அண்மைய செய்திகள்

recent
-

கடற்படை வதைகூடத்தை குற்றப் பகுதியாக அறிவிப்பு


திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அமைந்துள்ள நிலத்தடிச் சித்திரவதைக்கூடத்தை குற்றப்பிரதேசமாக அறிவித்த கொழும்பு கோட்டை நீதவான், அங்குள்ள தடயங்கள் மற்றும் சாட்சியங்களை அழிவடையாமல் பாதுகாக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அமைந்துள்ள \'கன்சைட்\' எனப்படும் நிலத்தடி சித்திரவதைக் கூடமானது ஒரு குற்றப் பிரதேசமே என கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று முன்தினம் அறிவித்தார்.


அதனால் அப்பகுதிக்குள் வெளியார் நுழைவதனூடாக சாட்சியங்கள் அழிவடையலாம் என சுட்டிக்காட்டிய நீதிவான், காணாமல்போன 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் பெற்றோர், உறவினர்களை தேவை ஏற்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி, மன்றின் அனுமதியோடு அவர்களை அங்கு அழைத்துச் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளில் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விடயம் வழக்கு விசாரணைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்நிலையில் திருகோணமலை சித்திர வதை முகாமில் ஐ.நா சிறப்பு அதிகாரிகளின் விஜயத்தின்போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் மனிதர்களுடையதா? என்பது தொடர் பில் உறுதிப்படுத்துவதற்காக அவற்றை கொழும்பு மரண வைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அனுப்பி பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் கடந்த 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் லெப்டினட் கொமான்டர் சம்பத் முனசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சிலரது கடவுச்சீட்டுகள், தேசிய அடையாள அட்டைகள், துப்பாக்கி ரவைகள் தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டு விசாரணைகளும் நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு பல வருடங்களாக நிலுவையில் உள்ள இந்த கடத்தல் விவகாரம் தொட ர்பிலான வழக்கில் உடன் தலையீடு செய்யுமாறும், மன்றுக்கு உதவியாக சிரேஷ்ட அரச சட்டவாதி ஒருவரை வழக்கு விசார ணைகளின் போது மன்றில் ஆஜராக்குமாறும், சட்டமா அதிபருக்கு நீதிமன்ற பதிவாளர் ஊடாக நேற்று முன்தினம் இரண்டாவது முறையாகவும் நீதிவான் அறிவித்தல் விடுத்தார்.
இரண்டாவது அறிவித்தலையும் சட்டமா அதிபர் கணக்கில் கொள்ளாது செயற்படின் தான் தொலைபேசியூடாக நேரடியாக சட்டமா அதிபரை தொடர்புகொள்ள வேண்டி வரும் எனவும் நீதிவான் லங்கா ஜயரத்ன தெரிவித்தார்.

தொடர்ந்து சாட்சியப் பாதுகாப்புக்காகவும் சந்தேகத்துக்குரிய நிலக்கீழ் சித்திரவதைக் கூடத்தையும் கருதி குறித்த பகுதியை குற்றப் பிரதேசமாக நீதவான் அறிவித்துள்ளார்
கடற்படை வதைகூடத்தை குற்றப் பகுதியாக அறிவிப்பு Reviewed by NEWMANNAR on August 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.