அண்மைய செய்திகள்

recent
-

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: அரசு அலுவலகங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்


தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது லஞ்சப்பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.


தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் குறிப்பாக பத்திரப்பதிவு மற்றும் வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஒ.) அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சப்பணம் புரளுவதாக புகார்கள் வந்தன. இதையொட்டி லஞ்சப்பணம் அதிகளவில் எந்தெந்த அரசு அலுவலகங்களில் வாங்கப்படுகிறது என்பதை கடந்த ஒரு மாதமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வின் அடிப்படையில் நேற்று தமிழகம் முழுவதும் லஞ்சப்பணம் அதிகளவில் பரிமாற்றம் செய்யப்பட்ட பத்திரப்பதிவு மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களை குறிவைத்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

நேற்று காலையில் இருந்து குறிப்பிட்ட அலுவலகங்கள் முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். காலையில் இருந்து வாங்கப்படும் லஞ்சப்பணம் மாலையில் தான் ஒன்று சேர்த்து எண்ணுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நேற்று மாலை 3 மணிக்கு மேல் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் புகார் கூறப்பட்ட பத்திரப்பதிவு மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அதிரடியாக புகுந்தனர்.

சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில், மதுரை, விருதுநகர் போன்ற ஊர்களில் சோதனை மேற்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சப்பணத்தை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்தனர். சில இடங்களில் போலீசாரை கண்டதும் லஞ்சம் வாங்கியவர்கள் லஞ்சப்பணத்தை தரையில் வீசி எறிந்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனை பற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பத்திரப்பதிவு மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் செலுத்த வேண்டிய கட்டணத்தை தற்போது ரொக்கப்பணமாக வாங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளின் வாயிலாகவே உரிய கட்டண தொகையை வாங்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்ட பிறகும், அதை மீறி பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் ரொக்கப்பணத்தை கட்டணமாக வாங்குவதோடு லஞ்சப்பணத்தையும் அதிகளவில் வாங்குவதாக புகார்கள் எழுந்தன.

அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் வங்கியின் வாயிலாக கட்டப்பட்டுவிடுகிறது. இந்த நிலையில், ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும், பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் வேலைபார்க்கும் அதிகாரிகளிடமும், ஊழியர்களிடமும் பல ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் பணம் கையிருப்பில் வைத்திருக்கிறார்கள். இந்த பணம் லஞ்சப்பணமாக கருதப்பட்டு கைப்பற்றப்படுகிறது. காலையில் இருந்து மாறுவேடத்தில் கண்காணித்து மாலையில் தான் லஞ்சப்பணம் அதிகளவில் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டோம்.

மதுரையில் சார்பதிவாளர் ஒருவரும், விருதுநகரில் பி.டி.ஓ. ஒருவரும் லஞ்சம் வாங்கியபோது, கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சோதனை நடத்தப்படும். இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று காலையில் இருந்தே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மாறுவேடத்தில் கண்காணித்தனர். மாலை 4 மணி அளவில் தான் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

டி.எஸ்.பி. ஜான் கிளமண்ட் தலைமையில் 10 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். திருவான்மியூர், பள்ளிக்கரணை, வானகரம், மணப்பாக்கம், ஈக்காட்டுதாங்கல் உள்பட பல பகுதிகளுக்கு பத்திரப்பதிவு சைதாப்பேட்டை அலுவலகத்தில் தான் நடைபெறும் என்பதால் அந்த வேலைகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்துகொண்டே இருந்த போதே இந்த சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அந்த அலுவலகத்தில் காலை முதல் நடந்த பத்திரப்பதிவு விவரங்கள், வங்கி வரைவோலைகள் போன்ற விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கணக்கில் வராமல் ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பத்திரப்பதிவு துறை பதிவாளர் சிவபிரியா, அவருடைய உதவியாளர் விஜயகுமார் ஆகியோரிடம் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் விசாரணையால் அவர்கள் இரண்டு பேரும் கலக்கம் அடைந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்தது.

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் திண்டுக்கல், தேனி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் இணை சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.14.75 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.2.10 லட்சமும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூ.1.41 லட்சமும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1.3 லட்சமும், திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.43 ஆயிரமும், கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.9 ஆயிரமும், நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.8 ஆயிரத்து 880-ம், அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூ.1.35 லட்சமும், காரைக்குடி போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் ரூ.40 ஆயிரமும், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.2.6 லட்சமும், நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.3.58 லட்சமும், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1.5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: அரசு அலுவலகங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் Reviewed by Author on October 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.