Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

-

சம்பந்தனை கோபமடையச் செய்த அமைச்சர்! சபையில் ரணில் முன்னிலையில் வாக்கு வாதம்....


எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடும் கோபமடைய வைத்துள்ளார் என சம்பந்தனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான் மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக மேற்கொள்ளப்படும் புதிய அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுடன், அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் சொல்வது போன்று அவ்வாறு அமைப்பது யதார்த்த்தம் அல்ல என்று பதில் அளித்துள்ளார். இந்தப் பதில் சம்பந்தனை கடுமையாக கோபமடைய வைத்தாகவும், இதனால் அமைச்சருக்கும் சம்பந்தனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சொற்களுக்கு சண்டையிடாமல் இன்றைய கால கட்டத்தில் அரசியலமைப்பு நகர்வினை வெற்றிகரமாக மேற்கொண்டு செல்வதே சிறப்பான செயல் என்றும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியலமைப்பினை மாற்றும் செயல் திட்டத்தினை அனைத்துலக சமூகம் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவிக்க, அதற்கு நிமல் சிறிபால டி சில்வா, அனைத்துலக சமூகத்தின் விருப்பத்துக்கேற்றவாறு செயற்படுவதற்கு தாம் ஆணை பெற்றிருக்கவில்லை என்று திருப்பி பதில் அளித்தார்.

இந்தப் பதிலால் மேலும் அவையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் மூழ்கியது தென் மாகாணம் - உயிரிழப்பு 127 ஆக அதிகரிப்பு- 97 பேரை காணவில்லை


நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரையில் 122 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் பிந்திய தகவலின் படி 127 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்புக்களில் இன்னும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாக இதுவரை 150 பேர் காணாமல் போயுள்ளனர். மாவட்ட செயலாளர்களின் தகவல்களுக்கு அமைய இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும்அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கமைய 49 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த அனர்த்தம் காரணமாக 105956 குடும்பத்தை சேர்ந்த 415618 பேர் இடம்பெயர்ந்துள்ளாதாகவும் குறிப்பிடப்படுகின்றது.அத்துடன் 1602 வீடுகள் பகுதியாகவும் 187 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்று இரவு 9 மணியவில் வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

14 மாவட்டங்களில் மக்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த 14 மாவட்டங்களிலும், வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக 51 ஆயிரத்து 899 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இரண்டாயிரத்து 937 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 69 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 47 பேர் பலியானதுடன், 4 ஆயிரத்து 815 குடும்பங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 31 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேற்படி மாவட்டத்தில் 44 மத்திய நிலையங்களில் பாதிக்கப்பட்ட 1194 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 844 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, பதுல்பான, கிரியெல்ல, இறக்குவானை, எஹலியகொட, குருவிட்ட, நிவித்திகல, எலபாத்த, கலவான,அயகம, ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மழை குறைவடைந்துள்ள போதிலும் வெள்ள நீரின் அளவு குறைவடையவில்லை என வடிகாலமைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வெள்ள நீரின் அதிகரிப்பு காரணமாக பல கங்கைகள் உடைப்பெடுத்துள்ளன. இதன்காரணமாக பல கிராமங்களில் நீரில் மூழ்கி மாயான தேசமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக பல மக்களை மீட்க முடியாமல் மீட்பு பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.

தொடர்ந்தும் அடைமழை பெய்யுமாயின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தவறான சிந்தனையை மாற்றினால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் - விக்கி


இனங்களுக்கு இடையில் காணப்படும் தவறான சிந்தனைகளை மாற்றினால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையே காணப்படும் வேற்றுமை உணர்வுகளும், சச்சரவுகளும் அரசியல்வாதிகளாலும் பிற்போக்கு சிந்தனையாளர்களாலும் விதைக்கப்பட்ட ஒரு நச்சு விதையெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணை வழியாக இந்தியாவின் கோடிக் கரையை கடந்து கின்னஸ் சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நீச்சல் தடாகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதுஇந்த நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இனங்களுக்கு இடையில் காணப்படும் வேற்றுமை உணர்வினை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமாரசாமி விவேகானந்தனுக்கும் இராஜரத்தினம் மாள் விவேகானந்தனுக்கும் சிரேஷ்ட புதல்வனாக 1943-ம் ஆண்டில் வல்வெட்டித்துறை மாநகரில் அவதரித்த ஆனந்தன் அவர்கள் சிறுவயதில் இருந்தே எந்தவொரு காரியத்தை முன்னெடுத்தாலும் அதில் வெற்றிபெற வேண்டும் அதன் மூலம் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயற்பட்டார்.
கின்னஸ் புத்தகத்தில் குறைந்தது பத்து பதிவுகளையாவது உட்புகுத்த வேண்டும் என்பது அவரின் இளவயது கனவாக இருந்தது. 

இவர் சிறுவயதில் இருந்தே கடலில் நீச்சல் அடிப்பதில் வல்லவராக இருந்தார்.அத்துடன் கல்வியிலும் சிறப்புறப்பயின்று இலண்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமாணிப் பட்டம் பெற்று அதன்பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமாணிப்பட்டம் பெற்று சட்டத்தரணியாக சித்திபெற்று சிறிது காலம் சட்டத்தரணியாக பணியாற்றிய போதும் அத்துறையில் நாட்டம் இல்லாத காரணத்தினால் அதனைக் கைவிட்டுவிட்டு வணிகத்துறையில் கால் பதித்தார்.

1971-ல் வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணை வழியாக இந்தியாவில் இருக்கும் கோடிக்கரை எனும் ஊரிற்கு அவர்நீந்திக் கரை சேர்ந்தார். இவருக்கு முன் இதே ரேவடி கடற்கரையில் இருந்து 1954-ம் ஆண்டில் அமரர் நவரத்தினசுவாமி அவர்கள் பாக்கு நீரிணையை முதன் முதலாக நீந்திக் கடந்து சாதனை படைத்திருந்தார்.

ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்கள் 20 இற்கும் மேற்பட்ட சாதனைகளை புரிந்த போதும் அவற்றில் 07 சாதனைகள் மட்டுமே கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. எனினும் முதலாவது சாதனையாக 1963ல் வல்வெட்டித்துறையில் இருந்து கோடிக்கரை வரை நீந்திக்கடந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நீரில் மூழ்கும் அபாய கட்டத்தில் இலங்கை பாராளுமன்றம்....


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பாராளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தியவன்னா ஓயவின் நீர் பாராளுமன்றத்தை மூடினால் அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மணல் மூட்டைகள் கொண்டு அதனை சுற்றி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறான அபாய நிலை ஏற்படும் பட்சத்தில் அதனை தடுக்க கடற்படையினர் உட்பட பாதுகாப்பு பிரிவினர் தயார் நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை யாருடைய தேசம்! ”இலங்கையில் சிங்களவர்“ நூல் கூறும் செய்தி என்ன?


இலங்கை யாருடைய தேசம்? சிங்களவருடையதா? தமிழருடையதா? இந்தக் கேள்விகள்தான் அரை நூற்றாண்டு காலத் தமிழினப் படுகொலைகளுக்குக் காரணம்.

சிங்களவருடையது தான்’ என்றோ, ‘தமிழருடையது தான்’ என்றோ இறுதியாகவும் உறுதியாகவும் சொல்லிவிட முடியாது என்பதையே இவர் திரட்டியிருக்கும் பல்வேறு ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

சிங்களவர்கள் இந்திய இனத் தொடர்ச்சி கொண்டவர்கள் என்பது பலரும் அறிந்ததே.

ஆனால், ‘மரபணு ரீதியான நெருக்கம் தமிழர்களுடன்தான் அதிகம்’ என்றும், ‘அவர்கள் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சி கொண்டவர்கள்’ என்றும் பக்தவத்சல பாரதி சொல்கிறார்.

தமிழகம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மானுடவியல் துறையில் இருக்கிறார்.

தமிழர் மானுடவியல், திராவிட மானுடவியல், தமிழகத்தில் நாடோடிகள் எனப் பல செறிவான ஆய்வுகளைச் செய்து புத்தகங்களாக ஆக்கியவர்.

இதன் மூலமாகத் தென்னிந்தியப் பண்பாட்டை மீட்டெடுக்கும் செயலை விரிவாகச் செய்து வருபவர் பக்தவத்சல பாரதி.

அவரது அடுத்த படைப்புதான், ‘இலங்கையில் சிங்களவர்’. ‘இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும்’ என்ற துணைத் தலைப்பில் இது வெளியிடப்பட்டுள்ளது.

நம்முடைய கண்ணகி, சிங்களவர்களுக்குப் பத்தினி தெய்யோ.

நம்முடைய முருகன், சிங்களவர்களுக்கு கதரகமத் தெய்யோ.


இதைச் சொல்லும் இவர், திராவிட உறவு முறைகள், தென்னிந்திய மரபுகள், இந்தியச் சாதி முறைகள், ஆரிய மண முறைகள், தமிழ்ப் பெளத்தம், சிங்களப் பெளத்தம், தமிழ் மரபு, சிங்கள இனம்... ஆகியவற்றின் வழியாக தன்னுடைய ஆய்வை மேற்கொள்கிறார்.

சிங்களவருக்கும் தமிழருக்கும் நடந்த பண்பாட்டு உரையாடலை விளக்குகிறார்.

உண்மையில் சிங்களவர்கள் தென்னாசியச் சூழலில் மிகவும் வித்தியாசமானவர்கள். இவர்கள் இனத்துவத்தால் சிங்களவர்கள். மொழியால் இந்தோ ஆரிய மொழி பேசுபவர்கள்.

மதத்தால் பெளத்தர்கள். பண்பாட்டால் தென்னிந்தியர்கள் என்று சொல்கிறார் பக்தவத்சல பாரதி.

இறுதியாகக் கூறப்பட்ட கருத்து பலருக்குப் புதிராக இருக்கக் கூடும் என்பதும் அவரது எதிர்பார்ப்பு.

சிங்களவர்கள் தென்னிந்தியா வழியாகக் கடந்து இலங்கையில் குடியேறியது ஒருநாளில் நடந்தது அல்ல, அது ஒரு நீண்ட கால கட்டம்’ என்றும் சொல்கிறார்.

இன்றைய சிங்கள இன வாதமும் மானுடவியல் கோட் பாடுகளும் வேறுவேறாக இருக்கின்றன. இது சிங்களவர்கள் மட்டுமல்ல, தமிழர்களும் அதிர்ச்சியுடன் நோக்கும் புத்தகமாக இருக்கிறது.

இயற்கையின் கோர தாண்டவம்...100க்கு மேற்பட்டோர் பலி - 100 பேர் மாயம் - 230 பேர் காயம்


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேவேளை 230 பேர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் , 53000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது மழையுடன் கூடிய காலநிலை குறைவடைந்துள்ள போதும், மத்திய மலைநாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால், அங்கிருந்து வரும் வெள்ளம் காரணமாக களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாய கட்டத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏழு மாவட்டங்களில் அரசாங்கத்தினால் அனர்த்த நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தை விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.

தற்சமயம் நிலவும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று நிவாரணம் வழங்குவது பிரதான பணியாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள், முப்படையினர், பொலிஸார் இதற்காக இணைந்து செயற்படுகிறார்கள்.

இரத்தினபுரி, காலி, மாத்தறை, கேக்காலை, களுத்துறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காலி மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மாத்தறை மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கண்டி மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவிலும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை குறைவடைந்தாலும் இரவு நேரத்தில் மீண்டும் மழை பெய்யலாம். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளும் உணவு, மருந்து வகைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் 450 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

அவசர அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிப்பதற்கு 24 மணித்தியால சேவையான 1902 என்ற இலக்கத்திற்கு எந்த இணைப்பிலிருந்தும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கின்னஸ் புத்தகத்தில் பத்து சாதனைகளைப் படைப்பதே கனவாக இருந்துள்ளது! விக்னேஸ்வரன்...


கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் குறைந்தது பத்து சாதனைகளையாவது உள் புகுந்த வேண்டும் என்பதே ஆழி குமார் ஆனந்தனின் இளவயது கனவாக இருந்துள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை குமரன் நினைவாக யாழ். வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று காலை நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பெருக்கெடுத்தது வெள்ளம்! தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீரில் மூழ்கியது...


தெற்கு அதிவேகப் பாதையின் மூன்று நுழைவாயில்கள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை தொடக்கம் மாத்தறையின் கொக்மாதுவை நுழைவாயில், களுத்துறையின் வெலிப்பென்ன நுழைவாயில் என்பன வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் வெள்ளி மாலை தொடக்கம் கடுவலை நுழைவாயில் பகுதியையும் வெள்ளம் மூழ்கடித்து, அதிவேகப் பாதைக்கு வாகனங்கள் உட்பிரவேசிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.


எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழிகள் ஊடாக அதிவேகப் பாதைக்கு உட்பிரவேசிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


சீரற்ற காலநிலை ; மக்களே அவதானம்..! 91 பேர் பலி , 110 பேர் காணவில்லை : மரணமானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 110 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை 16 ஆயிரத்து 759 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 285 குடும்பங்களைச் சேர்ந்த 2042 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

இயற்கை அனர்த்தத்தில் 17 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 482 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே மரணமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மண்சரிவுகளில் சிக்கி காணாமல் போன நபர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்! ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு...


இலங்கையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மந்த நிலைமையில் அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்க் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக, இலகுவாக நியமிக்கப்படக்கூடிய காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் கூட இன்னும் நியமிக்கப்படாமல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் அது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்க் இதனைத் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு விடயங்கள் செயற்படுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் பௌசியிடம் கூறியதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவற்றை அரசாங்கம் துரித கதியில் செய்து முடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நல்லாட்சியில் வடக்கு, கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு: 3 ஆயிரம் ஏக்கரை விடுவிக்க நடவடிக்கை என்கிறது அரசு


நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 5ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளதாகவும், மேலும் 3ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் சபை உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து காணி அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக பதில் அளித்தார்.

பின்னர், காணிப்பிரச்சினை குறித்து மேலும் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட காணிப் பிரச்சினை தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக, "திருகோணமலை மாவட்டத்தில் புலியங்குளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள செல்வநாயபுறம், ஆனந்தபுரி, தேவநகர், நித்தியபுரி, லிங்க நகர் ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

2017 பெப்ரவரி 26ஆம் திகதி செல்வநாயக புறத்தில் காணிக்கச்சேரியொன்றை நடத்தியிருந்தோம்.

அதில் 46 பேர் கலந்துகொண்டதுடன், காணிகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள மாகாண காணி ஆணையாளருக்கு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தபுரி கிராமத்தில் 55 ஏக்கர் காணியும், நித்தியபுரி கிராமத்தில் 35 ஏக்கர் காணியும் அபகரிக்கப்படவுள்ளது. அதற்கான கட்டளைகளை முறையே காணி அபகரிப்புச் சட்டத்தின் 4ஆம், 2ஆம் உரிப்புரைகளுக்கு அமைய பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

அதுதவிர, தேவநகர், நல்லூர் ஆகியவற்றுக்கு எதிர்காலத்தில் காணிக் கச்சேரிகளை நடத்தி அப்பிரதேச மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

அதுதவிர, நாளை (இன்று) நான் காணி அமைச்சராகக் கடமை ஏற்கவுள்ளேன். பின்னர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது ஆலோசனைக்கு அமைய எமது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்த இலட்சக்கணக்கானவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் தேசிய செயற்திட்டத்தை விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் கருத்துத் தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, "அமைச்சர் சுவாமிநாதனிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 3 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த நாளும் இது தொடர்பில் கேள்வி எழுப்புவது எமக்குப் பிரச்சினை இல்லை எனவும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்களின் தகவல்கள் எங்களிடம் இல்லை: அரசாங்கம்


போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் சொத்துக்கள் தொடர்பான எந்த விபரங்களும் எங்களிடம் இல்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது, யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மக்களின் சொத்துக்கள் எங்கேனும் வைப்பீடு செய்யப்பட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரின் இந்தக் கேள்விக்கு பதில் அளித்த சுவாமிநாதன்,

நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் பின்னர், வடக்கு கிழக்கு மக்கள் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்ட மக்களின் சொத்துக்கள் குறித்து எந்தவிதமான தகவல்களும் எங்களிடத்தே இல்லை.

இதேவேளை, வடக்கில் குறிப்பாக முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பின்னர் அகதிகளாக வெளியேறியவர்கள் வவுனியாவில் தான் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டவர்களின் நகைகள், சொத்துக்கள் போன்ற எந்தவிதமான தகவல்களும் வவுனியா பிரதேச செயலகத்திலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை! மௌனமான பாராளுமன்றம்....


சிங்கக்கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் அடையாளங்கள் அகற்றப்பட்டதைப் போல, புலிக்கொடிகளில் விடுதலைப்புலிகள் என்ற வாசகத்தை நீக்கிவிட்டு புலிக்கொடியை பறக்க விடுவதில் என்ன தவறு? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வின்போதே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த வாரம் கிளிநொச்சியில் பிரதான வீதியில் உள்ள மின்கம்பங்களில் சிங்கக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

சிங்கக்கொடிகள் பறக்க விடுவதற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் பறக்கவிட்ட சிங்கக்கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் அடையாளங்கள் இருக்கவில்லை.

சிறுபான்மையினரை விலக்கிவிட்டு தனி பெரும்பான்மையை குறிக்கும் கொடியே பறக்கவிடப்பட்டது. இதை கிளிநொச்சி பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இவ்வாறு இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களை புறக்கணித்து பிரிவினையை மையமாக வைத்த சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு சிலர் செயற்படும் போது, தமிழர்களும் புலிக்கொடிகளில் விடுதலைப்புலிகள் என்ற வாசகத்தை நீக்கிவிட்டு ஏற்றுவதில் என்ன தவறு இருக்கின்றது என கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறான செயற்பாடுகளை தடுக்காமலும், தமிழ் மக்களுக்கான சமத்துவம் வழங்கப்படாத நிலையிலும் எவ்வாறு ஏனைய விடயங்களை நாம் எதிர்பார்க்க முடியும் எனவும் நாடாளுமன்றில் சி.சிறீதரன் தெரிவித்திருந்தார்.

வழமையாக இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போது பாராளுமன்றத்தில் கூச்சல்கள் மற்றும் குழப்பங்கள் எழுப்பப்படுகின்ற நிலையில், நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழுத்தமாக இந்த கருத்தை முன்வைத்த போது சபை அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் புலி வாகனத்தில் அம்மன்! அலங்காரத்தில் தமிழீழ வரைபடம்!


யாழ்ப்பாணம் - திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தில் உற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் காணப்பட்டுள்ளது.

அம்மனின் புலி வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 3 ஆம் நாள் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.

இதன்போது அம்மன் தானது புலி வாகனத்தில் எழுந்தருளி வரும் போது அம்மனுக்குப் பின்னால் பூக்களாலும் அலங்காரப் பொருட்களாலும் உருவாக்கப்பட்ட தமிழீழ வரைபடம் காணப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த இளைஞரை கோப்பாய் போலிஸ் நிலையத்திற்கு நேற்று அழைத்துச் சென்று யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை...


வடக்கு மாகாணத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தட்டான்குளம் பகுதியில் கூடுதலான நோயளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதே போன்றதொரு நிலைமைதான் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணப்படுகின்றது. குறிப்பாக இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

துணுக்காய் மல்லாவி பிரதேச செயலாளர் பிரிவும் மற்றும் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இருக்கிறார்கள்.

இந்த நோய்க்கு மக்கள் குடிநீராக பாவிக்கும் நீர் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனால் வடக்கு மாகாணத்தில் இரண்டு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாவது சிறு நீரக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அந்த திட்டத்தின் அடிப்படையில் கடந்த மூன்று வருடங்களளாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கு நடமாடும் சேவை மூலம் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம்.

அந்த வகையில் செட்டிக்குளம் பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையில் 9 சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.


அத்துடன், வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கான தொடர் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஒன்றரை வருடங்களாக இயங்கி வருவதுடன் இந்த சேவையானது 24 மணித்தியாலங்கள் தொடர்சியாக இயங்கி வருகின்றது.எட்டு இயந்திரங்களின் உதவியுடன் 70 சிறுநீரக நோயாளர்கள் தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலயைில், வவுனியா சிறுநீரக சிகிச்சைப் பிரிவிற்கு மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பதவியா மற்றும் மதவாச்சி பிரதேசங்களிலிருந்து சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள்.

அதன் காரணமாக இப்போது இருக்கின்ற சிறு நீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை வைத்து நோயாளர்களை பராமரிக்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.

அதனால் செட்டிக்குளத்தில் வெகு விரைவில் 25 மில்லியன் ரூபா செலவில் சிறுநீரக நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் பிரிவையும், மாமடுவில் ஒரு சிறுநீரக மருத்துவப் பிரிவையும் உருவாக்கியிருக்கிறோம்.

வவுனியாவிற்கு ஒரு வைத்தியக் குழுவும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு வைத்தியக் குழுவும் உருவாக்கி செயல்பட்டு வருகிறார்கள்.

மேலும், சிறுநீரக நோய் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.


தீர்வைப் பெற முடியாத த.தே.கூ; சுமந்திரனின் செயலுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்....


பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாத கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் யாழ். வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சொந்தம் கொண்டாடியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பினர் பொய்களைக் கூறி எமது மக்களுக்குத் தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அவர்களை நம்ப வைத்த காரணத்தால் இன்று அவர்கள் நடுத்தெருவில் நின்று நீதிகோரி போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கில் வேலையற்ற பட்டதாரிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கிலும் வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

எமது மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து இராணுவம் அந்தக் காணிகளில் சொகுசு வாழ்க்கை வாழ் ந்து வரும் நிலையில் காணிகளின் சொந்தக்காரர்கள் இடம்பெயர்ந்து தற்காலிக குடிசைகளிலும், நலன்புரி முகாம்களிலும் வாழ்ந்து வரும் நிலையில் அந்த மக்களும் தொடர்ச் சியாக இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள்.

அது மாத்திரமல்லாமல் தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம் மக்கள் இனவாதிகளால் தாக்குதலுக்குள்ளாகி வருகிறார்கள். இவ்வாறான சூழலில்தான் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதமரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் எமது மக்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக கூறித்தான் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தலைமையிலான த.தே.கூட்டமை ப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு நிபந்த னையில்லாத ஆதரவை வழங்கினர்.

இவ்வாறான ஆதரவு மூலம் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என அவர்கள் அப்போது தெரிவித்திருந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 06ஆம் திகதி நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற பகிரங்க விவாதமொன்றில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவர் எனவும், அதற்கான வாக்குறுதி தங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இன்றுவரை தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. எமது மக்களுக்கான பொறுப்புக்கூறலிலிருந்து த.தே. கூட்டமைப்பினர் தப்பித்துவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், த.தே.கூட்டமைப்பினரின் ஏமாற்று வேலைகளுக்கு இனியும் எமது மக்கள் துணைபோக மாட்டார்கள் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.  

வடக்கில் தொண்டர் ஆசிரியர் நியமனம்!!


வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்களுக்கான நேர்முகத் தேர்வு அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெற்று, ஜூலை மாதம் நியமனம் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தொண்டர்களாகப் பணியாற்றும் ஆசிரியர்களை நிரந்தரமாக்கும் முயற்சிகளை மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்டிருந்தது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இரு முறைகள் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தது. தற்போது மட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டிற்கு முன்பு 3 வருடத்தினை சேவைக்காலம் கொண்ட ஆசிரியர்களை மட்டுமே உள்வாங்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நியமனம் வழங்கிய காலத்தில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த 67 பேரும் உரிய கல்வித் தகமையினைக் கொண்டிருப்பின் அவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

2013 ஆம் ஆண்டிற்கு முன்னராக சேவைக்காலம், தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளிற்கு மேற்படாது சேவையாற்றியவர்களாக இருத்தல் வேண்டும். இவ்வாறான தேர்வுகளின் பிரகாரம் இன்று வரையில் பாடசாலைகளில் பணியாற்றுபவர்களாகவும் இருத்தல் வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்கள் பரீட்சிக்கப்பட்டு அதில் உள்ள தகமைகளையும், காலத்தினையும் தகுதியினையும் கொண்டவர்களிற்கு நியமனத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வட மாகாணத்தில் உள்ள தொண்டராசிரியர்களிடம் ஒப்பந்த ஆசிரியர்கள் சிலரும் இதில் உள்ளடங்குவதாகவும் இவர்களில் 645 பேரே மேற்படி தகமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நிலையில் இருப்பதாக கொழும்பு கல்வி அமைச்சின் பரிந்துரையில் சிபார்சு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் அடுத்த மாதம் இதற்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளது.சிங்கள இளைஞர்கள் ஆவேசம்! எது வேண்டுமானாலும் நடக்கலாம் என எச்சரிக்கை...


சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஆவேசமாக இருக்கின்றனர். இனிமேல் என்ன நடக்கும் என்பது தெரியாது என பொதுபல சேனாவின் ஜபுரேவல சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் நேற்று இடம் பெற்ற ஊர்வலத்தின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் பௌத்தம் அழிந்து கொண்டு வருவதாக ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனினும் அதற்காக கருத்து தெரிவிக்கும் எம்மை இனவாதிகளாக சித்தரித்து விட்டார்கள்.

மேலும், வடக்கில் விக்னேஸ்வரன் தனி ஈழத்தினை இலங்கை வரைபடத்தில் அமைத்துக் கொண்டு வெற்றியை கொண்டாடுகின்றார், விஜயகலா பிரிவினைவாதக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றார்.

சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்து கொண்டு வருகின்றார், அசாத்சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் உட்பட பலரும் இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதற்கு எதிராக நாட்டின் நீதி செயற்படவில்லை. ஆனால் ஞானசார தேரர் பௌத்தத்திற்காக கருத்து வெளியிடும் போது அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இந்த சமயத்தில் நாம் ஒன்றைக் கூறிக்கொள்கின்றோம் இனி நாம் எதனையும் பேச மாட்டோம். ஆனால் நாம் நாட்டில் இனவாதம் பரப்பும் அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளோம்.

அவர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும். அவ்வாறு கைது செய்தால் ஞானசாரர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். அதனைச் செய்யாது இதே வகையில் பிரச்சினை தொடருமானால் அதனால் விளைவுகள் பாதகமாக அமையும்.

சிங்கள இளைஞர்கள் மிகுந்த ஆவேசத்தில் உள்ளார்கள் அதன் காரணமாக அடுத்தது எது வேண்டுமானாலும் நடக்கலாம். என்ன நடக்கும் என்பது எமக்கு தெரியாது என பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கின்றோம் எனவும் சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு.....


வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வடக்கு முதலமைச்சர் கனவு காண்கிறார். விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அவரது எதிர்பார்ப்புக்கள் எதுவும் நிறைவேற மாட்டாது.

வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனின் தாளத்துக்கு ஆடுவதற்கு நாம் தயாரில்லையெனவும், அவர் கூறும் விதத்தில் வடக்கிலிருந்து இராணுவத்தை மீளழைப்பதற்கு ஒரு போதும் முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சொல்கிறார் இவர்...அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா .

இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு காலம் தாழ்த்துவது ஏன்?- சீமான் ஆவேசம்...


தமிழர்களை கொன்ற தமிழர்களை கொன்ற இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார்.

ஈழத்துப் போரில் பலியானவர்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் தினம் மே 18ம் தேதி அன்று பாம்பனில் நாம் தமிழர் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.

இன எழுச்சிப் பொதுக் கூட்டமாக அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது:

தமிழ் தேசிய இனத்தின் துயர நாளாக மே 18 திகழ்கிறது. 8 வருடங்களுக்கு முன்னர், இதே நாளில்தான் தன் சொந்த இனம் அழிவதைக் கண் முன்னே காண நேர்ந்த துயரம் நடைபெற்றது.

தமிழீழ மண்ணில் இனப்படுகொலை நிகழ்த்த ஆயுதங்களை, போர் ஆலோசனைகளை வாரி வழங்கி, பொருளாதாரப் பலம் அளித்து நமது இனத்தை அழித்த கொடூரம் இதே நாளில் நடந்து முடிந்துள்ளது. நாம் உயிருள்ள வரை மறக்க முடியாத, மறக்கக்கூடாத துயர நினைவுகள் இதுவாகும்.

எங்கெல்லாம் நீதி கிடைக்க வழி உண்டோ, அங்கெல்லாம் நின்று கண்ணீர் விட்டு கதறி பார்த்தும் நம்மினத்திற்கான நீதி இதுநாள் வரை வழங்கப்பட வில்லை.

இந்த இனப்படுகொலைகளுக்குப் பிறகும் கூட ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழீழ மண்ணில் வாழும் தமிழர்களுக்கு, மற்ற மேலை நாடுகளில் நடப்பது போலச் சுயநிர்ணய உரிமை வழங்கப்படவில்லை.

இவ்வளவு பெரிய அளவில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளார். ஏன் இதுவரை சர்வ தேச விசாரணை நடத்தப்படவில்லை.

இதுகுறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அதில் இலங்கை அரசை தண்டிக்கப்பட வேண்டும்.

இதே போன்றே தமிழகத்திலும் பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன.

கச்சதீவு மீட்பது என்பது எங்களுக்கு பிரச்சினை, மீனவர் கடலுக்கு செல்வது எங்களுக்கு பிரச்சினை. காவிரி உரிமை என்பது எங்களுக்கு பிரச்சினை. முல்லைப் பெரியாறு என்பது எங்களுக்கு பிரச்சினை. ஹைட்ரோ கார்பன் பிரச்சினை எங்களுக்கு பிரச்சினை. இதனை எல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம் என்று சீமான் பேசினார்.


Photos