அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும்...!!!

அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளதாக ஊடகங்களில்  வெளியான செய்திகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், சுமந்திரன் தனக்கும்  டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

புத்தூரில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன் ” தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக கன்னியா வென்னீரூற்றை பறி கொடுக்க முன்வந்தது போல் நாளை அமைச்சுப் பதவிகளுக்காக கோணேஸ்வரத்தையும் நல்லூரையும் பறி கொடுக்கத் தயங்க மாட்டார்கள் இவர்கள்” என்றும் கூறியிருக்கிறார்.

விக்னேஸ்வரன் அங்கு மேலும் கூறுகையில்,

அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் திரு.சுமந்திரன் அவர்கள் அறிவித்துள்ளதாக வெளிவந்துள்ள ஊடக செய்திகள் எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணை தரவேண்டும் என்று துணிந்து வெட்கம் இல்லாமல் கேட்டிருக்கின்றார். எமது தமிழ் மக்களை திரு.சுமந்திரன் அவர்கள் எந்தளவுக்கு முட்டாள்கள் என்றும், சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

அத்துடன் முன்னைய ஆட்சியிலும் அமைச்சுப் பதவிகளை பெற்றிருந்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர் கூறி இருக்கின்றார். இது எந்தளவுக்கு  சரணாகதி அரசியல் சிந்தனைக்குள்ளும் சலுகை அரசியல் சிந்தனைக்குள்ளும் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டிருக்கின்றது என்பதைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இதனால் எந்தளவுக்கு இனஅழிப்பு மற்றும் போர்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெறுவதை தடுத்து நிறுத்தும் வகையிலும் கூட்டமைப்பு இதுகாறும் செயற்பட்டிருக்கின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் அத்தகைய ஒரு பெரும் துரோகத்துக்கும் காட்டிக்கொடுப்புக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகிவருகின்றது என்பதை திரு. சுமந்திரன் அவர்களின் பேச்சு எடுத்துக் காட்டுகின்றது. அவர் அபிவிருத்திக்காக அமைச்சுப்பதவிகளைப்  பெறவேண்டும் என்று கூறுவது வெறும் முதலைக்கண்ணீர் வடிப்பதாகும். தமிழ் மக்களின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் வட மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சர் நிதியத்தை ஏற்படுத்தி வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறுவதற்கு திரு.சம்பந்தனும் திரு.சுமந்திரனும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கி இருப்பர். முதலமைச்சர் நிதியத்தை நாம் பெற அவர்கள் எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. மாறாக முறைமுக எதிர்ப்புக்களையே தெரிவித்து வந்தனர்.

திரு. சுமந்திரனின் கூற்றில் முரண்பாடு இருக்கிறது. இது எந்தளவுக்கு அவரின் கண்களை அமைச்சு பதவிகள் மறைக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதாவது அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றமைக்காக திரு.ஜி. ஜி பொன்னம்பலம் அவர்கள் பின்னர் வருந்தியதாகத் தெரிவிக்கும் திரு.சுமந்திரன், தாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறப்போவதாகக் கூறுகின்றார்.

ஒரு பெரும் இனப்படுகொலையை நிகழ்த்திய அரசாங்கத்துக்கு எதிராக நிலத்திலும் புலத்திலும் எமது மக்கள் அல்லும் பகலும் போராடும்போது தம்மைக் காப்பாற்றும் வகையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைவதற்கு எவ்வாறு திரு.சுமந்திரனுக்கு சிந்தனை தோன்றியதோ என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று அமைச்சரவையில் அங்கம் வகித்து எவ்வாறு எமது மக்களுக்கான இன அழிப்புக்கு நீதி பெறுவார்கள் என்பதையும் எவ்வாறு பொறுப்புக்கூறல் பொறிமுறையை  ஐ. நா ஊடாக முன்னெடுப்பார் என்பதற்கான அவரின் திட்டத்தையும் எமது மக்கள் முன் திரு.சுமந்திரன் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். அதாவது இன அழிப்புக்கு இனிமேல் நான் நீதி கேட்க மாட்டேன். பொறுப்புக்கூறல் பொறி முறையை நான் ஐ.நா ஊடாக முன்னெடுக்கமாட்டேன் என்று அவர் இனி வெளிப்படையாகக் கூறி எம் மக்களிடம் வாக்குக் கேட்க வேண்டும்.

கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களால் எதைச் சாதிக்க முடிந்தது? திரு.சுமந்திரன் மட்டும் அரசாங்கத்தில் அமைச்சர் ஆகினால் எமது மக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க போகின்றாறா? டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்  ஆகியோருக்கும் திரு.சுமந்திரனுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று இப்போது ஆகிவிட்டது. இதே டக்ளஸைத்தான் திரு.சுமந்திரன் முன்னைய காலங்களில் வெகுவாக விமர்சித்தார். அவரின் கட்சியினர் டக்ளஸை துரோகி என்றார்கள். இப்போது அவரின் கட்சி திரு. சுமந்திரன் பற்றி என்ன கூறப்போகின்றது?

போராடாத எந்த இனமும் விடுதலை பெறப்போவதில்லை என்பது உலக நியதி. உண்மை அப்படி இருக்க, சலுகைகளுக்கும், பதவிகளுக்கும், சரணாகதி அரசியலுக்கும் எமது மக்களை மூளை சலவை செய்ய முயலுகின்றார் திரு.சுமந்திரன்.

ஆகவே, எனதருமை மக்களே, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக கன்னியா வென்னீரூற்றை பறி கொடுக்க முன்வந்தது போல் நாளை அமைச்சுப் பதவிகளுக்காக கோணேஸ்வரத்தையும் நல்லூரையும் பறி கொடுக்கத் தயங்க மாட்டார்கள் இவர்கள். நீங்கள் தீர்க்கமான முடிவெடுக்கும் காலம் வந்துவிட்டது.  உங்களை சுற்றி ஒரு பெரும் சதிவலை பின்னப்பட்டு வருகின்றது. அதை முறியடித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஆசனம்  கூடப்  பெறமுடியாமல் செய்து ஒரு பெரும் வரலாற்றுத் தீர்ப்பினை நீங்கள் அக் கட்சிக்கு அளித்து அதர்மத்துக்கு சாவுமணி அடிக்கும் காலம் வந்துவிட்டது. தம்பி பிரபாகரன் ஒன்றிணைத்த ஐந்து கட்சித் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது குற்றுயிராகக் கிடக்கின்றது. அதனைக் கருணைக் கொலை செய்வது குற்றமில்லை என்பது என் கருத்து.

வெறும் அரசியல் போட்டி காரணமாக நான் இந்தக் கருத்துக்களை வெளிக் கொண்டு வரவில்லை. வரலாற்றைப்  பாருங்கள். அந்த அனுபவத்தில் இருந்து உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். திட்டமிட்டு எமது மக்களை இனஅழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திடம் இருந்து இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ள அரசாங்கத்திடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சுக்களைப் பெறுவதால் எமக்கான அதிகாரத்தையோ, நீதியையோ அல்லது அபிவிருத்தியையோ அரசு தரும் என்று எதிர்பார்க்க முடியுமா?

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கும் இதேமாதிரியான கதைகளைத் தான் சொன்னார்கள். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக் காலத்தில் வாய் தவறி கூட எமது மக்களுக்கு ‘இன அழிப்பு’ நடந்தது என்று எங்கேயாவது கூறினார்களா? மாறாக, ஐ. நா மனித உரிமைகள் சபையில்  அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுந் தான் அதனைப் பயன்படுத்தினார்கள்.ஏற்கனவே நாம் எமது காணிகளை இழந்துவிட்டோம். மேலும் காணிகள் பறிபோகின்றன. தமிழ்க் கைதிகள் தொடர்ந்து சிறையில் உள்ளார்கள். இராணுவத்தொகை இன்று வடக்கிலும் கிழக்கிலும் பெருகிவருகின்றது. பௌத்தமயமாக்கலும் சிங்கள மயமாக்கலும் சிங்களக் குடியேற்றங்களும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் அமைச்சர்களாக வந்தால் தமது அமைச்சுக்களை காப்பாற்ற மௌன மடந்தைகளாக இருப்பார்கள். விரைவில் வடகிழக்கின் தமிழ் மக்கட் தொகை கூனிக் குறுகி விடும்.


கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும்...!!! Reviewed by Author on July 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.