அண்மைய செய்திகள்

recent
-

பிக்குகளின் அடாவடியால் வெட்கித் தலைகுனிகின்றோம் - பிரதமர் ரணில் கவலை -


“இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.”
இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் மக்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலய வளாகத்துக்குள் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்டமையால் இன்று அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு தரப்பினர் பௌத்த பிக்குகள் சிலரை தமது அரசியலுக்கு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள். இந்த அரசியல் நாடகம்தான் முல்லைத்தீவு - நீராவியடியில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இறந்த விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்குப் பொருத்தமான இடத்தை நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், அதனை மீறி - நீதிமன்றத்தை அவமதித்து தாம் நினைத்த மாதிரி பௌத்த பிக்குகள் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.

கொழும்பிலிருந்து சென்ற பிக்குகள் தலைமையிலான குழுவினர் சர்ச்சைக்குரிய இடத்தில் - இன, மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் இடத்தில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்துள்ளார்கள்.
இந்த அடாவடியில் ஈடுபட்ட பிக்குகளை ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ஒரு தரப்பினர் இயக்குகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டமிட்ட வகையில் இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” - என்றார்.
பிக்குகளின் அடாவடியால் வெட்கித் தலைகுனிகின்றோம் - பிரதமர் ரணில் கவலை - Reviewed by Author on September 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.