அண்மைய செய்திகள்

recent
-

படுகொலைகள், காணி அபகரிப்பு, சதி முயற்சி விசாரணைக்கு விசேட குழுக்கள்


கடந்த ஆட்சியில் இடம்பெற்ற படுகொலைகள், காணி அபகரிப்பு மற்றும் தேர்தல் இறுதிக் கட்டத்தில் ஆட்சியை தக்கவைக்க எடுக்கப்பட்ட சதி முயற்சி உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விசேட குழுக்களை அமைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தேசிய நிறைவேற்று சபை நேற்று தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் பிரதான அம்சமான தேசிய நிறைவேற்றுச் சபையின் முதலாவது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இந்த நிறைவேற்றுசபையின் முதலாவது கூட்டம் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிறைவேற்று சபைக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஆர்.சம்பந்தன், மனோகணேசன், அநுரகுமார திஸாநாயக்க, ராஜித சேனாரட்ன, ரிசாத் பதியுதீன், அத்துரலியே ரத்ன தேரோ, சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறுபட்ட சம்பவங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டதோடு அவற்றை படிப்படியாக வெவ்வேறாக ஆராய்வதற்கு முடிவு செய்யப்பட்டதோடு முக்கிய சில விடயங்கள் தொடர்பில் விசேட குழுக்களை அமைத்து விசாரணைகளை முன்னெடுப்பதென முடிவு காணப்பட்டது.

இந்த விசேட குழுக்களில் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், பொலிஸ் துறை சார்ந்தோர் உட்பட சட்டவல்லுநர்களை உள்வாங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக ஏழு விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, அரசியல்வாதிகளான நடராஜா, ரவிராஜ் ,பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரபல்யமானவர்களின் படுகொலைகள் குறித்தும்,

வடக்கு, கிழக்கில் யுத்தத்துக்குப் பின்னர் அந்த மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட தங்க நகைகள், வாகனங்கள், சொத்துகள், காணிகள், பணம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும்,

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாகவும் கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய பொருளாதாரக் கொள்கை மற்றும் ஊழல், மோசடிகள் குறித்தும்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அன்றைய அரசு தரப்பால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமாக அரசு வளங்களைப் பயன்படுத்தல், அரசு ஊழியர்களை பயன்படுத்தியமை குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதிவளங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பாகவும்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நாயகத்தை நியமித்தமை குறித்தும்

தேர்தல் தினத்தன்று ஆட்சியை சட்டவிரோதமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கான திட்டமிடப்பட்ட சதிமுயற்சி தொடர்பாகவும்

இந்தக்குழுக்கள் தனித்தனியாக ஆராயவுள்ளன.

இந்த விசேடக் குழுக்கள் அடுத்த இரண்டொரு தினங்களுக்கிடையில் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் குறுகிய காலத்துக்குள் விசாரணைகள் முடிக்கப்பட வேண்டியதால் குழுக்களின் விசாரணைகளை துரிதப்படுத்துவதெனவும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

படுகொலைகள், காணி அபகரிப்பு, சதி முயற்சி விசாரணைக்கு விசேட குழுக்கள் Reviewed by NEWMANNAR on January 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.