அண்மைய செய்திகள்

recent
-

கவிஞர் எழுத்தாளர், பாடலாசிரியர், ஆங்கில ஆசிரியர் குறும்பட இயக்குனர் கலைஞர் அ.நிஷாந்தன்அவர்களின் அகத்திலிருந்து ..

மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில்

கணனியில் முகம்  கலைஞனின் அகம்

எமது இணையத்தளத்தில் எமது இளைய தலைமுறையினை இயன்றவரை முயன்று இவர்களின் இலட்சியப் பாதையில் நாமும் இணைந்து அவர்களின் அறிவுடமை ஆக்கத்திறமைக்கு ஊக்கம் கொடுக்க அலசி ஆராய்ந்து அகத்திரையில் உள்ளதை முகத்தில் கண்டு கணனி திரையில் உங்கள் ஆதவிற்காய் கரை சேர்ப்போம் காலமிருக்கும் வரை................

கணனியில் முகம் கலைஞனின் அகம் இப் பகுதியில் கவிஞர் எழுத்தாளர், பாடலாசிரியர், ஆங்கில ஆசிரியர் குறும்பட இயக்குனர் கலைஞர் அ.நிஷாந்தன்அவர்களின் அகத்திலிருந்து .....



தங்களைப் பற்றி ?

இயற்கையழகும், கலையார்வமும் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்திலே வயல்வெளிகளும் பசிய மரங்களும் அசையும் தென்றலின் முன்றல் தான் முரசு மோட்டையெனும் கிராமம் தான் எனது சொந்த இடம். அப்பா அந்தோனிப்பிள்ளை, அம்மா மரியம்மா, அண்ணன், அக்கா, தம்பியோடு ஆனந்தமாய் வாழ்ந்த கிராமம். தற்போது மன்னாரில் வசித்து வருகின்றேன். மன்/அல்மினா மகாவித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகின்றேன்.


முதல் கால்பதித்த துறை?

கவிதை தான் அதுவும் உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் போது காதல் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். கற்பனையும் காதலும் இளமைத் துடிப்பும் கலந்திருந்த காலப் பகுதியது...


கவித் துறைக்குவர உந்து சக்தி?

காதல் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்த எனக்கு 'சிற்பியே உன்னை செதுக்குகிறேன்' வைரமுத்துவின் கவிதை தொகுதியை வாசித்தேன். அந்நூல் எனக்கு உந்துசக்தியாக இருந்தது. ஆனால் விழிப்புணர்வை தந்தவர் சுபாஷ; சந்திரபோஸ் அண்ணா தான் அவரை நினைவில் கொள்கிறேன்....


முதல் கவிதையும் வெளியீடும்?

1997ம் ஆண்டு இடம்பெயர்ந்து மடுவில் இருந்த காலப்பகுதியில் நான் எழுதிய சமுதாய சிந்தனை கொண்ட கவிதை என்றால் 'அந்த அகதி முகாம்' இவ்வாறு என்னால் எழுதப்பட்ட பல கவிதைகள் பல பரிசுகளைப் பெற்றது. நண்பர்களின் உதவியோடு எனது தொகுதியை வெளியிடும் எண்ணம் 2001ம் ஆண்டு 'சொல்லில் எழுதிய வாழ்வு' எனும் தலைப்போடு வெளியீடு கண்டது. எனது முதலாவது தொகுதிக்கே சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியே.


மேலும் தங்களின் படைப்பு?

'சொல்லில் எழுதிய வாழ்வு' பின் எனது இரண்டாவது படைப்பு 10 வருட இடைவெளியின் பின் 2012ம் ஆண்டில் 'விருட்சமே வெளியே வா' எனும் இவ் நூல் 5 மாவட்டங்களில் 200 மாணவர்களிடம் நேர்காணல் கண்டு அவர்களிடம் உள்ள பிரச்சினைகள் வாழ்வில் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் எதையும் தாங்கும் திறன் என்னும் நல்ல ஒழுக்க விழுமியங்களை வளர்ப்பதற்கு வழிகாட்டும் 'விருட்சமே வெளியே வா' என நம்புகிறேன். எடுத்துக்காட்டாக அடம்பனை சேர்ந்த மாணவி ஒருவரின் தற்கொலை முயற்சியை தடுத்திருக்கிறது எனது நூல் 'விருட்சமே வெளியே வா' எனும் போது என் முயற்சிக்கு கிடைத்த அளப்பரிய வெற்றி எனலாம்.


இவை தவிர்ந்த வேறு?

சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு, நாவல், மதுபாவனைக்கு எதிராக எழுதிய நகைச்சுவை தொகுப்பு, எனது சுய சிந்தனை தொகுப்பு மட்டுமல்லாது பல குறும்படங்களும் வெளிவரவுள்ளன...


குறும்படம் பற்றி தங்களின் கருத்து?

கவிதை, சிறுகதை நாவல், நாடகம், நாட்டுக்கூத்து போன்ற பல்வேறு கலை வடிவங்கள் மூலமாகத்தான் எமது கலைகள் கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தி வருகிறோம். தற்போது எமது மக்கள் மத்தியில் வாசிப்புத் தன்மை குறைவு. எந்த நிலையில் உள்ள பாமர மக்களும் கவிதை சிறுகதை நாவலை புரிந்து கொள்வதைக் காட்டிலும் குறும்படத்தினை இலகுவாக புரிந்து கொள்வர். எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் சிகரம் வைத்தாற் போல் குறும்படம் திகழ்கிறது. எம் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு சிறந்த கருவியாகவுள்ளது குறும்படம்..


கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர் குறும்பட இயக்குனர் இத்துறைகளில் எது உங்களை அடையாளப் படுத்தும் துறையாக உள்ளது..
இத்துறைகளில் எனக்கு பிடித்தமானது குறும்பட இயக்குனர் என்பதுதான் எனதும் அடையாளமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஏனைய துறைகளை விட குறும்படத்தில் தான் நான் சொல்ல நினைப்பதை இலகுவாக சொல்லி விட முடிகிறது....


ஆசிரியர் என்ற வகையில் இன்றைய சூழ்நிலையில் ஆசிரியர்?

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பாட ஆசிரியர்களாகவே இருக்கின்றார்கள். பாடத்தை மட்டுமே கற்றுக் கொடுக்கின்றார்கள். இவ்வாறான சூழலில் மாணவர்கள் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்க தவறிவிடுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியரையோ, பெற்றோரையோ மதிப்பதில்லை. ஆசிரியர் ஒவ்வொருவரும் பெற்றோர்கள் போல் அக்கறை கொண்டு வழிநடத்த வேண்டும்.


தகுதியற்ற ஆசிரியர்களும் மாணவர்களின் நிலை ?

ஒருசில ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் இந்த மூன்ற பாடத்திற்குமான கற்றல் கற்பித்தல் மிகவும் மோசமாகவுள்ளது. காரணம் ஆசிரியன் என்பவன் முடிந்தவரைக்கும் தான் கற்றுக் கொடுக்கின்ற பாடத்துடன் ஏனைய பாடங்களிலும் பொது அறிவு, நுண்ணறிவு உளச்சார்பு போன்ற தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். இல்லையேல் மாணவர்களின் நிலை மிகவும் மோசமானதாக அமையும். வாழ்வாதார பொருளாதாரப் பிரச்சினையும், வேலையின்மை போன்றனவும் பெரும்பங்களிப்பு செய்கின்றது..


இந்தியாவில் உள்ள எந்த இயக்குனர் போல வர வேண்டும் என ஆசைப்படுகின்றீர்கள்?

அவ்வாறான ஆசையில்லை. எமது மக்களின் ஆசைகள், உணர்வுகள், சோகங்களை வெளிக் கொண்டு வரத்தக்க ஒரு இயக்குனராக வரவேண்டும் என்பதே எனது ஆசை..


நீங்கள் இயக்கவிருக்கும் முழு நீளத் திரைப்படம் பற்றி ?

'ஊமைப் புவரசு' என்னும் எனது சிறுகதையினை முழு நிளப் படமாக இயக்க விரும்புகின்றேன். தயாரிப்பாளர் ஒருவர் கிடைப்பாராகவிருந்தால் மிக விரைவில் மன்னாரிலிருந்து ஒரு முழு நீள திரைப்படம் வெளிவரும்.


மூன்று துறைகளிலும் பெற்ற விருதுகள் பற்றி?

'சொல்லில் எழுதிய வாழ்வு' கவிதை தொகுதி - 'சாகித்திய மண்டலப் பரிசு'
அகில இலங்கை ரீதியில் பாராட்டப்பெற்ற 'சொல்லில் எழுதிய வாழ்வு' மற்றும் 'சிகப்பு நாட்களின் சுவடுகள்' சிறுகதைகள்.
அகில இலங்கை ரீதியில் பாடல் இயற்றுதல் இரண்டு தடைவ இளைஞர் விருது.
பல பாடல்கள் பாடியும் வவுனியா 'ரெயின் அல்பம்', 'சிறகுகள்', 'வன்னியருவி' 'வன்னியூற்று', இந்தியாவில் 'அம்மா' எனும் அல்பத்தில் எனது பாடலை (அனுராதா ஸ்ரீராம் பாடுகிறார்)
அதி வந்தனைக்குரிய ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகையினால் 'பல்துறை வித்தகன்' சிறப்பு விருது.


குறும்படங்கள் :

வல்லூறு - சிறந்த கதை சிறந்த வசனம். இரு விருதுகள் - 'விட்டில் பூச்சி'(மதுவுக்கு எதிரானது), 'வேகம்' (வீதி விபத்து பற்றிய விழிப்புணர்வு - சிறந்த கலை இயக்குனர் விருது.


சிறந்த பத்து படத்திற்குள் தெரிவு விருது.

'கவனம்' - தொலை பேசியினால் தொலையும் இளைய தலைமுறை விழிப்புணர்வு ஒளிப்பதிவு எழுத்துரு இயக்கத்தோடும். (இவ்வருடம் 6ம் மாதம் வெளிவர இருக்கின்றது.)
'சாம்பலில் இருந்து' வன்னி மக்கள் யுத்தத்திற்கு பின்னான அவல நிலை பற்றியது. ஒளிப்பதிவு எழுத்துரு, இயக்கம் வெளிவரவிருக்கின்றது..


மறக்க முடியாத சந்தோஷ தருணம்? 

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் அதிவந்தனைக்குரிய மன்னார் மறைமாவட்ட ஆயர் திரு இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு 'பல்துறை வித்தகன்' என்னும் சிறப்புப் பட்டத்தினை பெற்றுக் கொண்ட போது...


தங்களின் கவலை?

எனது ஒரே தம்பி அ.நிதர்ஷனின் மரணம் மற்றும் இறுதி யுத்தத்தின் போது தாய் தந்தையினை இழந்த பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலையடைவதுண்டு.


பிடித்தது பிடிக்காதது?

ஹரிகரன் பாடல்கள், நண்பர்கள் - பிடிக்கும்
நன்றி மறப்பது - பிடிக்காது


கலைஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்களா? உங்கள் கருத்து?

கலைஞர்கள் கௌரவிக்கப்படுகின்றார்கள். கௌரவிக்கப்படவேண்டியவர்கள்.ஏனெனில் தனது குடும்பம், தனது தொழில் இவையிரண்டு விடயங்களையும் மட்டுமே சிந்திக்கின்ற மனிதர்களுக்கு மத்தியில் சமுதாயம் என்கின்ற மூன்றாவது விடையம் குறித்தும் அக்கறை கொள்கின்றவர்கள் கலைஞர்களே. ஆனால் கலைஞர்கள் கலைத் துறையில் சிந்தனையினை விரையம் செய்வதினால் பொருளாதார ரீதியில் பெரும்பாலும் பின்னடைவான நிலையிலே காணப்படுகின்றனர்.

இவர்கள் தமது கலைப் படைப்புக்களை வெளிக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்ற போது அவர்கள் படும் பாட்டினை வார்த்தையில் சொல்லி விட முடியாது. ஏழைக் கலைஞர்களின் படைப்புக்களை வெளிக் கொண்டு வருவதற்கு உதவக் கூடியவர்களை நம் சமுதாயம் மிகவும் அரிதாகவே கொண்டிருக்கின்றது. பெரும் செல்வந்தர்களாக இருப்பவர்களே கலையுணர்வு அற்றவர்களாக காணப்படுவதும் இப் பின்னடைவிற்கு காரணமாக இருக்கக் கூடும்.


இளைஞர்களுக்கு சொல்ல நினைப்பது ?

தனது திறன் என்னவென்பதை அவர்கள் முதலில் இனம் காண வேண்டும். அத்திறனை வளர்த்து அதில் முன்னேற வேண்டும். அத்திறனை வளர்த்து அதில் முன்னேற வேண்டும் நவநாகரீகமாக வாழ வேண்டும் என்கிற முனைப்பு மட்டுமே அவர்களிடம் அதிகளவில் காணப்படுகின்றது. அவ்வாறிருப்பது தவறல்ல. அதுதான் வாழ்க்கை என்கின்ற மனநிலையினை மாற்ற வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 700000 சிகரெட்டுக்கள் விற்பனையாகின்றன. இதில் பெரும் பங்கு இளைஞர்களின் நுரையீரல்களைத் தான் சென்றடைகின்றது. இவ்வாறான பல காரணங்களால் பெரும்பாலான இளைஞர்கள் எங்கு போவது எதைச் செய்வது என்பது தெளிவில்லாமல் தடுமாறிக் கொண்டு அலைகிறார்கள்.
இவர்கள் தமது நிலையினையுணர்ந்து தமது வாழ்க்கையினை ஒளி மயமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் எழுச்சி காண வேண்டும்.


மன்னார் இணையம்(Newmannar.com)  இணையத்தளம் பற்றி ?

தங்கள் இணையத்தளம் வழங்கும் கலைஞர்களுக்கான முக்கியத்துவம் குறித்து மகிழ்வடைகின்றேன். இலை மறைகாயாகவுள்ள கலைஞர்களை உலகிற்கு வெளிப்படுத்தும் தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
தமது படைப்புக்களை வெளிக் கொண்டுவர முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் ஏழைக் கலைஞர்களின் படைப்புக்களை வெளிக் கொண்டு வருவதற்குரிய நிதியுதவியினை வழங்கத்தக்கவர்களும் கலைகளை மதிப்பவர்களுமான சிலரின் உதவிகள் மூலமாக வெளிக்கொண்டு வர உதவுவீர்களாயின் மிக்க மகிழ்ச்சியடைவேன். தங்கள் பணி தொடர இறையாசி வேண்டி நிறைவு செய்கின்றேன்...



சந்திப்பும் சிந்திப்பும்

மன்னார் இணையத்துக்காக

வை.கஜேந்திரன்.



குறிப்பு....

மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியினூடாக இலை மறை காயாக மறைந்திருக்கும் நம் கலைஞர்களை கௌரவிக்க  உங்கள் ஊரிலுள்ள கலைஞர்களை எமக்கு அறியப்படுத்த   newmannar@gmail   எனும் எமது மின் அஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்..

விம்பம் தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன
கவிஞர் எழுத்தாளர், பாடலாசிரியர், ஆங்கில ஆசிரியர் குறும்பட இயக்குனர் கலைஞர் அ.நிஷாந்தன்அவர்களின் அகத்திலிருந்து .. Reviewed by NEWMANNAR on June 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.