அண்மைய செய்திகள்

recent
-

பிரதமரிடம் வடக்கு முதல்வர் நான்கு கோரிக்கைகள் முன்வைப்பு -


காணி விடுவிப்பு, கட்டமைப்பு அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் அவசர தேவைகள் ஆகிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஆவணம் ஒன்றைக் கையளித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் வகையில் நேற்று அங்கு சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இந்தக் கலந்துரையாடல்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தபோதும் அவர் அதில் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் தனது கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனது செயலாளர் ஊடாக பிரதமரிடம் நேற்றுக் கையளித்தார்.

அந்த ஆவணத்தின் தமிழாக்கம் வருமாறு:-
அபிவிருத்தித் திட்டங்களை மீளாய்வு செய்தலும் காணிகளை விடுவித்தலும்
1. காணி விடுவித்தல்
படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தையும் மக்கள் காணிகள் ஆயின் மக்களிடமும் அரச காணிகளாகின் மாகாண காணி ஆணையாளரிடமும் கையளிக்கப்பட வேண்டும்.
2013இல் இருந்து காணிகளை எம்மிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டு வருகின்றோம். அரச காணிகள் மேல் எமக்கிருக்கும் சட்ட உரித்து அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் முதலாம் நிரலின் கீழ் வரும் அனுபந்தத்தில் தரப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வேலைகளைப் பொலிஸாரிடம் கையளிக்கலாம். தேவையெனில் ஏதேனும் வேலைகளை படையினர் செய்ய வேண்டி வந்தால் அந்த குறிப்பிட்ட சேவைகளை எமது மேற்பார்வையின் கீழ் அவர்கள் செய்யலாம். அதற்காகப் படையினரை உரிய அதிகாரிகள் இங்கு அனுப்பலாம்.
இன்று வரையில் நிலைபெற்றிருக்கும் ஒரு இராணுவமாகவே போர் முடிந்த பின்னரும் படையினர் இங்கு குடியிருந்து வருகின்றனர். இப்போது அவர்கள் தமது தந்திரோபாயங்களை மாற்றி மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

2. கட்டமைப்புக்களின் அபிவிருத்தி
1. (i) காங்கேசன்துறை துறைமுக வேலைகள் எப்போது ஆரம்பிப்பன?
(ii) தூத்துக்குடி – தலைமன்னார் படகு சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். தொடங்கினால் புலம்பெயர்ந்த எம் மக்கள் தமது உடைமைகளை இங்கு கொண்டுவர முடியும்.
(iii) பாக்குநீரிணையில் இருந்து வெளியேற்றி இழுவைப் படகுகளை வங்காள விரிகுடா, அரேபியன் கடல் போன்றவற்றுக்கு கொண்டு செல்ல இந்திய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும்.
2. பலாலி விமானத் தளத்தை சர்வதேச அல்லது பிராந்திய விமானத் தளமாக மாற்ற வேண்டும். மேலதிக மாகாண காணிகள் சுவீகரிக்கத் தேவையில்லை என்று இந்திய அரசு கூறியுள்ளது.

3. மாகாண ஏரிகள், குளங்கள் என்பன மறு சீரமைக்கப்பட வேண்டும். அப்போது நீர் மட்டத்தின் மேல் சூரிய ஒளிச் சட்டங்களை (Solar) பரவி விடலாம். இது மின்சாரத்தைத் தருவது மட்டுமல்லாது குளத்து நீர் ஆவியாக மாறுவதைத் தடுப்பதாகவும் அமையும்.

4. எமது கிராமத்தில் இருக்கும் மக்கள் அபிவிருத்தி சங்கங்களின் கட்டடங்களைப் சீரமைக்க வேண்டும். அவ்வாறு சீரமைப்பதன் பின்னர் அங்கு கணனிகள் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இதற்கான கோரிக்கை ஏற்கனவே இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
5. அரச மின்நிலைய இணைப்புடன் சேர்க்கும் முகமாக காற்றாடி, சூரிய சக்தி போன்ற பதில் மின்சார உற்பத்தி முறைகளைக் கையாள வேண்டும்.
6. கொக்கிளாயில் வடக்கு – கிழக்கை இணைக்க பாலம் ஒன்று கட்டப்பட வேண்டும்.

3. வீடமைப்பும் மீள் குடியிருத்தலும்
வடமாகாண சபை மூலம் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர வேண்டும். ஆனால் அரசு எம்மை நம்புவதில்லை. வீடமைப்புக்கான செலவு பணம் அனைத்தையும் அரச அதிபர்களுக்கே கொடுத்து வருகின்றீர்கள். அவர்கள் எமது அலுவலர்களைக் கொண்டே வேலைகளைச் செய்து முடிக்கின்றார்கள்.
இந்தப் பணத்தை நேரடியாக எமக்கு அனுப்புவதில் என்ன தயக்கம்? மக்களால் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆனால் எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை.
கேப்பாப்புலவு போன்ற இடங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. உடனே அவை விடுவிக்கப்பட வேண்டும். அதை விட்டு காணிகளைத் தம் கைவசம் வைத்திருக்க படையினர் முனைந்தால் அது சம்பந்தமாக வெளிப்படையான விசாரணைகள் நடைபெற இடம் அளிக்க வேண்டும்.
விசாரணை நடைபெற்றால் படையினர் கோரும் காணிகள் அவர்கள் செய்யும் வேலைக்கு தேவையானதல்ல என்பதனை நாம் எடுத்துக் காட்ட முடியும்.

4. அவசரமான தேவைகள்

(1). பிரதேச சபை வீதிகள் திருத்தப்படவேண்டும். போக்குவரத்துக்கு உகந்ததாக வீதிகள் சரிசெய்து கொடுக்கப்பட வேண்டும். திணைக்கள வீதிகளின் அபிவிருத்தியும் பார்க்கப்பட வேண்டும்.
(2) i. முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டம் ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டு வர வேண்டும். தேவையில்லாமல் அதனைத் தாமதப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்.
ii. மாகாண, மத்திய அலுவலர்களின் வெற்றிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும்.
iii. செங்குத்தான கட்டடம் அமைக்கும் செயற்றிட்டத்தை யாழ்ப்பாணத்தில் அமைக்க அமைச்சர் பைசர் முஸ்தபா முன் வந்தார். ஆனால் திடீரென அதற்கான நிதிகள் வேறெங்கேயோ மாற்றப்பட்டு விட்டன. விட்ட இடத்தில் இருந்து இந்த செயற்றிட்டம் தொடர ஆவன செய்ய வேண்டும்.
(3). பெரும் நகர அமைப்பு அமைச்சரல் யாழ். மாநகர சபைக் கட்டடம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. ஆரம்ப வேலைகளும் முடிந்துவிட்டன. இதற்குரிய நிதியம் வேறெங்கோ கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
(4). வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களில் மீள்குடியமர்வு முறையாக நடப்பதை உறுதி செய்ய ஒரு சிறப்பு சிவில் செயலணி நியமிக்கப்பட வேண்டும். மயிலிட்டியிலும் நியமிக்கப்பட வேண்டும்.
(4) i. இரணைதீவில் சிவில் நிர்வாகம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
(4) ii. வவுனியா, மன்னார் ஆகிய இடங்களுக்கு தமிழ் அரச அதிபர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் சிங்களவர்களைத் தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழர்களைச் சிங்கள பிரதேசங்களுக்கும் நியமிக்கும் ஒரு கொள்கை உங்களுக்கிருந்தால் யாழ்ப்பாணத்திற்கு அல்லது கிளிநொச்சிக்கு சிங்களவர் ஒருவரை நியமியுங்கள்.
எல்லைப்புற மாவட்டங்களுக்கு சிங்கள அரச அதிபர்களை நியமிப்பதால் சட்டப்படி காணிகளை உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் கொடுக்காமல், அவர்கள் மாகாணத்துக்கு வெளியில் இருந்து மக்களைக் கொண்டு வந்து வடமாகாண காணிகளில் குடியேற்றுகின்றார்கள்.
(4) iii. தமிழ் மொழியில் உயர் கல்வி கற்கவும் வணிகம் பற்றி கற்கவும் ஏதுவாக வடமாகாண சபை தமிழ்நாட்டுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட அனுமதி தாருங்கள்.

(5). பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் நடைபெற்ற படியால் மகாவலிச் சட்டம், நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம் போன்றவற்றிற்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அதாவது மாகாண அதிகாரங்களைப் பாதுகாத்து சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
தற்போது மாகாணங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்ற அடிப்படையிலேயே அவர்கள் செயலாற்றுகின்றார்கள்.

(6). தீவிரவாத தடுப்புச் சட்டத்தை உடனே கைவாங்க வேண்டும்.
(7). அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றுள்ளது.

பிரதமரிடம் வடக்கு முதல்வர் நான்கு கோரிக்கைகள் முன்வைப்பு - Reviewed by Author on May 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.