அண்மைய செய்திகள்

recent
-

மறிச்சிக்கட்டி முஸ்லிம்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் கையொப்பமிட்டது


மன்னர்-மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற முடியாத நிலையில் பல துன்பங்களை அனுபவித்துவரும் சூழ்நிலையில் இவ்விடயத்தில் தலையிட்டு நீதி வழங்குமாறு வலியுறுத்தும் அவசரக் கோரிக்கை ஒன்றினை 15 முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர். இவ்வசரக் கடிதத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) சார்பாக பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் கையெழுத்திட்டுள்ளார்.

மன்னார்-மறிச்சிக்கட்டி பிரதேச முஸ்லிம்கள் பூர்வீகமாக வசித்துவந்த அவர்களுக்குச் சொந்தமான 300 ஏக்கருக்கும் அதிகமான காணிப்பரப்பு கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேறு வழியின்றி இதற்கு அண்மித்த பிரதேசத்தில்  மரைக்கார் தீவைச் சேர்ந்த 100 குடும்பங்கள் கொட்டில்களை அமைத்து அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றனர். 
தமது சொந்தக் காணிகளை கடற்படையினரிடம் இழந்துவிட்டு, போக்கிடமின்றி தமது மூதாதையர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த மரைக்கார்தீவுப் பகுதியில் பல துன்பங்களுக்கு மத்தியில் குடியேறியிருக்கும் முஸ்லிம்கள் தமக்கு நீதி பெற்றுத் தருமாறு அரசியல்வாதிகளையும் ஏனையோரையும் கடந்த ஒருமாத காலமாகக் கோரி வருகின்றனர். 

இருப்பினும் எவரும் இம்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உள்ளிட்ட 15 முஸ்லிம் அமைப்புக்கள் கையொப்பமிட்டு இந்த அவசரக் கோரிக்கையினை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதில்  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை, முஸ்லிம் பெண்கள் செயல் ஆராய்ச்சி முன்னணி, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, தேசிய சூறா கவுன்சில்,  முஸ்லிம்களின் செயலகம், முஸ்லிம் மீடியா போரம், சிறிலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி, ஐக்கிய முஸ்லிம் உம்மா, மஜ்லிஸுல் சூறா, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, கிரசண்ட் பவுண்டேசன், மற்றும் சைலான் முஸ்லிம் வாலிப இயக்கம் ஆகிய 15 முஸ்லிம் அமைப்புக்களே கையொப்பமிட்டுள்ளன.

இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். அண்மைக்காலமாக வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிரான தவறான கருத்துக்களை பொது பல சேனா பரப்பி வருகின்றது.

1990ஆம் ஆண்டு ஒரு லட்சம் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் பாலாத்காரமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு மறக்கப்பட்ட மக்களாக அகதிகள் முகாம்களில் வாழ்கின்றார்கள்.

சுமார் 35 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயர்ந்த தமது பூர்வீக இடத்துக்கு மீள்குடியேற கனவு கண்டார்கள். இவர்களில் 22 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற பதிவு செய்து கொண்டார்கள்.தேவையான காணிகள் இன்மையால் 22 ஆயிரம் குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் குடியேற முடியாதுள்ளது. யுத்தத்துக்கு முன்னராக வெளியேற்றப்பட்ட பழைய அகதிகளான இவர்களுக்கு ஐ.நா. நிதி உதவிகளும் வழங்கப்படவில்லை.

அரசாங்கமும், சர்வதேச சமூகமும் இவர்களின் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலையில் முஸ்லிம் நாடுகளின் நிதியுதவி மூலம் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டன. இதனை இனவாத பௌத்த அமைப்புக்கள் இலங்கையின் சட்டத்துக்கு முரணான வகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட உதவிகள் என குற்றம் சுமத்துகின்றன.

யுத்தத்தின் காரணமாக குடியிருப்பாளர்களால்கைவிடப்பட்டுள்ள நிலங்கள் காடுகளாக மாறியுள்ளன. மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் காணிகளை கையேற்றுள்ளனர். அத்தோடு வேறு பலர் பலவந்தமாக காணிகளை கையேற்றுள்ளனர். இந்த விடயங்களை நாம் உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

மாங்குளத்திலும் மறிச்சிக்கட்டியிலும் 700 ஏக்கர் காணியினை கடற்படை கையேற்றுள்ளது. சிலாவத்துறையில் பள்ளிவாசலுடன் கூடிய காணியையும் கையேற்றுள்ளது.

1990க்கு முன்பு முஸ்லிம்கள் விவசாயம் செய்த பிரதேசம் தற்போது வனப் பிரதேசம் என  வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காணிக்கு உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து தமக்கு காணிகளை பெற்றுத் தருமாறு பிரதேச செயலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதில் மீள்குடியேற திட்டமிட்டுள்ளார்கள். மீள்குடியேறியவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக மீள்குடியேறவில்லை. அதற்கான ஆவணங்கள் அனுமதிகள் பிரதேச செயலாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

சுமார் 100 குடும்பங்களின் காணியில் தற்போது கடற்படையினர் குடியேறியுள்ளார்கள். இதனால் அந்த குடும்பங்கள் வேறு வழியின்றி வில்பத்து எல்லையில் தற்காலிக கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

இவர்கள் ஜாஸிம்  சிட்டி வீட்டுத்திட்டத்திற்கு உரித்தானவர்கள் அல்ல. சட்டவிரோதமான குடியிருப்புக்களை நாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இவ்வாறு குடியிருப்பவர்கள் காணிகள் வழங்கப்பட்டதும் அவ்விடத்திலிருந்து  சென்று விடவே உள்ளார்கள்.

பொது பல சேனா இவ்வாறான உண்மை நிலையினை அறியாது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக ஊடகங்கள் மூலம் தவறான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. மோசமான அறிக்கைகளையும் வெளியிடுகின்றன. இது கவலைக்குரியதாகும்.

முஸ்லிம் சமுதாயம் நாட்டில் சட்டம் நிலைநாட்டப்படுவதுடன் தீவிரவாதக் குழுக்கள் சட்டத்தைத் தங்கள் கரங்களில் எடுத்து செயற்படக்கூடாது அது தடைசெய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது."எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மறிச்சிக்கட்டி முஸ்லிம்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் கையொப்பமிட்டது Reviewed by NEWMANNAR on April 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.