அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தனின் சர்வாதிகாரத்தின் கீழ் பதினாறு ஆண்டுகள் செயற்பட்டோம்: சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

சம்பந்தனின் சர்வாதிகாரத்தின் கீழே கடந்த 16 வருடங்களாக செயற்பட்டு வந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார் எனும் தொனிப்பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

16 வருடங்களிற்குள் 4 சுவருக்குள் பல விடயங்களைப் பேசி இணக்கப்பாட்டிற்கு வர முடியாத நிலையில் இன்று மாற்றுத் தலைமை ஒன்று வேண்டுமென்று பேசிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த முயற்சி 3 வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர் மன்னார் ஆயர் தலைமையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூட்டமைப்பிற்குள் ஐக்கியத்தினை ஏற்படுத்த வேண்டும். கூட்டமைப்பிக்கு ஒரு யாப்பு உருவாக்கப்பட வேண்டும். கட்டமைப்புக்கள் மற்றும் கொள்கைகள் சரியான வகையில் அமைய வேண்டும் என பல விடயங்கள் பேசியிருந்தோம்.

ஆனால், இறுதியில் தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இணைந்து கலந்துரையாடலை குழப்பினார்கள்.



தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்று சகல அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களை இணைத்து தமிழ் தேசிய சபை ஒன்றினை உருவாக்குவோம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய சபைக்குள் தம்மை கட்டி வைக்கப்பார்க்கின்றார்கள் என தமிழரசு கட்சியினர் பயந்து விட்டார்கள். கடந்த 16 வருடம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பல விடயங்களைப் பேசியிருக்கின்றோம்.

உண்மையில் இரா.சம்பந்தனின் நிழலில் இருந்தோம். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின் போது, எமக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை ஒன்றினை விட்டிருந்தார். மக்கள் கடந்த காலமாக போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள்.

மக்களிடம் இருந்து அந்நியப்படுவதாக விரைவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறியிருந்தோம்.

மகிந்த ராஸபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் போது, மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தார்களா? பாராளுமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் பேசியுள்ளீர்களா என கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்ககூடாது. காணாமல் போனோர்கள் மற்றும் காணி விடுவிப்பு குறித்து மக்கள் போராட்டங்களை மேற்கொள்ள கூடாது.

இவற்றினை எல்லாம் செய்யாமல் இருந்தால் நல்லாட்சி அரசு எமக்கு தரும் என்ற நம்பிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை வைத்துக்கொண்டுள்ளார்.

வெறுமனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பயன்படுத்திக்கொண்டு தமிழரசு கட்சியை வளர்க்கலாம் என்று யோசித்தாரே தவிர ஒட்டுமொத்த தமிழ் மக்களை அழிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்கின்றார்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியாக அணுக தெரியவில்லை.

கட்சியை பிழையாக வழிநடத்துகின்றீர்கள், மக்களை பிழையாக வழி நடத்துகின்றீர்கள் என சுட்டிக்காட்டினோம். நீங்கள் எதைச் சொன்னாலும், அவற்றினை சம்பந்தனே முடிவெடுப்பான் என கூறுவார்.

இப்படியான சர்வாதிகார தலைமையின் கீழே 16 வருடங்கள் 4 சுவருக்குள் பல விடயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்.

80 வயது வரைக்கும் பாராளுமன்ற கதிரையில் இருந்து அந்த தண்ணீரை குடித்தால் மட்டுமே சீவன் போகும் என்ற உணர்வுடன் நாங்கள் இல்லை. போராட்டத்தினை முன்னெடுத்த நாம், உயிரிழந்த மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

எமது இனம் என்னவானாலும் பரவாயில்லை. எமது கட்சியை எப்படி பலப்படுத்துவது என்ற பச்சைச் சுயநலத்தில் தமிழரசு கட்சியும், சம்பந்தனும் செயற்படுகின்றார்கள். கீழ்த்தரமான சர்வாதிகாரத்தின் கீழ் இன்றைக்கு 16 வருடங்கள் இருக்கின்றோம்.

காலத்தின் தேவை கருதி தலைமை உருவாக்கப்பட வேண்டும். தலைவர்கள் மக்களினால் உருவாக்கப்படுவார்கள். சம்பந்தன் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்றும் தெரியாது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்ன செய்வார் என்றும் தெரியாத நிலமை.

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தலைவிதியை தனி மனிதருக்குள் வைத்திருக்கமுடியாது. “வைச்சால் குடுமி அடித்தால் மொட்டை” என்ற இந்த நிலமை மாற வேண்டும். மாற்றுத் தலைமை இல்லாவிடின் மக்களின் நிலமை மோசமடைந்து கட்சி மாறக்கூடிய நிலமை ஏற்படலாம்.

மக்கள் தமது பிரச்சினைக்குரிய வழிகளைத் தேடுகின்றார்கள். கூட்டுத் தலைமை அவசியம். யாப்பு ஒன்றினை உருவாக்கி யாப்பின் படி தனியான செயற்பாடுகளில் இறங்கும் உறுப்பினருக்கு எதிராக சட்ட ரீதியான நடடிக்கை எடுத்தல் அவசியம்.

கூட்டுத் தலைமையினை உருவாக்கி அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கான செயற்பட வேண்டுமென்றும் வேண்டுகோள்விடுத்தார்.

சம்பந்தனின் சர்வாதிகாரத்தின் கீழ் பதினாறு ஆண்டுகள் செயற்பட்டோம்: சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு Reviewed by NEWMANNAR on July 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.