அண்மைய செய்திகள்

recent
-

விதுரன் வில் முறிப்பதை விட தருமர் பக்கம் வருவதே நல்லது


வில்லுக்கு விஜயன் என்பதெல்லாம் பின்னாளில் ஏற்பட்டது. உண்மையில் வில்லுக்கு விதுரன் என்றே கூறப்பட்டு வந்தது.

கெளரவர் தலைவன் துரியோதனனின் வசைச் சொல் தாங்க முடியாமல் விதுரன் தன் வில்லை சபை நடுவே முறித்தெறிகிறான்.

இனிமேல் யான் போர்க்களத்தில் வில்லெடேன் என்ற சபதத்துடன் விதுரன் தன் வில்லை முறித்ததனால் வில்லுக்கு விதுரன் என்ற பெயர் அருகிற்று.

பரவாயில்லை கெளரவர் சேனைகளின் அதர்மம் கண்டே விதுரன் வில் முறித்தான். இதனால் குருஷேத்திரப் போரில் துரியோதனனின் பக்கம் விதுரன் நின்று விற்போர் செய்யவில்லை.
இஃது கெளரவர் சேனைகளின் தோல்விக்குக் காரணம் என்று கூடக் கூறலாம்.

ஆனால் விதுரன் வில்லை முறிக்காமல் துரியோதனா! நீ செய்வது அதர்மம், அநீதி ஆகையால் நான் பாண்டவர்கள் பக்கம் செல்கிறேன் என்று கூறியிருந்தால்,

விதுரன் பாண்டவர் பக்கம் நின்றால் போர் வெற்றி தருமர் பக்கத்துக்குக் கிடைத்துவிடும் என்ற பயத்தில் துரியோதனன் போருக்குச் சம்மதம் தெரிவிக்காமல் கூட விட்டிருக்கலாம்.

இவ்வாறானதொரு முடிவு பாண்டவர்களுக்கு உரிய உரிமையைக் கொடுப்பதுடன், போர் அழிவுகளையும் தவிர்த்திருக்கும் என்று எண்ணுவதில் தவறில்லை.

இதனால்தான் விதுரன் வில்லை முறிப்பதை விடுத்து தன் வில்லுடன் பாண்டவர் பக்கம் வந்திருக்க வேண்டும்.

அதைச் செய்யத் தவறியது விதுரன் விட்ட தவறு என்பதே நம் வாதம். அறத்தையும் நீதியையும் உணர்ந்த நேர்மையாளனாகிய விதுரன் தன் வில்லை முறித்து எறிந்து விட்டு,
நடுவுநிலை என்று கூறிக்கொண்டு இருப்பதென்பது எந்தவகையிலும் ஏற்புடையதன்று.

நடுவுநிலை என்பது பக்கம் சாராமை என்று எவரும் நினைத்து விடக் கூடாது. பக்கம் சாராமை வேறு நடுவுநிலை வேறு.

அறத்தின் பக்கம் நீதியின் பக்கம் நிற்பதே நடுவுநிலையாகும். அறத்தின் பக்கமும் இல்லை; மறத்தின் பக்கமும் இல்லை என்பது ஒரு போதும் நடுவுநிலையாகாது என்பதைப் புரிதல் அவசியம்.

இந்த வகையில் விதுர நீதி போன்று நம் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களும் செயற்பட்டுள்ளார்.

அதாவது ஐ.நா சபையின் தீர்மானங்களை அமுலாக்குவதில் கால அவகாசம் கொடுப்பதென்பது ஏற்புடையதன்று என வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். அவர் கூறியது நீதியானது; பாதிக்கப்பட்ட மக்கள் சார்பானது; உண்மையானது.

கால அவகாசத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சம்மதம் தெரிவித்துள்ள இந்த வேளையில்,

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் கால அவகாசம் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கு வது நீதியாகாது என்ற தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்தக் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்கின்ற அதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் முதலமைச்சர் கூறுகின்ற இக் கருத்தை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதும் நம் தாழ்மையான கோரிக்கை.

இதேவேளை கால அவகாசம் வழங்குவது ஏற்புடையதல்ல என்று கூறுவதோடு மட்டும் தன் கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல்,

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கும் கூட்டமைப்பின் தலைமைக்குத் தக்க பாடம் புகட்டுவதும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தார்மீகக் கடமையாக இருக்கும் என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

வலம்புரி

விதுரன் வில் முறிப்பதை விட தருமர் பக்கம் வருவதே நல்லது Reviewed by NEWMANNAR on March 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.