அண்மைய செய்திகள்

recent
-

பெருகும் கொரோனா தாக்கம்: ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முயன்ற அகதிகளின் நிலை என்ன?

உலகெங்கும் பரவியுள்ள கொரோனா  வைரஸ் தொற்று குறித்த அச்சம் ஆஸ்திரேலியாவிலும் பெருகியுள்ள நிலையில்,ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள பல்வேறு நாடுகளின் அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றக்கோரி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முயன்ற இந்த அகதிகள், சுமார் 7 ஆண்டுகளாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் செயல்படும் ஆஸ்திரேலிய முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலையில், நவுருவில் 210 அகதிகளும் பப்பு நியூ கினியாவில் 220 அகதிகளும் வைக்கப்பட்டுள்ளனர். பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதியான சமிந்தா கணபதி, கொரோனா வைரஸ் காரணமாக அகதிகளிடையே அச்சம் பெரிதும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்.
“முறையான மருத்துவ உதவி இல்லாத காரணத்தினால் பல அகதிகளுக்கு உடல்நில பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, அவ்வாறான அகதிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளது,” என்கிறார் தமிழ் அகதியான கணபதி.

“இங்குள்ள சுகாதார வசதியைக் கொண்டு இத்தொற்று சிக்கலை கையாள முடியாது.”

இதே போன்ற கருத்தை முன்வைக்கும் ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில், பப்பு நியூ கினியா மற்றும் நவுருவில் பெருமளவில் தொற்று பரவும் போது அதை அவர்களால் சமாளிக்க முடியாது என்கிறது.

ஆஸ்திரேலியாவின் பொருளாதார உதவியைக் கொண்டுக் கூட சமாளிக்கும் அளவில் இந்நாடுகளில் சுகாதார வசதிகள் இல்லை எனக் குறிப்பிடும் அகதிகள் கவுன்சில், “ஏற்கனவே பல அகதிகளுக்கு உடல்நலப் பிரச்னைகள் உள்ள நிலையில் இது அவர்களுக்கு மேலும் பின்விளைவினை ஏற்படுத்தக்கூடும்,” எனத் தெரிவித்துள்ளது.

இதனால், பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவிலிருந்து அகதிகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட வேண்டும் என்கிறது அகதிகள் கவுன்சில்.

இந்த இரு தீவு நாடுகளும் கொரோனா அச்சம் காரணமாக அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. பப்பு நியூ கினியாவை பொறுத்தமட்டில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“உள்ளூர் பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் எவ்வித கையுறைகளையோ முகமூடிகளையோ பயன்படுத்துவதில்லை. சானிடைசரையும் உபயோகிப்பதில்லை,” எனத் தெரிவிக்கிறார் கணபதி.

பப்பு நியூ கினியாவின் கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பின் சார்பாக அத்தீவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெல்டா வோங்க்கு எழுத்தப்பட்டுள்ள கடிதத்தில், மோசமான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் முந்தைய அரசாங்கத்தால் அகதிகள் பப்பு நியூ கினியாவுக்கு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மரணங்களை தவிர்க்கவும் தேசிய அளவில் பெரும் அசாம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கவும் மருத்துவ ரீதியாக பாதுகாப்பான சூழலுடைய ஆச்திரேலியாவுக்கு மாற்றப்பட வேண்டும்,” என கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




பெருகும் கொரோனா தாக்கம்: ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முயன்ற அகதிகளின் நிலை என்ன? Reviewed by Author on April 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.