அண்மைய செய்திகள்

recent
-

ஆற்றாது அழுது புரண்ட தாய்மாரை "எருமை மாடுகள்" என திட்டிய பொலிஸார்!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவுகளைத் தொலைத்த தாய்மார்களை “எருமை மாடுகள்”, என பொலிஸார் திட்டியதோடு வலுக்கட்டாயமாக அவர்களை பிடித்து இழுத்து வீதியின் கரைகளில் தள்ளி வீழ்த்தியதையும் காண முடிந்தது. இந்த சம்பவங்களால் நேற்றைய தினம் அப்பகுதியில் அழுகுரல்கள் நிறைந்து காணப்பட்டதோடு, பதற்றமும் நிலவியது.

ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் என்ற நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக நேற்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இதன்போது தமது உறவுகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடைபெற்றது? என்பதனை கூறுமாறு வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் ஒன்று மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் குறித்த பகுதியில் நிற்பதற்கு அனுமதியில்லை என கூறிய பொலிஸார், ஜனாதிபதி வருவதற்கிடையில் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் பொலிஸாரின் கட்டளையை மீறியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் பின்னர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்ட வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பேரணியாக அழைத்து சென்றார்.
இதன்போது குறைகேள் அலுவலகத்தை திறப்பதற்கு வந்த ஜனாதிபதியே! எங்கள் குறைகள் உங்களுக்கு தெரியவில்லையா? என்ற கோசத்துடன் உறவுகள் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியை தடுப்பதற்கு பொலிஸார் கடும் முயற்சியை மேற்கொண்ட போதிலும் அதனை முறியடித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இந்த இழுபறிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் போது வருகை தந்த ஜனாதிபதி, ஆளுநரின் அலு வலகத்திற்கு பிரதான வாயிலூடாக செல்லாமல் வேறொரு பக்கமாக சென்றார்.
இதன்போது விரக்தியடைந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஜனாதிபதியே ஒளித்து ஓடுகின்றீரா? உங்கள் மக்களை சந்திப்பதற்கு பயமா? என கோசமிட்டு வீதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன், விந்தன், கஜதீபன், சுகிர்தன் ஆகியோர் காணாமல் போனோரின் போராட்டத்துடன் இணைந்து கொண்டு அரசுக்கு எதிராக கோசங்களை முன்வைத்தனர்.

இந்த சம்பவங்களால் அங்கு பதற்றம் மேலும் அதிகரிக்க, அங்கு நின்ற யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உடனடியாக வீதியை விட்டு கரைக்கு செல்லுமாறு கூறினார். எனினும் உறவுகள் தொடர்ந்தும் வீதியில் புரண்டு கதறி அழும் போது, அவர்களது கைகளை பிடித்து இழுத்து வீதியின் கரைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து தாய்மார்களும் கதறியழுது எங்கள் உறவுகளை தாருங்கள் நாங்கள் போகின்றோம் என ஏக்கத்துடன் கூறிக்கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் எருமைகளே உங்களுடைய தலையில் என்ன இருக்கின்றது? என அழுது புலம்பிய உறவுகளை பார்த்து யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி யொருவர் பலமுறை திட்டியுள்ளார். இதனை புகைப்படம் பிடித்த ஊடகவியலாளர்களையும் அங்கு நின்ற பொலிஸார் கடுமையான வார்த் தைகளால் திட்டியுள்ளனர்.இதனால் அங்கு மேலும் பதற்றமடைய பொலிஸார் போராட்டக்காரர்களை சுற்றிவளைத்து அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆற்றாது அழுது புரண்ட தாய்மாரை "எருமை மாடுகள்" என திட்டிய பொலிஸார்! Reviewed by NEWMANNAR on March 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.