அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபையால் செலவிடப்படாத பெருமளவு நிதி திரும்பிச் செல்லுமா?

வடமாகாண சபைக்கு 2015ம் ஆண்டு மாகாணம் குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி 1440 மில்லியன் ரூபாவில், 31.10.2015ம் திகதி வரையில் சுமார் 40 வீத நிதி மட்டுமே செலவிடப்பட்டிருக்கும் நிலையில், செலவிடப்படாமலிருக்கும் பெருமளவு நிதி திரும்பிச் செல்லுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
2015ம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீட்டில், மாகாணத்தின் 5 அமைச்சுக்களுக்கு அபிவிருத்தி நன்கொடை நிதி 1440 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நிதியில் 5 அமைச்சுக்களும் 40 வீதமான நிதியையே செலவிட்டிருக்கின்றன.

2015ம் ஆண்டு நிறைவடையும் தறுவாயில் உள்ளதுடன், 2016ம் ஆண்டுக்கான பாதீடும் முன்வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் 2015ம் ஆண்டுக்கான நிதியில் 60 வீதமான நிதி செலவிடப்படாமை தொடர்பில் அண்மையில் மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஊடகங்களுக்கு முன்னால் சுட்டிக்கட்டியிருந்தார்.

இந்நிலையில் வடமாகாணசபை மற்றய இலங்கையின் மற்றைய மாகாணங்களை போன்ற ஒரு மாகாணம் அல்ல.

அதிகளவான தேவைகளை கொண்ட மாகாணமாக இருக்கின்றது என மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில் பெருமளவு நிதி எதற்காக செலவிடப்படாமலிருக்கின்றது என்ற கேள்வியை அரசியல் அவதானிகள், சமூக ஆர்வலர்கள் எழுப்பியிருக்கின்றனர்.

இந்நிலையில் மாகாணம் குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் செலவீனங்கள் தொடர்பிலான 31.10.2015ம் திகதி வரையிலான தகவலின் படி மாகாண கடற்றொழில் அமைச்சு 64 வீத நிதியை செலவிட்டிருக்கின்றது.

மேலும் மாகாண விவசாய அமைச்சு 59 வீத நிதியையும் மாகாண சுகாதார அமைச்சு 44 வீத நிதியையும், மாகாண கல்வியமைச்சு 32 வீத நிதியையும், செலவிட்டிருக்கும் நிலையில் முதலமைச்சரின் கீழ் வரும் மாகாண உள்ளூராட்சி அமைச்சு 7 வீத நிதியும் செலவிட்டிருக்கின்றது.

இந்நிலையில் மொத்தமாக ஒதுக்கப்பட்ட 1440 மில்லியன் ரூபா நிதியில் 40 வீத நிதியை மட்டுமே செலவிட்டுள்ளதாக 31.10.2015ம் திகதி வரையிலான செலவீனதகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளை 31.10.2015ம் திகதி வரையிலான பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதி 400 மில்லியன் ரூபாவிலும் 36வீதம் மட்டுமே செலவிடப்பட்டிருக்கின்றது.

மேலும் மத்திய அரசாங்கத்தினால் நேரடியாக நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு 2702.11 மில்லியன் ரூபா நிதியிலும் 31வீத நிதி மட்டுமே செலவிடப்பட்டிருக்கின்றது.


இந்நிலையில் மிக நீண்டகாலம் போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களையும், மக்களையும் கொண்ட வடமாகாணத்தில் பெருமளவு நிதி செலவிடப்படாமல் இருக்கின்றமை தொடர்பில் மேற்படி அரசியல் அவதானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை மேற்படி செலவிடப்படாமலிருக்கும் நிதியை பெரும்பாலும் மாகாணசபை மீள மத்திய அரசாங்கத்திற்கு வழங்காது என்ற நிலை இருக்கும்போதும்,

மத்திய அரசாங்கம் கோரும் பட்சத்தில் குறித்த நிதி திரும்பி பெறப்படலாம் அல்லது அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் நிதி குறைப்புச் செய்யப்படலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வடமாகாண சபையால் செலவிடப்படாத பெருமளவு நிதி திரும்பிச் செல்லுமா? Reviewed by NEWMANNAR on November 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.