அண்மைய செய்திகள்

recent
-

உதவி ஆசிரியர்கள் நியமனம் கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் – உதயா

மலையக கல்வி சமூகம் தமது கல்வியை அங்கீகரிக்குமாறு கோரி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை வந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மலையக மக்கள் மத்தியில் காணப்படும் ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம் குறித்த பிரச்சினை இன்று முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

 மலையக கல்வி சமூகம் தமது கல்வியை அங்கீகரிக்குமாறு கோரி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை வந்துள்ளது. 2014ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 2015ம் ஆண்டு பெருந்தோட்ட தமிழ்மொழி மூலப்பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்கள் ஆட்சேர்க்கப்பட்டனர். 

 முதல் நியமனத் திகதியில் இருந்து ஐந்து வருடங்களினுள் தாம் நியமனம் பெறும் பாடத்துடன் தொடர்புபட்டு கல்வி அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆசிரியர் பயிற்சியினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் பல்கலைக் கழகங்களில் பட்டம் ஒன்றினை பெறுதல் அல்லது அரசினர் ஆசிரிய கலாசாலைகளில் பயிற்சியினை நிறைவு செய்தல் என்பன தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

 இதைக்கேற்ப ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று பரீட்சையில் சித்தி பெற்ற வர்களுக்கு ஆசிரியர் சேவையில் 3ஆம் வகுப்பின் தரம் ஒன்றிற்கு உள்ளீர்க்கப்பட்டு சேவையில் உறுதிப்படுத்தப்படுவார் என்றும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.

 பயிற்சி காலத்தில் 6000 ரூபா கொடுப்பனவு வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் சிலர் தங்களது முயற்சிகளை கைவிடாது டிப்ளோமா படிப்பை தொடர்ந்தனர். கொட்டகலை, கோப்பாய், அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு ஆகிய ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்குக் சென்று தமது டிப்ளோமா பட்டத்தை நிறைவு செய்துள்ளனர். 

  ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் இந்த உள் வாங்கும் நடவடிக்கைகள் முறையாக இடம்பெறுவதாகவும் மத்திய மாகாணத்தில் அவ்வாறு முறையாக இடம் பெறுவது இல்லை எனவும் ஆசிரியர் உதவியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மத்திய மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்துள்ள 400 ஆசிரியர் உதவியாளர்களின் கோவைகள் பூர்த்தி செய்யப்பட்டு நிரந்தர ஆசிரியர் நியமனத்துக்காக மத்திய மாகாண ஆளுனரிடம் சமர்ப்பித்துள்ள போதும் இதுவரை அவரின் சிபாரிசு கிடைக்கவில்லை என ஆசிரியர் உதவியாளர்கள் முறையிட்டுள்ளனர்.

  இதே வேளை 973 ஆசிரியர் உதவியாளர்கள் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று அவர்களுக்கான பெறுபேறுகள் வெளி வந்துள்ளன. மேலும் 573 ஆசிரியர் உதவியாளர்கள் பயிற்சி பெற்று கலாசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 83 ஆசிரியர் உதவியாளர்கள் தற்போது கலாசாலையில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவ்வாறு தகுதி பெற்றவர்கள் சிலருக்கு நியமனம் கொடுத்து சிலருக்கு நியமனம் கொடுக்காமை நியாயமான விடயம் அல்ல.

  எனவே ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு ஊடாக ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்துள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை வேண்டும். மேலும் ஆசிரியர் கலாசாலைகளில் இரண்டு வருட பயிற்சியை பூர்த்தி செய்து பாடசாலைகளுக்கு திரும்பியுள்ளவர்கள் ஏனைய ஆசிரியர்கள் போன்றே மேலதிகமாக கற்பித்தலில் ஈடுபடுகின்ற நிலையில் இவர்களை தொடர்ந்தும் ஆசிரிய உதவியாளர்களாக வைத்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உதவி ஆசிரியர்கள் நியமனம் கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் – உதயா Reviewed by Author on September 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.