அண்மைய செய்திகள்

recent
-

ஐரோப்பாவில் உடைபட்டது தடை... என்ன செய்யும் இந்தியா?


ஈழத் தமிழர்களின் மனதில் பால் வார்க்கும் ஒரு செய்தி... ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை செல்லாது’ என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விடுதலைப்புலிகள் மீது முதன்முதலில் தடை விதித்தது இந்தியாதான்.


இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருந்தன. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இங்கிலாந்து தவிர ஐரோப்பிய ஒன்றியத்தில் அடங்கியுள்ள 26 நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்படும். தொடர்ந்து கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தடை நீங்க வாய்ப்புகள் உள்ளன. இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

இந்தத் தடை உடைபட்ட தருணம் குறித்து ஜூ.வி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார், நார்வே ஈழத் தமிழர் அவையின் முன்னாள் உறுப்பினர் முனைவர் விஜய் அசோகன்...

கடந்த 2006-ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்ட தடையை, தொடர்ந்து நீட்டிக்கச் செய்ய 2011-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய சபை சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து 2011-ம் ஆண்டே புலிகளின் தரப்பில், ஐரோப்பா வாழ் தமிழர்களால் லக்ஸம்பர்க் நகரில் இருக்கும் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதில் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கி, 2014-ம் ஆண்டிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து மேல் முறையீடுக்கு ஐரோப்பிய ஒன்றியம் சென்றது. மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு, புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கும் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளது ஐரோப்பிய நீதிமன்றம்.

2001-க்குப் பிறகு எல்லா நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஒன்று சேர்ந்து ஈடுபடுவது என முடிவு செய்தன. அப்போது, ஐரோப்பிய ஒன்றியமும், தங்களது எல்லைக்குள் தடை செய்யப்படும் அமைப்பின் சொத்துகளை முடக்கும் சட்டத்தை இயற்றியது. இதனை அடிப்படையாக வைத்து, 2006-ம் ஆண்டு விடுதலைப்புலிகளையும் தடை செய்யப்பட்ட இயக்கப் பட்டியலில் ஐரோப்பிய நாடாளுமன்றம் சேர்த்தது.

ஆனால் இதனை, ‘வரலாற்றுத் தவறு’ என 2014-ல் தமிழ்நெட் இணையச்செய்திக்கு அளித்த பேட்டியில் இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவராக இருந்த உல்ஃப் என்றிக்சன் (ஸ்வீடன்) தெரிவித்து இருந்தார்.

“இந்தத் தடை விடுதலைப்புலிகளை பலம் இழக்கச்செய்து, இலங்கை அரசைப் பலப்படுத்தி, கொடூரமான போருக்கு வழிவகுத்தது. புலிகளின் மீதான தடை, மிக அவசர அவசரமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது’’ என்று கூறியிருந்தார்.

புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரும் அரசியல் ஆலோசகருமான ஆண்டன் பாலசிங்கம், “இத்தடையால் தமிழர்கள் தரப்பு படை பலம் இழந்து, மிகப் பெரிய அவலத்தைச் சந்திக்க வழிவகுக்கும்” எனத் தனது கண்டனத்தை 2006-லேயே பதிவு செய்தார்.



அதன்பிறகு நடந்தேறிய கொடூரமான போரினால் பல்லாயிரம் தமிழர்கள் இறந்ததும், பல்லாயிரம் பேர் உடல் உறுப்புகளை இழந்ததும் அனைவருக்கும் தெரிந்த வரலாறு. 2011-ல் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் இந்தத் தடையை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த விக்டர் கோப் என்ற வழக்கறிஞரின் மூலம் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டு இடதுசாரி அரசியல்வாதி லதன் சுந்தரலிங்கம், அமெரிக்காவில் இருக்கும் சட்ட வல்லுநரான தமிழ் இளைஞர் ராஜீவ், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஈழத்தமிழர் மக்களவைப் பிரதிநிதிகள் என எண்ணற்றோரின் முயற்சியில் இது நடந்தது.

புலிகளின் இவ்வழக்குக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியச் சபையும், நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளும் வாதாடின. மூன்று ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில், ‘விடுதலைப்புலிகளைத் தடைசெய்யும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் பொருளாதாரச் செலவைப் புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் வழங்கவேண்டும். மூன்று மாத கால அவகாசத்தில் மறுப்பு தெரிவிக்காவிடின், இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வரும்’ என ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பில், ‘புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தரப்பில் கூறப்பட்ட எவ்வித ஆதாரமும் போதுமானதாக இல்லை. கனடா, இந்தியா போன்ற நாடுகள் புலிகளைத் தடைசெய்த ஆவணங்களை வைத்து ஐரோப்பிய நாடாளுமன்றமும் தடைசெய்தது தவறு.

2011-2015 காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட புலிகளின் சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும். புலிகள் 2009 போரில் தோற்கடிக்கப்பட்ட பின்பு, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழர்களின் அடுத்த இலக்கு, ‘2006-ல் வழங்கப்பட்ட ஐரோப்பியத் தடை தவறான அரசியல் முடிவு; அதனாலேயே தமிழின அழிப்பு நடந்தது’ என்பதே. சட்டத்தின் கதவுகளைத் தொடர்ந்து தட்டுவோம்!

- Vikatan-



 

ஐரோப்பாவில் உடைபட்டது தடை... என்ன செய்யும் இந்தியா? Reviewed by Author on July 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.