அண்மைய செய்திகள்

recent
-

மாற்றத்தை ஏற்படுத்தாத இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை

கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கத்தெரிந்திருப்பது மிகவும் முக்கியமானது. வீடு என்ற அடிமட்ட சமூகக் கட்டமைப்பு முதல் நாடு என்ற எல்லை வரையில் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

மாற்றங்களை விரும்பாதவர்கள் துன்பத்தில் கிடந்து உழருவரே அன்றி அவர்களால் எந்த வகையிலும் மீளவும் வாழவும் முடியாது.

சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்குப் பல உதாரணங்கள் இருப்பினும் ஒரு சில வருமாறு.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் பிரித்தானியாவில் நடந்த தேர்தலில் வின்சன் சேர்ச்சில் தோல்வி கண்டார்.

போரில் பிரித்தானியாவிற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த வின்சன் சேர்ச்சிலுக்கு பிரித் தானிய மக்கள் வாக்களிக்கத் தவறியது ஏன் என்ற கேள்வி ஏற்படும் போது,

போர்ச்சூழல் மாறி அமைதிச் சூழல் ஏற்படுகின்ற வேளையில், போர் விருப்புக்கொண்ட வின்சன் சேர்ச்சிலுக்கு பிரித்தானிய மக்கள் கட்டாய ஓய்வு கொடுத்தனர் அவ்வளவுதான் என்ற பதிலோடு அந்த அத்தியாயம் முடிக்கப்பட்டது.

அண்மையில் அமெரிக்க தேர்தல் நடைபெற்ற போது திருமதி கிளாரி கிளின்ரனே அடுத்த ஜனாதிபதி என உலகநாடுகள் பரவலாகப் பேசிக்கொண்டன.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தானே என்பதை உறுதிசெய்வதற்காக தேர்தல்களத்தில் கிளாரியின் பிரசாரம் உச்சமாக - உன்னதமாக இருந்தது.

அதே நேரம் கிளாரிக்கெதிராகப் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் மிக மோசமான பிரசாரம் செய்யப்பட்டது.

இவற்றின் மத்தியில் கிளாரி வெல்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க மக்கள் டொனால்ட் ட்ரம்ப்பை தெரிவு செய்தனர்.

உலகின் வல்லரசாக இருக்கக்கூடிய அமெரிக்காவுக்கு ஒரு பெண் ஜனாதிபதியாக வருவது ஆரோக்கியமானது அல்ல என்று அமெரிக்க மக்கள் முடிவெடுத்தனர்.

ட்ரம்ப்பின் தனிப்பட்ட வாழ்வு என்பதைக் கடந்து அமெரிக்காவை தொடர்ந்தும் வல்லாதிக்க நாடாக வழிப்படுத்திச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் அமெரிக்க மக்கள் செயற்பட்டதைக் காணமுடியும்.

வெளிநாடுகள் ஏன்? நம் நாட்டிலும் சிங்கள மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது கூட மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதற்காக என்று கூறலாம்.


மகிந்த ராஜபக்ச­ மீண்டும் ஜனாதிபதியாக வருவது சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைக் கொண்டு வரும். இஃது மகிந்த ராஜபக்சவிற்கும் அவர் தரப்பிற்கும் படையினரிற்கும் பேராபத்தைக் கொடுக்கும் என்பதால் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதென சிங்கள மக்கள் முடிவு செய்தனர்.

அவர்களின் முடிவிற்கு சிறுபான்மை மக்களும் ஆதரவு அளிக்க, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி யாகினார். இதனால் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நின்று போனது. இது சிங்கள மக்களின் மாற்றத்திற்கு கிடைத்த வெற்றி.

ஆக, மாற்றத்தை விரும்பாத ஒரே பிறவிகள் ஈழத்தமிழர்கள் தான். தங்களுக்கு அநியாயம் செய்கின்றார்கள் என்று தெரிந்தாலும் சரி பரவாயில்லை என்றபடி அநியாயம் செய்பவர்களுக்கே மீளவும் தேர்தலில் வாக்களிப்பர்.

அட, தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்களை கட்சியிலிருந்து நீக்கு, கூட்டமைப்பில் புதுமை செய், மாற்றம் செய். அடுத்த தேர்தலில் முடிவுகளை மாற்று.

இப்படி ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு இனமாக தமிழ் இனம் இருப்பதால் தான், துன்பத்தை மடியில் கட்டி சதா அழுது கொண்டிருக்கிறது.

வலம்புரி 
மாற்றத்தை ஏற்படுத்தாத இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை Reviewed by NEWMANNAR on March 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.