அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம் மக்களை 'பிரித்துபார்க்கவில்லை'

முஸ்லிம் மக்களும் எங்களுடைய மக்களே, அவர்களை நாங்கள் பிரித்து நோக்கவில்லை. ஆரம்பகாலத்தில், எமக்கிடையேயான உறவுகள் சிறப்பாக இருந்தன. ஆனால், பிற்காலத்தில் அதில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன' என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முஸ்லிம்களுடனான உறவுகள் தொடர்பில் முற்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்தமைக்குப் பதிலளிக்கையிலேயே மாவை எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு, யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றது. இங்கு கருத்துக்கூறிய கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர், 'இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவுகளில் இன்னமும் முன்னேற்றங்கள் அவசியப்படுகின்றன, யுத்தம் நிறைவடைந்தததிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள தமிழ் - முஸ்லிம் உறவுகள் சார்ந்த செயற்பாடுகளில் எம்மால் திருப்தியடைய முடியாதுள்ளது.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களால் தமிழ் மக்கள் அடக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதேபோன்று, வடக்கில் தமிழ் மக்களால் முஸ்லிம் மக்கள் அடக்கப்படுவதாகக் கூறுகின்றார்கள். மன்னாரிலே, இனரீதியான முரண்பாடுகள் இருப்பதை நான் அவதானித்தேன். இவை ஆரோக்கியமான விடயங்களல்ல. இதுவிடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முற்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது என்னுடைய பணிவான அவதானம்' என்று குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த மாவை எம்.பி, 'முஸ்லிம் மக்களும் எங்களுடைய மக்களே, நாங்கள் அவர்களைப் பிரித்து நோக்கவில்லை.

ஆரம்பகாலத்தில் எமக்கிடையேயான உறவுகள் சிறப்பாக இருந்தன. ஆனால், பிற்காலத்தில் அதில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒரு கட்சியாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களுக்கு மாத்திரமுண்டான கட்சியல்ல. அதிலே முஸ்லிம் தேசத்தையும் நாம் இணைத்தே இருக்கின்றோம். தந்தை செல்வா இதனை ஆரம்பம் முதல் வலியுறுத்தியிருந்தார். ஆனால், பிற்பட்ட காலங்களில் அதில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எங்களோடு ஆரம்பகாலங்களில் இணைந்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்தினை மேம்படுத்தினார்கள். தலைவர் அஷ்ரப் எமது கட்சியின் உறுப்பினரே, பிற்காலத்தில் 'முஸ்லிம் விடுதலை முன்னணி' என்ற கட்சியில் இணைந்தார், அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார்;. இவை எம்மீது கொண்ட கோபத்தின் வெறுப்பின் அடிப்படையில் உருவானதல்ல.

முஸ்லிம் சமூகத்தில் நிலவிய தேவையின் நிமித்தம் உருவாகியவை. முஸ்லிம் காங்கிரஸை உருவாக்குவதிலே அஷ்ரபுக்கு அண்ணன் அமிர்தலிங்கம் போன்றோர் கூடுதல் பக்கபலமாக இருந்தார்கள், ஆலோசனைகளை வழங்கினார்கள். இப்போது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும்; அரசியல் ரீதியாக துருவப்பட்டு நிற்கின்றார்கள். புலிகள் இருக்கின்ற காலத்தில், இமாமை, முஸ்லிம் மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தோம். வடக்கு மாகாணசபையிலே அஸ்மினை நியமித்திருக்கின்றோம். ஆனால், இவை போதுமானவையல்ல.

 முஸ்லிம் மக்களோடு இன்னமும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்ற உங்களது ஆலோசனையை நான் ஏற்றுக்கொள்கின்றேன்' என்றும் தெரிவித்தார். மேற்படி சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாணசபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உட்பட கட்சி முக்கியஸ்த்தர்கள் பங்கேற்றனர். - 
முஸ்லிம் மக்களை 'பிரித்துபார்க்கவில்லை' Reviewed by NEWMANNAR on July 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.