அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக மன்னார் உதைபந்தாட்ட லீக் தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன் தெரிவு-

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 2017 ஆண்டு தொடக்கம் 2021 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத்தின் உபதலைவராக மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன்(ஜெறாட்) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் லீக் செயலாளர் ப.ஞானராஜ் தெரிவித்தார்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 2017 ஆண்டு தொடக்கம் 2021 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவுக் கூட்டமானது அகில உலக மற்றும் ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தற்போதைய தலைவராக இருந்த திரு அனுர டி சில்வா தலைமையிலான குழுவும் முன்னாள் தலைவர் ரஞ்சித் றொட்றிகோ தலைமையிலான குழுவும் போட்டியிட்டன.

இரு குழுக்களும் ஓரளவு சமநிலையில் பலப்பரீட்சை காண்பித்து களத்தில் இருந்தன.

வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையை வடக்கு கிழக்கு மாகாண லீக்குகள் கொண்டிருந்தன.

இலங்கையில் 63 லீக்குகள் உள்ளன. இதில் வடக்கில் 09 லீக்குகளும் கிழக்கில் 08 லீக்குகளும் உள்ளன.

இந்த 17 லீக்குகளும் ஒற்றுமையாக இணைந்து இலங்கையின் வெற்றியைத் தீர்மானித்தன. இவை அனுர டி சில்வா வை ஆதரித்து 106க்கு 79 என்ற வாக்குகளின் அடிப்படையில் தலைமைத்துவத்தை தீர்மானித்துள்ளது.

இத்தேர்தலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன் (ஜெறாட்) அவர்கள் உப தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இலங்கை முழுவதுமாக பலமாக இருந்த எதிரணியாகிய றஞ்சித் றொட்றிகோ அணியைத் தோற்கடித்து உப தலைவராக தெரிவாகி மன்னார் மாவட்டத்திற்கும் வட மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளளார்.

ஜெறாட் அவர்கள் மன்னார் பனங்கட்டுக்கொட்டுக் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் நகர பிதா அமரர் ஞானப்பிரகாசம் அருமை அவர்களின் புதல்வராவார்.

இவர் தனது இளமைக்காலத்தில் பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் அணிக்காக விளையாடிய ஒரு சிறந்த வீரராவார்.

மன்னார் மாவட்ட அணிக்கு நீண்ட காலம் தலைவராக செயற்பட்டார்.

1999 , 2001 , 2002 ஆகிய காலப்பகுதியில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான தேசிய மட்ட உதைபந்தாட்டப்போட்டியில் வடகிழக்கு மாகாண அணியில் சிறப்பாக ஆடி 3ம் இடத்தைப்பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன் 2003,2004 ம் காலப்பகுதியில் இவ் இணைந்த மாகாண அணிக்கு தலைவராக செயற்பட்டு 3ம் இடத்திற்கான தேசிய மட்டத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

வட மாகாணம் பிரிக்கப்பட்ட பின் 2011ம் ஆண்டில் வட மாகாணம் 3ம் இடத்தைப்பெற இவர் உதவினார். அத்துடன் 2012ம் ஆண்டில் இவரது தலைமையின் கீழ் வட மாகாண அணி தேசிய மட்டத்தில் 2ம் இடத்தைப்பெற்று வரலாற்று சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாது இவர் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் உபதலைவராக 2012 முதல் 2014 வரையும் கௌரவ தலைவராக 2015 முதல் இன்றுவரையும் மிகவும் சிறப்பாக செயற்பட்டு மன்னார் மாவட்டத்தின் உதைபந்தாட்டத்தை சிறப்பாக வளர்க்க மிகவும் பலத்த சவால்களின் மத்தியில் அரும்பாடுபட்டு வருகின்றார். உண்மைத்தன்மையும் நேர்மைத்தன்மையும் வெளிப்படு தன்மையும் விடாமுயற்சியும் கொண்ட சிறந்த தலைவரைக் கொண்டுள்ள மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கானது இன்று பெருமை கொள்கிறது.

இவரது தலைமைத்துவ காலத்தில் தான் மன்னார் மாவட்டத்தில் மாத்திற்கொரு உதைபந்தாட்டப்போட்டியும் விளையாடும் கழகங்களின் எண்ணிக்கையும் 42 ஆக பாரிய அளவில் அதிகரித்துள்ளமையும் பாராட்டத்தக்கது.
இவ்வளவு தகுதியும் அனுபவமும் கொண்ட இவரது தேசிய சங்கத்தின் உப தலைவர் பதவி சிறக்க இறையாசீர் வேண்டி மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட கழகங்கள் இரசிகர்கள் சார்பில் லீக் நிர்வாகம் வாழ்த்துவதாகவும், இவரது வெற்றிக்கு வாக்களித்த சகல லீக்குகளுக்கும் சிறப்பாக வடக்கு கிழக்கு லீக்குகளுக்கும் வெற்றியை உறுதிசெய்த பெரும் மதிப்பிற்குரிய திரு கேளி சில்வைரா மற்றும் வைத்தியர் மணில் பெனாண்டோ யாவருக்கும் விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதாக மன்னார் லீக் செயலாளர் ப.ஞானராஜ் தெரிவித்தார்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக மன்னார் உதைபந்தாட்ட லீக் தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன் தெரிவு- Reviewed by NEWMANNAR on July 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.