அண்மைய செய்திகள்

recent
-

சுமந்திரன் தமிழரசு கட்சியில் நீடித்தால் அது சம்பந்தன்,மாவையின் பலவீனமே ரெலோ, புளொட் மீதும் சிவசக்தி ஆனந்தன் சீற்றம்

தமிழின உரிமைப் போராட்டத்தின் ஓரங்கமான ஆயுதப் விடுதலைப் போராட்டத்தினை இவ்வளவு மோசமாக கொச்சைப்படுத்திய பின்னரும் சுமந்திரன் இலங்கை தமிழரசுக்கட்சியில் நீடித்தால் அது அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், தலைவர் மாவை.சேனாதிராஜாவின் முதுகெலும்பற்ற பலவீனத்தன்மையையே வெளிப்படுத்துவதாக இருக்கும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கூட்டமைப்பின் பேச்சாளராக சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்களின் ஆழத்தினையும் பின்னணியினையும் நன்கறிந்த ஆயுதவிடுதலை போராட்டவழி வந்த ரெலோ, புளொட் தரப்புக்கள் வெறுமனே கண்டன அறிக்கைகளுக்கு அப்பால் இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவெடுப்பதற்கு திராணியிருக்கின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்குவெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தந்தை செல்வா முதல் அமிர்தலிங்கம் வரையில் சாத்வீக ரீதியாக முன்னெடுத்த போராட்டங்களின் மீதான அடக்குமுறையும், கையறு நிலையுமே 1976இல் வட்டுக்கோட்டையில் தனிஈழ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனைநோக்கிய ஆயுத போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு காரணமாகியிருந்தன. தமிழ்த் தலைவர்கள் ஆயுதரீதியான விடுதலைப் போராட்டத்தினை அப்போதைய இளைஞர்களிடத்தில் ஒப்படைத்தனர்.

தமிழின விடுதலைக்காக ஆயுதமேந்திய அனைத்து இயக்கங்களிலும் தங்களை இணைத்துக்கொண்ட ஒவ்வொரு தமிழ் மகனும் தன் அன்புக்குரியவர்களை விட்டு பிரிந்து அடுத்த சந்ததியினர் உரிமைகளுடன் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தனது இன்னுயிரை ஈகம் செய்வதற்கு தயாராகவே இருந்துள்ளார்கள். அவ்விதமாகவே செயற்பட்டுள்ளார்கள். இதில் ஆயுத விடுதலைப் போராட்டத்தினை மூன்று தசாப்த நீட்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் பதிவு செய்துள்ளார்கள். என்பதே வரலாறு.

ஆயுதப் போராட்டத்திற்கு பிள்ளையார் சுழியிட்டு தீர்மானங்களை எடுத்த (சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின்) பெருந்தலைவர்களான தந்தை செல்வாவும், அமிர்தலிங்கமும் வழிநடத்திய தமிழரசுக்கட்சிக்குள் இருந்துகொண்டு, அவர்களை முட்டாள்கள் என்று கூற விளைகின்றாரா?

ஆயுதப்போராட்ட காலத்தில் போராட்டம் பற்றி எதுவுமறியாது, எந்தப் பங்களிப்பும் செய்யாது, கொழும்பில், குளிர் அறைகளில் படுத்துறங்கி ஒருதுளி வேர்வை சிந்தாது இருந்து அரச, அரசசார்பான தரப்பின் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் வருமானம் ஈட்டிவிட்டு ஆயுதவிடுலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதும் புற்றீசல் போன்று வெளியில் வந்து அரசியல் களம்புகுந்த சுமந்திரனுக்கு தமிழினத்தின் வரலாறும்,இளைஞர்களின் வலிகளும்இதியாங்களும்,ஈகங்களும் தெரியுமா?

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு ஐ.நா.மன்றின் முன் நீதிகேட்டு தமிழினம் நிற்கையில் தன் எஜமானரை திருப்திப்படுத்துவதற்காக தனியாளாகச் சென்று மைத்திரி-ரணில் நல்லாட்சியுடன் சேர்ந்து தீர்மானங்களில் அத்தனை மலினப்படுத்தல்களையும் செய்து,தீர்மானங்களை நீர்த்துப்போகச் செய்துவிட்டுவந்தார் சுமந்திரன் என்பது யாவரும் அறிந்ததே.

கூட்டமைப்பினுள் இருந்த காலத்தில் இந்த விடயத்தினை நாங்கள் பலதடைவகள் சுட்டிக்காட்டியபோது, ஜெனீவா விடயங்களை கையாளத்தெரிந்தவர் சுமந்திரனே என்று சம்பந்தனும், மாவையும் கூறி நியாயப்படுத்தினார்கள். அது மட்டுமல்லாது தற்போது ஜெனீவா தீர்மானம் மிகமிக மோசமாக மலினப்படுத்தப்பட்டு அடுத்த நகர்வுக்கே வழியில்லாது இருப்பதற்கும், ராஜபக்ஷ அரசு அதிலிருந்து துணிகரமாக விலகியமைக்கும் சுமந்திரனே காரண கர்த்தாவாகின்றார்.

அத்தகையவராகிய சுமந்திரனும்,மாவையும் தற்போது ராஜபக்ஷவினருடன் பேரம்பேசி நீதியைப் பெற்றுத்தரப்போவதாக தமிழ் மக்களுக்கு கூறுகின்றனர். இவ்வாறு கூறி ராஜபக்ஷவினருடன் கைகோர்த்து மீண்டும் சுயலாப அரசியலை முன்னெடுப்பதற்கே இவர்கள் திட்டமிடுகின்றனர். இந்த காய்நகர்த்தலை புரியாத அளவுக்கு தமிழ் மக்களை முட்டாள்களாகவும் தமக்கு வாக்களிக்கும் இயந்திரங்களாகவும் எண்ணுகின்றார்கள்.

இவ்வாறு மெல்லமெல்ல ஆயுத போராட்டத்தின் மீதும், ஆயுத இயக்கங்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஈற்றில் சிங்களத்தின் ஒற்றையாட்சிக்கு மண்டியிட்டு சுகபோகங்களை அனுபவிப்பதே சுமந்திரனின் திரைமறைவு நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த தமிழினத்தினையும் பலிக்கடாவாக்குவதற்கு இடமளிக்கமுடியாது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது உள்மனதில் வஞ்சம் கொண்டிருந்த சம்பந்தனும்இதலைமைத்துவ பண்புகளற்ற கையறு நிலையில் இருக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவையும், விடுதலைப்புலிகளை மறவர்களாக கொண்டு மேடைப்பேச்சுக்களில் வெளிப்படுத்தும் சிறிதரன் உள்ளிட்டவர்களும், பங்காளிகட்சிகளான புளொட், ரெலோ இயக்கங்களும், சுமந்திரனின் முன்னால் மண்டியிட்டு பெட்டிப்பாம்பாக அடங்கியே இருந்தனர். நல்லாட்சி அரசின் நான்கரை வருடங்களிலும் சுமந்திரன் காட்டிய இடங்களிலெல்லாம் கையுயர்த்தியும்,கையெழுத்திட்டும் வந்தனர் என்பதே சான்று.

எனவே கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோவும், புளொட்டும் வெறுமனே கண்டன அறிக்கைகளுடன் இந்த விடயத்தினை கைவிட்டு ஆசன அரசியலை முன்னெடுக்கப்போகின்றார்களா என்பது பிரதான கேள்வியாகின்றது. அவ்வாறு முன்னெடுப்பார்களாயின் அவர்களின் இயக்கங்களிலும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஏனைய இயக்கங்களிலும் ஆகுதியாகிய போராளிகளின் ஆத்மாக்களுக்கும், தமிழ் மக்கள் சிந்திய இரத்தங்களுக்கும் என்ன பதிலளிக்கப்போகின்றார்கள் என்பதும் முக்கியமாகின்றது.

அதேபோன்று, ஒட்டுமொத்த தமிழினமுமே ஏதோவொரு விடுதலை இயக்கத்தின் மூலம் ஆயுதப்போராட்டத்தினை ஏற்று உணர்வெழுச்சியுடன் ஆதரித்திருக்கின்றார்கள். இந்நிலையில் அந்த மக்கள் முன் வாக்குகளுக்காக மண்டியிடப்போகும் தமிழரசுக்கட்சி இனியும் சுமந்திரனை தன்னுடன் இணைத்து வைத்திருக்கின்றப்போகின்றதா?
அதேவேளை சம்பந்தன் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக மிகவும் கடுமையான மோசமான விமர்சனங்களை விதைத்து வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கான சாட்சியாக ஒலி,ஒளி ஆவணங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.

தமிழ் மக்களின் பேரழிவோடு யுத்தம் நடந்து முடிந்த போது அதனை முடித்து வைத்த அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு பாராளுமன்றத்தில் பாராட்டு தெரிவித்தார் சம்பந்தன். அதுமட்டுமல்லாது, 'நான் இப்போதுதான் திருகோணமலைக்கு பாதுகாப்பாக சென்றுவரக்கூடியதாக உள்ளது' எனவும் தெரிவித்திருந்தார். சுமந்திரனின் தலைவர் சம்பந்தனின் வழியில் தொண்டர்களும் செயற்படுகின்றனர் என்பதற்கு இது நல்லதொரு உதாரணமும் தமிழினத்தின் பெரும் சாபக்கேடுமாகும்.

தமிழரசுக் கட்சியினதும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் பேச்சாளராக விளங்கும் சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் அவரின் தனிபட்ட கருத்துக்களே என சம்பந்தனும் மாவையும் எப்போதும் கூறிவருவது நகைப்பிற்கிடமானதே.

மரணித்த மாவீரர்களின் உடலங்களின் மீது நின்று வாக்குகளுக்காக அரசியல் செய்கின்ற நிலையில் தமிழரசுக்கட்சி உள்ளதென்ற வரலாற்று கறையை சுமப்பதை தவிர்க்கவே முடியாதுபோகும்.

அதுமட்டுமன்றி விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி வரும் சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழரசுக்கட்சி நடவடிக்கைகளை எடுப்பதற்கு இயலாதிருக்குமாயின், பலவீனமான தமிழரசுக்கட்சியானது மீண்டும் ஒருமுறை முதுகெலும்பற்ற பலவீனமான அரசியல் கட்சி என அம்பலமாகுவதை தவிர்க்கவே முடியாது என்றுள்ளது.
சுமந்திரன் தமிழரசு கட்சியில் நீடித்தால் அது சம்பந்தன்,மாவையின் பலவீனமே ரெலோ, புளொட் மீதும் சிவசக்தி ஆனந்தன் சீற்றம் Reviewed by Author on May 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.