்மை, கட்டுப்பாடு, திருச்சபையை மீளக் கட்டியெழுப்பவேண்டும் என்ற அவா போன்ற பண்புகளால் அணிசெய்யப்பட்டவர் இந்தப் புனித பிரான்சிஸ் அசிசி. இவருடைய பெயரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் புதிய திருத்தந்தையும் அப்புனிதரின் அடிச்சுவட்டைப் பின்பற்ற முனைகிறார் எனக்கொள்ளலாம். 
எதிர்பார்க்கப்பட்ட முடிவு

  திருத்தந்தையைத் தெரிந்தெடுக்கும் முறை மிகவும் பழமையானது என்பது உண்மைதான். ஆனால் இங்கே நாடுகளின் தேர்;தல்களில் நடப்பதுபோன்று பிரச்சாரங்களோ, கட்சி அரசியலோ இல்லை. கர்தினால்கள் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் திருத்தந்தை உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் வரலாம். இங்கே தூய ஆவியின் செயற்பாடு முன்னிலைப்படுத்தப்படுகின்றது. அதேவேளை காலத்தின் தேவைக்கு ஏற்ப மனிதர் என்ற வகையில் திருச்சபையில் சில எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பானதே.

 திருச்சபையின் வரலாற்றில் அனேகமாக ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக இத்தாலியைச் சேர்ந்தவர்களே திருத்தந்தையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் இந்த முறை புதிய திருத்தந்தை ஐரோப்பியர் அல்லாதவராக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. புதிய திருத்தந்தை ஆபிரிக்கராகவோ, ஆசியராகவோ அல்லது இலத்தின் அமெரிக்கராகவோ இருந்தால் நல்லது என்றே கருதப்பட்டது. 

  அமெரிக்காவில் கறுப்பினத்தவரான (ஜனாதிபதி ஒபாமா) ஒருவர் முதல் தடவையாக ஜனாதிபதியாக வந்தபோதே இந்தச் சிந்தனை திருச்சபைக்குள்ளும் ஏற்படத் தொடங்கியது. அந்த வகையில் இலத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஆர்ஜென்ரீனாவில் இருந்து திருத்தந்தை வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக வரவேற்கப்படுகின்றது. ஏறக்குறைய 1300 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையாக வந்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது. 

மிதவாதிகளுக்குக் கிடைத்த வெற்றி
  புதிய திருத்தந்தை அவர்கள் தீவிரத்தன்மை அற்ற ஒரு மிதவாதியாகவே நோக்கப்படுகின்றார். இப்படிப்பட்ட ஒருவரையே பெரும்பான்மையான கத்தோலிக்கர் எதிர்பார்த்தனர். காரணம் இன்றைய உலகின் தீவிரமான – புதுமையான மாற்றங்களுக்கு மத்தியில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய ஒரு திருத்தந்தை தேவை என உணரப்பட்டது. இன்று இயற்கைக்கும், இறைவனின் திட்டத்திற்கும் எதிரான கொள்கைகள், சட்டங்கள் நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கருக்கலைப்பு, இரக்கக்கொலை, ஒத்தபால் திருமணம், குளோனிங் போன்ற விடயங்களில் கத்தோலிக்க திருச்சபை அன்று தொடக்கம் இன்றுவரை உறுதியான நிலைப்பாட்டையே எடுத்துவந்துள்ளது. பலவித எதிர்ப்புக்கள் சவால்களுக்கு மத்தியிலும்  கத்தோலிக்க திருச்சபை இந்த விடயங்களில்  உறுதியான கொள்கைகளைக் கொண்டுள்ளது. ஒரு வகையில் திருச்சபையானது உலகத்தின் மனச்சாட்சியாகச் செயற்படுகிறது எனலாம். நல்மனம் கொண்ட அனைவருமே திருச்சபையின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றனர்ளூ ஆதரிக்கின்றனர். 


 இன்றைய உலகத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப ஒத்து ஓடுகின்ற ஒருவராக அல்லாமல் திருச்சபையின் அடிப்படைக் கொள்கைகளை தக்கவைக்கக்கூடிய -  நிலைநாட்டக்கூடிய ஒருவராகவும் உலகத்தின் மனச்சாட்சியாக இருந்து அநீதிகள், அடக்குமுறைகளுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய ஒருவராகவும் புதிய திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் நோக்கப்படுகின்றார். 
வரலாற்றில் தடம்பதிக்கும் புதிய திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் Reviewed by NEWMANNAR on March 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.