அண்மைய செய்திகள்

recent
-

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா? சீமான் சீற்றம் -


மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறைதண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ராஜூவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களுக்கு ஒரு நீதியா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இந்திய ஆயுதச்சட்டத்தில் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் கருணை மனு குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
எனினும், மராட்டிய மாநில அரசே அவரை விடுதலை செய்திருக்கிற தகவலானது தம்பி பேரறிவாளன் தொடுத்தத் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிய வந்திருப்பது ஏழு தமிழர்களை விடுதலை செய்யத் தமிழக அரசுக்குத் தடையேதுமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

250க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆறாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர், அது ஐந்து ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தால் குறைக்கப்பட்டது.
மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட தண்டனை பெற்ற சிறைவாசியான அவருக்கு, அச்சிறைக்காலத்தில் எல்லா சலுகைகளும், சிறை விடுப்பும் மாநில அரசாங்கத்தாலே அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சஞ்சய் தத் அவர்கள் தண்டனைக்காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பாகவே மராத்திய மாநில அரசால் விடுதலைசெய்யப்பட்டார் என்பதும் கடந்த மாதம் கிடைக்கப்பெற்ற ஆர்.டி.ஐ. மனுவால் வெட்டவெளிச்சம் ஆனது.
இப்போது, டிசம்பர் 2015ல் சஞ்சை தத் அவர்களின் முன் விடுதலைக்காக அனுப்பப்பட்டக் கருணை மனுவும் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் குடியரசுத் தலைவரால் முன்விடுதலைக்கான கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஒரு சிறைவாசிக்கு, மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தின்படி, முன்விடுதலை செய்யலாம் என்பது நிரூபணமாகியுள்ளது.
மேலும், நன்னடத்தையின் அடிப்படையில் எந்த ஒரு சிறைவாசியையும் மாநில அரசே முன் விடுதலை செய்யலாமா? என்கிற சந்தேகமும் தெளிவடைந்துள்ளது.

இப்படி மாநில அரசாங்கத்தின் அனைத்து அதிகாரமும் உறுதிசெய்யப்பட்டப் பின்பும், எந்த சட்டவிதி மீறலும் இல்லாமல், எழுவர் விடுதலைக்காக 161வது சட்டப்பிரிவின்படி, தமிழகச் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஏறக்குறைய ஒரு வருடத்தைக் கடக்கவிருக்கிற நிலையில் இன்னும் அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் தராது மௌனம் சாதிக்கிறார் தமிழக ஆளுநர்.
இது அப்பட்டமான விதிமீறல். மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற ஓர் அரசின் முடிவை, மக்களால் தேர்வுசெய்யப்படாத ஆளுநர் தடுத்து வைத்திருக்கிறார் என்றால், இது மக்களாட்சித் தத்துவத்திற்கே மாபெரும் பாதகத்தையும், களங்கத்தையும் ஏற்படுத்துவதாகும்.

சட்டமும், நீதியும் அனைவருக்கும் சமம் எனும் அரசியலமைப்புச் சாசனத்தின் அடிநாதத்தையே புறந்தள்ளி சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதி? எனப் பாகுபாடு காட்டுவது தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகார அத்துமீறல். அதனைச் சனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட, நீதியின்பால் நம்பிக்கை கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, சஞ்சய் தத் வழக்கில் மத்திய அரசு விடுதலையை நிராகரித்தபோதும் மாநில அரசே தண்டனைக்கழிவு வழங்கி விடுதலையைத் தந்த நடைமுறையை அடியொற்றி, தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனைக்கழிவு வழங்கி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா? சீமான் சீற்றம் - Reviewed by Author on June 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.