அண்மைய செய்திகள்

recent
-

உச்சநீதிமன்றத்தின் அதிருப்தியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தம்பி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

உச்சநீதிமன்றத்தின் அதிருப்தியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தம்பி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகளைக் கடந்த பிறகும், அதுகுறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தியினைத் தெரிவித்து முடிவெடுக்க அறிவுறுத்தியும் ஆளுநர் கள்ள மௌனம் சாதித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்களும், எல்லாத்தரப்பு மக்களும் எழுவர் விடுதலைக்கோப்பில் ஆளுநர் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும் என்பதைத்தான் ஒருமித்துக் குரலெழுப்பி வருகிறார்கள்.

 எழுவரையும் விரைவாக விடுவிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என முன்னாள் சொசிலிட்டர் ஜெனரல் மோகன் பராசரனும் வலியுறுத்தியிருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேசத்துரோகக் குற்றமல்ல; நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் எண்ணத்தோடு நடத்தப்பட்ட கொலை வழக்கல்ல; அமைதிப்படையை அனுப்பியதால் வந்த எதிர்வினை. ஆகவே, இதுவொரு பழிவாங்கும் நோக்கத்தோடு நிகழ்த்தப்பட்ட கொலை வழக்கு என்றுகூறி, இவ்வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்திவிட்டது.

 இவ்வழக்கிற்குத் தடா சட்டமே பொருந்தாது எனும்போது, தடா சட்டத்தின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் தண்டனையை அனுபவித்துவருவது மிகப்பெரும் அநீதியாகும்! ராஜீவ் காந்தி உயிரிழக்கக் காரணமாக இருந்த பெல்ட் பாமை தயாரித்தவர் யாரென்றே இதுவரை மத்திய புலனாய்வுத்துறை கண்டறியாத நிலையில், அதற்குப் பேட்டரி வாங்கிக்கொடுத்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் தம்பி பேரறிவாளனை 29 ஆண்டுகளாய்ச் சிறைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை. இவ்வழக்கு என்பது இந்தியக் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படியான கொலை வழக்குதான்.

 அதாவது, மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு வழக்கு எனும்போது அவர்களை மாநில அரசு விடுதலை செய்வதற்கு என்ன தடையிருக்க முடியும்? தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிற எழுவரும் இக்கொலை வழக்கில் நேரடியாகப் பங்காற்றியதாக நீதிமன்றமே கூறவில்லை; கொலைவழக்கின் சதித்தன்மை தெரியும் என்பதே அவர்களது மீதானக் குற்றச்சாட்டு. அதற்குச் சாட்சியம், எழுவரும் மத்திய புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அளித்த ஒப்புதல் வாக்குமூலங்கள். தம்பி பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் திரித்து எழுதினேன் என வாக்குமூலத்தைப் பதிவுசெய்த முன்னாள் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டு அதனைப் பிரமாணப்பத்திரமாக உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்திருக்கிறார்.

 வழக்கின் முழுவிசாரணையும் இன்னும் நிறைவடையவில்லை எனபதையும், வழக்கில் அவிழ்க்கப்படாத முடிச்சுகளும், விடைதெரியா மர்மங்களும் ஏராளமாக உள்ளன என்பதையும், வழக்கை விசாரிக்கும்போது சில முக்கியப் பிரமுகர்களுக்குப் பாரபட்சம் காண்பிக்கப்பட்டு சலுகை அளிக்கப்பட்டது என்பதையும் மத்தியப்புலனாய்வுத்துறை அதிகாரி ரகோத்தமன் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்திருக்கிறார். இத்தோடு, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் கே.டி.தாமஸ், எழுவரும் விடுதலைக்குத் தகுதியானவர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறார். 

 கொலையில் நேரடிப்பங்காளிகளாகக் குறிப்பிடப்படாத நிலையிலும், இவ்வழக்கில் சனநாயக மரபுகளும், விதிகளும் மீறப்பட்டு பொதுப்புத்திக்கும், அரசியல் சதிக்கும் பலிகடா ஆக்கப்பட்டதால் எழுவரும் 30 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறபோதும், இவ்வழக்கில் இறந்தவர் முன்னாள் பிரதமர் என்பதாலேயே பாரபட்சம் காட்டுவது நீதித்துறையின் கண்களைக் குருடாக்கும் கொடுந்துரோகம். ‘ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்!’ எனும் ஒற்றைமய, ஒருமுகப்படுத்தும் கொள்கையைத் தீவிரமாகச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, ‘ஒரே நீதி’ என்பதில் மட்டும் விதிவிலக்காக மாறி எழுவரையும் விடுதலை செய்ய மறுப்பது நகைமுரண்.

 சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதல் மூலமே சட்டமாகும் என்பது அடிப்படை விதி. இதில் ஆளுநருக்கென்று தனிப்பட்ட எவ்வித அதிகாரங்களையும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வரையறை செய்யவில்லை. ஆகவே, அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டியது அவரது தார்மீகக் கடமையாகும். அதனை விடுத்து, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஓர் அமைச்சரவையின் முடிவை மக்களால் பிரதிநிதி அல்லாத ஆளுநர் தடுத்து நிறுத்தி வைப்பாரென்றால், இது மக்களாட்சித்தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கிற கொடுஞ்செயலாகும். 

 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் இழுபறியை மாற்றுவழி அழுத்தம் மூலம் சாத்தியப்படுத்தியது போல, ஒவ்வொரு முறையும் மாநில அரசின் இறையாண்மையை நிலைநிறுத்த போராடுவது இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறும் கூட்டாட்சித்தத்துவத்தைக் கேள்விக்குறியாக்குவதாகும். ஆகவே, இவ்விவகாரத்தில் உறுதியாய் நின்றிட்ட முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களது வழியில் தமிழக அரசு நின்று 161வது சட்டப்பிரிவின்படி, எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்திட வேண்டும் என்பதுதான் 12 கோடி தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமாக இருக்கிறது.

 இந்நேரத்தில் அப்பா குயில்தாசன் அவர்களது உடல்நலம் மிகவும் குன்றியிருக்கிற சூழலில் அவர்களுக்கு உற்றத் துணையாய், உளவியல் பலமாய் தம்பி பேரறிவாளன் உடன்நிற்க வேண்டியது பேரவசியமாகிறது. மேலும், தம்பி பேரறிவாளன் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றமே அவரின் 161 மனு நிலுவையில் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில் அவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்துவது தமிழக அரசின் முழுமுதற் கடமையாகும். ஆகவே, அதனை மனதில்கொண்டு குறைந்தது தம்பி பேரறிவாளனையாவது உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

 செந்தமிழன் சீமான் 
தலைமை ஒருங்கிணைப்பாளர் 
நாம் தமிழர் கட்சி



உச்சநீதிமன்றத்தின் அதிருப்தியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தம்பி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் Reviewed by Author on November 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.