அண்மைய செய்திகள்

recent
-

பாடலாசிரியர் இளம் பாடகர், இசைக் கலைஞர் ஜி.எப்.சுதர்சன் அவர்களின் அகத்திலிருந்து

தங்களைப் பற்றி?

யாழ் இசை கொண்ட யாழ்ப்பாணத்திலே இயற்கை விளையாடும் இளவாலை கிராமம் தான் சொந்த இடம். தற்போது அப்பா சூசைப்பிள்ளை இம்மானுவேல் குணசிங்கம் அம்மா கிளாறிஸ் றோசலீன் தம்பி ஜோய் நிலோஷன் மன்னார் மாவட்டத்திலே எழுத்தூர் கிராமத்திலே வசித்து வருகின்றேன்.

இத்துறையை தேர்ந்தெடுக்க காரணம்?


சிறுவயதில் இருந்தே எனக்கு இசை மீது அதிக ஆர்வம். பாடல்களை மிகவும் அவதானமாக கேட்பதுடன் அப்படியே பாடவும் செய்வேன். திரும்ப திரும்ப முயற்சி செய்வேன். இந்தியாவில் 2ம் தரத்தில் கற்றுக் கொண்டு இருக்கும்போது மேசை மீது தாளம் தட்டி நானும் என் சக மாணவர்களும் பாடிய போது ஆசிரியர் ஒருவர் டேய் நீ மிகவும் நன்றாகப் பாடுகிறாய். திரும்பவும் பாடு என பலமுறை பாட வைத்தார். ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டினார்கள். அதே போன்று இலங்கையிலும் மன்னாரில் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் 3ம் தரம் படிக்கும் போதும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஊக்கம் தர மாணவ மன்றங்களிலும் பாடசாலை நிகழ்ச்சிகளிலும் பாட ஆரம்பித்தேன்.


தங்களின் குருக்கள் பற்றி?


எனது சிறுவயது குருக்களாக என்னை தூண்டி உற்சாகப்படுத்தியவர்கள் என்றால் ஏணஸ் மாஸ்ரர் குரு மாஸ்ரர் இருவரும் சிறந்தவர்கள் அன்பானவர்கள் இவர்கள் இருவரின் துணையினால் தான் நான் இன்று ஒரு பாடகனாக ஜொலிக்கின்றேன். இவர்களை மறந்து விடுவேன் என்றால் எனது திறமை என்னை விட்டு சென்றுவிடும். என்றென்றும் என் நினைவில் இருப்பவர்கள்.


முதல் மேடை ஏறிப்பாடிய பாடல்?


முதல் பாடல் எனும் போது என்னை வளப்படுத்திய பாடசாலையில் தான் மாணவ மன்றங்களிலும் பாடசாலை நிகழ்வுகளிலும் பாடிய நான் முதல் சின்னத்தம்பி திரைப்படத்தில் இருந்து 'தூலியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே' என்ற பாடல் தான் பாடினேன். பாராட்டையும் பெற்றேன். படிப்பு விடையத்தில் சற்று மத்திமம்தான் பாடல் என்றால் கலக்கி விடுவேன். அதே போல் பொது விளையாட்டு மைதானத்தில் (மன்னார் ஸ்ரேடியம்) நடந்த பொது கலை நிகழ்ச்சியில் வேதம் திரைப்படத்தில் இருந்து 'கொஞ்சி கொஞ்சி பேச வரும் தமிழ் போல' பாடல் பாடினேன். அது எல்லோருக்கும் பிடித்த பாடலாக பாராட்டைப் பெற்றேன்.


ஆரம்ப கால குருக்களாக ஏணஸ் மாஸ்ரர் குரு மாஸ்ரர் இருந்தாலும் வாழ்க்கையில் சாதனை புரிந்தவர்களை உச்சம் தொட்டவர்களை ஒவ்வொருவரும் தமது வாழ்வின் முன்மாதிரியாக ஏற்றுக் கொள்வார்கள். (ரோல் மொடல்) அவ்வாறு தாங்கள்?


கலாநிதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்பேன். அவர் பல சாதனைகள், விருதுகள்; சொந்தக்காரர் 86 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர். பாடிக்கொண்டிருப்பவர். எல்லா மொழிகளிலும் இளமைத் துடிப்போடு பாடிக் கொண்டிருக்கும் கின்னஸ் சாதனை நாயகன். இவரின் சாதனைக்கு ஈடு கொடுக்க முடியாது. அவரைப்பார்த்து பிரமித்துள்ளேன். வியந்துள்ளேன். எவ்வளவு தான் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர் சொல்லும் வார்த்தை 'எல்லாம் இறைவன் தந்த வரம்' அது போல கே.ஜே.ஜேசுதாஸ் பாடகர் மிகவும் அருமையானவர். இருவரையும் எனது முன்மாதிரியாக ஏற்றுள்ளேன்.


உங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய இலங்கை கலைஞர்கள் பாடகர்கள் பற்றி?


பலர் உள்ளனர் என்னோடு தொடர்பில் உள்ளவர்களாக லக்ஸ்மன் இசைக்குழவினர், சங்கமம் இசைக்குழுவினர், வவுனியா கந்தப்பு ஜெயந்தன் இசையமைப்பாளர், சிந்துஜா, அனோஜா, அன்ரன், சுரேஸ், மொறிஸ் இன்னும் பலர் உள்ளார்கள்.


இசைப் பயணத்தில் உங்கள் மனதை வேதனைக்கு உட்படுத்திய விடயம்


என்னை நான் வளப்படுத்த பல சந்தர்ப்பங்களை தேடிய போது ஒரு முறை இசைக் குழுவில் பாடல் பாடுவதற்கு ஆயத்தமான போது என்னை தடுத்து வெளியில் அனுப்பி விட்டார்கள். மிகவும் கவலை அடைந்தேன். எனது நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். மீண்டும் முயற்சி செய்வோம் என்றனர். இன்னுமொரு முறையும் உமக்கு பாட வராது நீர் பாடி என்ன செய்யப் போகிறீர் என்ற ஏளனமான கேள்விக் கணைகளால் தாக்கப்பட்டேன். என்னை நானே தயார் படுத்தினேன். சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தினேன். முயன்றேன். பல சவால்களை எதிர் கொண்டேன். வெற்றி பெற்று வருகிறேன்.


இசைத்துறையில் இலக்கை நோக்கி பயணிக்கும் போது சோதனை கடந்தாலும் சாதனையானவை சந்தோஷ தருணம் ஏற்படும் அவ்வாறு தங்களுக்கு?


ஆம் அகில இலங்கை ரீதியில் 2012ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற போட்டியில் எல்லாப் பாகத்திலும் இருந்தும் பல போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தார்கள். அதில் நானும் பங்கு பற்றியிருந்தேன். நான் நம்பிக்கையோடு பல பாடல்களைப் பாடினேன். இறுதியாக 'சங்கீத ஜாதி முல்லை காணவில்லை' என்ற பாடலையும் நான் இயற்றிய பாடல்

'தாய்த்திருநாடே உனது
சேய்களின் மனங்களில்
சாந்தியும் தொலைந்ததடி' 

என்ற பாடலையும் பாடி முடித்த போது நடுவர்கள் சொன்னார்கள். கொஞ்சம் பொறும் என்று நானும் பொறுமையாக இருந்தேன் நினைத்தேன் 3ம் இடம் இல்லை எடுபடவில்லையா? என்று நடுவர்கள் ஒருமித்த குரலில் ஜி.எப்.சுதர்சன் 1ம் இடம் என்று சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை. மேடைக்கு அழைத்து தேசிய விருதை கையில் தந்த போது என் மனம் சிறகின்றி பறந்தது. நான் பட்ட துன்பங்கள் துயரங்கள் அவமானங்களுக்கான முற்றுப் புள்ளியாய் அதே வேளை எனது வெற்றி பாதையின் தொடக்கப் புள்ளியாய் அமைந்தது. அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.


பயிற்சியும் முயற்சியும் இல்லாமல் எழுச்சி இல்லை. அது போல பலர குரல் பயிற்சி உணவுக்கட்டுப்பாட்டு, பாடல் நுணுக்கங்கள் இன்னும் பல உள்ளன. நீங்கள் மேற்கொள்வது பற்றி?


உணவு, குரல் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் மிகவும் அவதானமாக கடைப்பிடிக்கின்றேன். பாடல்கள் எல்லாவற்றையும் எப்பொழுதும் கர்நாட்டிக், ஹிந்துஸ்தானி, வெஸ்ரன், கானா, மெலோடி, சோகப்படல்கள் எல்லா விதமான பாடல்களையும் பாடிப் பாடி பயிற்சி எடுப்பேன். இடைவிடாத பயிற்சி தான் எமது இலக்கை அடைவதற்கான வழியை அமைக்கும்.


பாடகருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் எனும் போது?

பாடகர் எனும் போது எல்லா விதமான பாடல்களையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பாடக் கூடியவராக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் கொஞ்சமாவது இசை ஞானம் இருக்க வேண்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு மற்றவர்களை மதித்தல், கலைஞர்களை ஏற்றுக கொள்ளல், பணிவு, தன்னடக்கம் உதாரணமாக 'நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்' கண்ணதாசனின் இப் பாடல் வரிகளை நினைவில் கொள்ளல் வேண்டும்.


டாக்டர், இன்ஜினியர் இன்னும் பல துறைகள் இருக்க பாடகராக வருவதற்கான காரணம் என்ன?

எங்கள் குடும்பத்தில் எல்லோரும் நன்றாகப் பாடுவார்கள். ஆனால் அவர்களின் கஸ்ரமான பொருளாதார சூழ்நிலை வளப்படுத்த முடியவில்லை. ஆனால் நான் எனது வாழ்க்கையில் முடிவு செய்தேன். எனக்கென்று ஒரு துறை இருக்க வேண்டும். அதுவும் இயல்பாகவே என்னால் ஆர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதும் என்னை ஆட்கொண்டதுமான இசைத் துறையில் பாடல்தான். என்னால் இயலுமானதும் இத்துறை நான் தெரிவு செய்ததினால் தான் என்னை மக்கள் பாடகனாக ஏற்றுக் கொண்டார்கள். பாடகனாக இருப்பதினால் தான் மன்னார் இணையம் சார்பாக நீங்களும் என்னை செவ்வி காண வந்துள்ளீர்கள். மனிதனுக்கு அடையாளம் அவனது திறமைதான். பட்டம் பதவி எல்லாம் அவனது திறமையின் அடையாளம் தான்.


கல்யாணம், சாமத்தியம், பிறந்தநாள் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளில் நீங்கள் தனிப் பாடகனாக (One Man Show ) கலை நிகழ்ச்சி வழங்குகிறீர்கள் அதுவும் இசையை இறுவட்டில் ஒலிபரப்பி அதற்கேற்றவாறு பாடுதல் (Music Track) இவ்வெண்ணம் எவ்வாறு உருவானது?


எனது அண்ணனின் நண்பன் திருமண விருந்தில் கலந்து கொண்ட போதுதான் எனது நண்பனின் தூண்டுதலின் பேரில் தான் இசையை தனியாக ஒலிபரப்பி அதற்கேற்றவாறு பாடலாம் என்று சொன்னான். அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதே போல் அங்கு இருந்தவர்களும் விடுப்பாக பாடல் பாடப்போகின்றார் என்றால் என்ன தனியொருவராக, எந்தவித இசைக் கருவிகளும் இல்லாமல் நக்கல் கிண்டல் செய்தார்கள். எனக்கும் வெறுப்பாக இருந்தது. ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வேண்டாம் என்றதும் நண்பன் இசையை ஒலிபரப்பினான். நான் பாடினேன் என்ன ஆச்சரியம் எல்லோரும் அமைதியாகவும் வியப்பாகவும் இருந்து ரசித்தார்கள். ஏற்றுக் கொண்டார்கள். பாராட்டினார்கள். அன்றிலிருந்து இன்றுவரை 500 க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கலை நிகழ்ச்சி செய்கிறேன். கனிசமான தொகையினைப் பெற்றுக்கொண்டு.

மன்னார் மாவட்டம் மட்டுமன்றி இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் கலைஞர்களுக்கு பெரிதாக கௌரவம் ஊக்கம் கொடுப்பதில்லை. பட்டங்கள் விருதுகள் வேண்டுகின்ற பொழுது பாராட்டுவார்களேயன்றி கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. கலைக்காகவே வாழும் நீங்கள் பொருளாதார சூழ்நிலையில்?


நல்லதொரு கேள்வி. பல தடைவ சிந்திப்பேன். இதெல்லாம் தேவைதானா விடடுவிடுவோமா என்றும் நினைப்பதுண்டு. பிறகு யோசிப்பேன் இவ்வளவு காலம் என்னை அர்ப்பணித்து வளர்த்த துறையை என்னை அடையாளப்படுத்திய துறையை விட்டு விட்டால் உங்களால் சாதித்தது இவ்வளவுதானா என்ற ஏளனப் பேச்சு. எனக்கும் நான் நேசிக்கின்ற கலைக்கும் வந்துவிடக் கூடாது. அதற்காகவே எவ்வளவு தான் பிரச்சினைகள் பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும் சமாளித்துக் கொண்டு எனக்கான இடத்தை பிடிப்பேன். அதற்காக முற்று முழுதாக உழைப்பேன்.

இசைத்துறையில் பாடகன் மட்டுமல்லாது வேறு துறைகளிலும் ஈடுபாடு உள்ளதா?


டான்ஸ், நகைச்சுவை, ஓரளவு பாடிப்பாடியே ஆடுவேன். ஏனைய துறைகளிலும் நாட்டம் இருந்தாலும் பாடகனாய் இருப்பதையே பெருமையாக கருதுகின்றேன்.


 பாடல் பாடிக்கொண்டு இருக்கும் நீங்கள் இதுவரை இசை அல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளீர்களா.. வெளியிடும் எண்ணம் உள்ளதா?


எண்ணம் உள்ளது. ஆசையும் தான். அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறேன்.
ஆனாலும் பொருளாதார பிரச்சினை தொடர்கிறது. தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளேன். ஆனாலும் அல்பங்களில் பாடியுள்ளேன்.
'கனவு எனும் அல்பத்தில் - என் அம்மா' என்ற பாடலும் உருகிடவா எனும் அல்பத்தில் - 'தாய்க்கு நிகர் ஏதுடா' என்ற பாடலும் பாடியுள்ளேன். மிக விரைவில் சொந்தமான அல்பம் ஒன்றை வெளியிடுவேன்.


மன்னாரைப் பொறுத்தமட்டில் அல்பங்கள், இசைக்குழுக்கள் இசை நிகழ்ச்சிகள் மூலமும் கலைஞர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?

எங்களுக்குள் எந்தவிதமான வேறுபாடு வேற்றுமையுணர்வும் இல்லை. எல்லோரும் நன்றாய் பாடுகிறார்கள். நானும் அவர்களோடு நன்றாகப் பழுகுகிறேன்.



இதுவரை விருதுகள் வேண்டி விட்டேன். இது போதாது. இவரைப் போல் வர வேண்டும் என்று எண்ணம் ஏதாவது உள்ளதா?

இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போல் எங்களால் வரமுடியாது. அவர் சமுத்திரம். நான் சிறு துளி. இன்னும் என்னை வளப்படுத்தி நல்லா வர வேண்டும். அவரை மாதிரி இவரை மாதிரி என்றில்லாமல் நான் நானாக என்னை அடையாளப்படுத்தவே விரும்புகிறேன்.


உங்கள் எதிர்கால கனவு என்று ஏதும் உள்ளதா?

நிச்சயமாக உள்ளது. பின்னணிப் பாடகராகப் பாட வேண்டும். பல இசையமைப்பாளர்களின் இசையில் பாட வேண்டும். ஒரு முறையேனும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை நேரில் காண வேண்டும். கனவு நாயகர்களாக இசைத் துறையில் இசை ஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடகர்களான கலாநிதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம்., கே.ஜே.ஜேசுதாஸ் இவர்களின் இசையினையும் பாடலினையும் கேட்டு கேட்டு எனது பாடல் திறமையினையும் அவர்களின் பணிவு தன்னடக்கம் போன்றவற்றையும் பார்த்து என்னை வளப்படுத்திக் கொண்டேன்.


நீங்கள் அதிகம் நேசிப்பவர்கள் பற்றி?

(Best friend) எனது இசைத்துறை வளர்ச்சியில் எல்லா விதமாகவும் உறுதுணையாகவும் உந்து சக்தியாகவும் உள்ள உற்ற நண்பன். கணினித் துறையில் பிரகாசிக்கும் ப்பிராங்ளின் தான் எனது அருமை நண்பன். அத்தோடு எனது தாய் தந்தையர் சகோதரன் ஏனைய நண்பர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக என்னை ஏற்றுக் கொண்ட மக்கள். அத்தோடு எனக்கு பாடல் பாடும் வரத்தை தந்த எல்லாம் வல்ல இறைவன் அவர் இன்றி அணுவும் அசையாது. இசையில்லாமல் என் வாழ்வு ஏது?



 எல்லாப் பாடல்களும் இலகுவாக பாட முடிகிறதாஉங்கள் நிகழ்ச்சிகளில் சிரமம் ஏற்பட்டதுண்டா?

சிரமம் இல்லை. இலகுவில் பாடி விடுவேன். நீங்கள் கேட்டது போல் ஒரு கல்யாண வைபவத்தில் இடைக்கால பாடல் பாடிக் கொண்டு இருந்தேன்.

'காதல் ரோஜாவே கண்ணே நீ எங்கே' என்ன சோகப் பாடல் பாடுகிறீர்கள் ஒரு குத்துப் பாட்டுப் பாடுங்கள் என்றார். அவரின் விருப்பப்படி ' துள்ளுவதோ இளமை' பாடலைப் பாடினேன். மாப்பிள்ளை தந்தையார் வந்து தம்பி பழைய பாடல் பாடுவீர்களா என்று கேட்டார். சொல்லுங்கள் பாடுகிறேன் என்றேன். அவரின் விருப்பப்பாடலான 'பாவடை தாவணியில் பார்த்த ரூபமா' பாடலும் சீனிவாஸ் அவர்கள் பாடிய 'காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்' என்ற பாடலை பாடினேன். மீண்டும் மீண்டும் பாட வேண்டியதாயிற்று. மகிழ்ச்சி தான் எனக்கும். இடத்திற்கு ஏற்றாப் போல் மாற வேண்டும்.


புதிதாக இத்துறையில் கால்பதிக்கவிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தேசிய விருது பெற்ற பாடகன் என்ற வகையில் தங்களின் ஆலோசனை என்ன?


உங்களிடம் இருக்கும் திறமையினை முதலில் இனங்கண்டு கொள்ள வேண்டும். இடைவிடாத பயிற்சியும் முயற்சியும் அத்துறையில் எழுச்சி பற்றியசிந்தனையும் இலக்கை நோக்கியே பயணம் செய்ய வேண்டும். மற்றவர்களின் குறை நிறைகளை காதில் வாங்கி கலங்காமல் எமது முயற்சியிலே கண்ணாக இருக்க வேண்டும் காலம் கைகூடும் வரை


இசைத் துறையில் நீங்கள் பெற்ற விருதுகள் பற்றி?


இளைஞர் விருது 2008 பாடல் இயற்றல் 1ம் இடம்
இளைஞர் விருது 2008 இளம் பாடகர் 1ம் இடம்
இளைஞர் விருது 2009 பாடல் இயற்றல் 2ம் இடம்
இளைஞர் விருது 2010 இளம் பாடகர் 1ம் இடம்
இளைஞர் தேசிய விருது 2010 இளம் பாடகர் 1ம் இடம்
இளைஞர் விருது 2012 இளம் பாடகர் 1ம் இடம்
ஆர்.பீ.ஆர் கலாசாரப் பாடல் போட்டியில் 1ம் இடம்

மேலும் பல பொற்கிளிகளும் சான்றிதழ்களும் பொன்னாடையும் போர்த்தி கௌரவித்துள்ளார்கள்.

இசைத் துறையில் வேறு ஏதும் திட்டம் உள்ளதா?


நிச்சயமாக எனது தலைமையில் இசைக் குழுவொன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நண்பர்களிடம் சொன்ன போது இப்போதைக்கு அவசரப்படவேண்டாம். பொறுமையாக மேற்கொள்வோம் என்றார்கள். பொறுமையாக இருக்கிறேன். இசைக் குழுவும் தயாராகிக் கொண்டு இருக்கின்றது.


மன்னார் இணையம் பற்றி தங்களின் பகிர்வு?


நிச்சயமாக வரவேற்கத்தக்க பாராட்டுக்குரியதொரு செயல். நான் எதிர்பார்க்கவில்லை. இப்படியானதொரு சேவை எம்மைப் போன்ற கலைஞர்களுக்கு தேவை. கலைஞர்களை இனங்கண்டு அவர்களின் திரை மறைவாக இருக்கும் திறமைகளை இணையத்தின் மூலம் வெளிக் கொணர்வது மிகவும் கடினமான செயல். இன்னும் இன்னும் உங்கள் சேவை தொடர உங்கள் இணைய நிர்வாகிக்கும் உங்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக. எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்திக்கின்றேன்.

சந்திப்பும் சிந்திப்பும்
வை.கஜேந்திரன்.










பாடலாசிரியர் இளம் பாடகர், இசைக் கலைஞர் ஜி.எப்.சுதர்சன் அவர்களின் அகத்திலிருந்து Reviewed by NEWMANNAR on July 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.