அண்மைய செய்திகள்

recent
-

எங்களை நாங்களே பார்த்துக்கொள்கின்றோம்! சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை -


கடந்த மூன்று வரவு செலவுத் திட்டமுன் மொழிவுகளும் நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்திசைவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எனினும், அதில் தமிழ் மக்களுக்குக் குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கக்கூடிய ஒதுக்கீடுகளோ அல்லது திட்டங்களோ உள்வாங்கப்படாதது கவலையளிக்கின்றது” என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“வட மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை கையேற்ற தினத்தில் இருந்து இன்று வரை எமது மாகாண முன்னேற்றத்திற்காக கூடுதலான நிதிகளை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கூறி வருகின்றோம்.
இப்பகுதியில் உள்ள வீடு இழந்தவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும், வாழ்வாதாரங்களை, தொழில் முயற்சிகளை இழந்தவர்களுக்கு உரிய உதவிகளை வழங்கி மீண்டும் அவர்களை அடிப்படை நிலைக்காவது கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தொடர்ந்தும் பல்வேறு கோரிக்கைகளை மேற்கொள்ளுகின்ற போதும் அரசு எமது கோரிக்கைகளை கண்டுகொள்வதாக இல்லை.

மாறாக மத்திய அரசின் அமைச்சர்களின் நிதி ஒதுக்கீடுகளைக் கூட்டி அவர்களுக்கு ஊடாக எமக்கு உதவிகளை வழங்க எத்தனிக்கின்றார்கள். அதற்கு மாவட்டச் செயலகங்களைப் பாவிக்கின்றார்கள்.
ஆனால் வேலைகளை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் மாகாண சபையால் சம்பளம் கொடுக்கப்படுகின்ற எமது அலுவலர்களே. இந்த நிலை மாற வேண்டும்.

1992ம் ஆண்டின் 58வது இலக்க சட்டமே மாவட்டச் செயலர்களையும் கிராம சேவகர்களையும் மேலும் சிலரையும் எம் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மத்தியின் கட்டுப்பாட்டுக்குள் இழுத்தது.
குறித்த சட்டம் வாபஸ் பெற்று, அச் சட்டம் வர முன்னிருந்த நிலை கொண்டுவரப்பட வேண்டும். இன்று சமாந்தர நிர்வாகங்கள் நடைபெறுகின்றன. மாகாணசபையால் ஒன்று. மத்தியால் இன்னொன்று.
அதையும் விட அண்மைக் காலத்தில் ஆளுநரின் ஆட்சியும் மூன்றாம் நிர்வாகமாகத் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இவை அனைத்திலும் பாதிக்கப்படுவது மக்களே.

அதிகாரப் பகிர்வு என்று பேச்சுக்குப் பேச்சு அரசாங்கங்கள் கூறிவந்தாலும் மத்தியின் அதிகாரங்களைப் பகிர அரசாங்கத்தினர் முன் வருகின்றார்கள் இல்லை.
அதனால்த்தான் நாங்கள் எங்களை நாங்களே பார்த்துக்கொள்ள, எம் மக்களை நாங்களே சிறப்பாக வழிநடத்த சமஷ்டி முறையிலான ஒரு அரசியல் யாப்பைக் கோரி வருகின்றோம்.
ஆனால் சமஷ்டி பிரிவினைக்கு அடிகோலும் என்ற தப்பபிப்பிராயம் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளதால் உண்மையான அதிகாரப் பகிர்வை இந் நாட்டில் ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது.

அதனால் தான் ஒன்பது மாகாணங்களும் சுயாட்சியைக் கோர வேண்டும் என்றும் எந்த இரு மாகாணங்களோ அதற்கு மேற்பட்டவையோ தமக்குள் இணைய வழி வகுக்க வேண்டும் என்ற கருத்தை எமது சிங்கள சகோதரர்கள் மத்தியில் பரப்பி வருகின்றேன்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே 1987ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டத்திற்கு வழி வகுத்தது. அதனை முழு நாட்டுக்கும் ஏற்புடைத்தாக்கினார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள்.

அதே போல் மாகாண சுயாட்சியை எல்லா மாகாணங்களும் கேட்டுப்பெற வேண்டும் என்ற கருத்தைப் பரப்பி வருகின்றேன்.
இன்று எமது அரசியல் தலைவர்களின் நிபந்தனை அற்ற ஆதரவுகளைத் தமக்குச் சாதகமாகப்பயன்படுத்தி கடந்த மூன்று வரவு செலவுத் திட்டமுன் மொழிவுகளும் நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்திசைவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால் அதில் தமிழ் மக்களுக்குக் குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கக்கூடிய ஒதுக்கீடுகளோ அல்லது திட்டங்களோ உள்வாங்கப்படாதது கவலையளிக்கின்றது.

இவற்றை நாம் பகிரங்கமாக எடுத்துக்கூறினாலோ அல்லது அது பற்றி இடித்துரைத்தாலோ அரசு எம்மைப் பயங்கொண்டு பார்க்கின்றது. பயங்கரவாதிகள் என்று கூடப் பகர்கின்றது.
ஆனால் எம்மீது அரசாங்கத்தினர் சினம் கொண்டுவிடுவார்கள் என்பதற்காக எம்மை நம்பி வாக்களித்த மக்களின் தேவைகளைப் பற்றி அரசிற்கு எடுத்துக்கூறாது அவர்களை இன்முகங்காட்டி வரவேற்று உபசரிப்பது எமது மனச்சாட்சிக்கு விரோதமாக நாம் நடப்பதாக அமையும்.
இதனால் தான் நான் இன்முகம் காட்டி வரவேற்கும் அதே நேரம் அரச தலைவர் முன்னிலையிலோ , அமைச்சர்கள் முன்னிலையிலோ எமது மக்களின் பிரச்சனைகளையும்தேவைகளையும் இடித்துரைக்கப் பின் நிற்பதில்லை.

பாதிப்புக்களுக்கு உள்ளாகாத ஏனைய மாகாணங்களுக்கு வழங்குகின்ற முறையிலேயே 30 வருடங்களுக்கு மேல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது வடபகுதிக்கும் நிதிப் பங்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றனர்.
இம் முறை தவறானதென்றும் பாதிப்புக்குள்ளான எமக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்படியும் கோரினால் அதனை எமக்குத் தராது நாம் அபிவிருத்தி செய்யவில்லை என்று எம்மீது குறைகூறுகின்றார்கள் அல்லது தராத நிதி திரும்பிவிட்டதாக விசமப் பிரசாரம் மேற்கொள்ளுகின்றார்கள்.
எமது பாதிப்படைந்த பிரதேசத்தை முன்னேற்றுவதற்காக எங்கள் புலம்பெயர்ந்த உறவுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்று எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என்ற நோக்கில் எம்மால் ஆக்கப்பட்ட முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டத்தை நான்கு வருடங்களாக அங்கீகாரம் வழங்காது தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இழுத்தடிப்புச் செய்வது எமது வளர்ச்சியை எவ்வகையிலேனும் முடக்கிவிட வேண்டும் என்ற கபட நோக்கிலான செயற்பாடோ என்று எண்ணவேண்டியுள்ளது.
வெளியில் இருந்து வரும் நிதிகள் அனைத்தும் மத்திக்கூடாகக் கொண்டு வர வேண்டும் என்பது தேவையற்ற ஒரு செயற்பாடு. ஏன் என்றால் எமது முதலமைச்சர் நிதியமும் நாட்டின் கணக்காளர் நாயகத்தின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையிலேயே நடைமுறைப்படுத்தப்படும்.

இதனால்த்தான் ஒரு இன ரீதியான சிந்தனை மத்திய அரசாங்கத்தை இவ்வாறான தவறுகளைச் செய்ய வைக்கின்றதோ என்று சிந்திக்க வைக்கின்றது.
இந்த மாகாணத்தை முன்னேற்றுவதற்கு நாங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு மத்தியஅரசு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்ற போதும் நாம் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து முன்நோக்கிச் செல்வதற்கு முடிந்தவரை முயற்சிக்கின்றோம்.

அதன் ஒரு வெளிப்பாடாக இன்றைய இந்த மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கின்ற இந்த நிகழ்வும்கொள்ளப்படலாம். ஏனென்றால் மாற்றுத்திறனாளிகள், போரினால் பாதிக்கப்பட்டோர் சம்பந்தமாக மத்திய அரசாங்கம் அதிகம் அலட்டிக் கொள்ளாமலேயே இருந்து வருகின்றது.
எனவே எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு நீங்கள் அனைவரும் உங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன் வர வேண்டும்.

அரசின் நில அபகரிப்பு, பாரபட்ச நடவடிக்கைகள், வனத்தின் பெயரால்மக்களின் நில அபகரிப்பு,கடல் வளங்களைச் சூறையாடல் போன்ற கபளீகரங்களில் இருந்து எமது மக்களைப் பாதுகாப்பதற்கு நீங்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

யுத்தத்தினால் நொந்துபோய் இருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுவலுவுள்ள குடும்பங்கள் என அனைத்துத்தர மக்களையும் முன்னேற்றுவதற்கு எம்முடன் கைகோர்க்க நீங்கள் யாவரும் முன்வர வேண்டும் எனவினயமாக கேட்டுக்கொள்கின்றேன்” என கூறியுள்ளார்.
எங்களை நாங்களே பார்த்துக்கொள்கின்றோம்! சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை - Reviewed by Author on July 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.