அண்மைய செய்திகள்

recent
-

இவ் வருடத்திற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டினை வன்னி மாவட்டத்தில் பட்டினியில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க கோரிக்கை

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வருடாந்தம் அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படும் தலா ஒரு கோடி ரூபா நிதியினை இவ் வருடம் நிறுத்தி அந்த நிதியினை கோவிட்-19 தொற்று காரணமாகவும், பயணத்தடை காரணமாகவும் வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியில் வாடும் ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும், இவ்வருடம் பட்டினிச் சாவுகளை தடுக்க இந்நிதிகளை பயன் படுத்துமாறும், அடுத்த வருடம் அபிவிருத்தி திட்டங்களுக்கு செலவிடுமாறும் கோரி நிதி அமைச்சரும், பிரதம மந்திரியுமான மஹிந்த ராஜபக்சவுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கடிதம் ஒன்றினை இன்று புதன் கிழமை (16) அனுப்பி வைத்துள்ளார். 

 குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,, எமது நாட்டில் வேகமாக பரவிவரும் கோவிட் - 19 தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டு, பயணத்தடை விதிக்கப்பட்டு தொற்றுப்பரவலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறை சார்ந்தவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு வாரா வாரம் இப்பயணத்தடைகள் ஒரு மாதம் கடந்தும் நீடிக்கப்பட்டே வருகின்றது. இருந்த போதும் நோய்த்தொற்றின் வேகமும், மரணங்களின் வீதமும் குறைவடைவதை காண முடியவில்லை. இந்நிலையில் மக்களின் நடமாடுவதற்கான தடைகள் காரணமாக அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழைத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், பொருளாதார வலுவற்றோர் என ஏழைக்குடும்பங்கள் பட்டினிச் சாவை என்றுமில்லாதவாறு எதிர் நோக்கியுள்ளனர். 

 அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் நிதி உதவி சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி உதவித்திட்டம் பெறாத, சமுர்த்தி உதவி பெற தகுதியான குடும்பங்கள் நிர்க்கதிக் குள்ளாகியுள்ளன. அவர்கள் பல்வேறு விதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற 5000 ரூபாய் நிதி நிவாரணமானது கூட பொருட்களின் சமகால, நாளாந்த விலை ஏற்றத்திற்கு ஈடு கொடுக்க கூடிய உதவித் திட்டமாக கருத முடியாது. சாதாரண குடும்பம் ஒன்றுக்கு 5000 ரூபாய் 5 நாட்களுக்கு கூட போதுமானதாக இல்லை. பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும், கோவிட் சட்டங்களை இயற்றும் அரச அதிகாரிகளால், அரசியல்வாதிகளால் 5000 ரூபாவை மட்டும் கொண்டு தத்தமது குடும்பத்தை காப்பாற்ற முடியுமா? மாதாந்த ஊதியம் பெறும் அரச, அரச சார்பற்ற ஊழியர்களினால் கூட வாழ்க்கைச் செலவை ஈடு செய்யமுடியாமல் திண்டாடுகின்றனர். 

 இப்படியிருக்க சாதாரண, அன்றாடம் உழைத்தாலே அன்றாட ஊதியம் பெறும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட ஏழை, எழிய மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. வறுமைக்குள் பசி, பட்டினியுடன் போராடும் சாதாரண மக்கள் மன ரீதியில் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பட்டினி காரணமாக இதர பக்க விளைவுகளுக்கும், ஏனைய நோய்களுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். பட்டினி என்ற நோய் பரவல் தொடங்கினால் அதன் பக்க விளைவு நோய்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் அது மரணத்தை மட்டுமே விட்டுச் செல்லும். கோவிட்டை காரணம் கூறி பட்டினி மரணங்களுக்கு அரசாங்கமோ, யாருமோ காரணமாக இருந்துவிட முடியாது.

 இன்று வறிய குடும்பத்தைச் சேர்ந்த நாளாந்த கூலி வேலை செய்வோர் கேட்பதெல்லாம் 3 நேர உணவல்ல, புரியாணி அல்ல 3 வேளையிலும் கஞ்சி குடிச்சாவது உயிரோடு வாழவே கேட்கின்றனர். குறிப்பாக வன்னிமாவட்ட மக்களின் துயரம் மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்ததுக்கு ஒப்பானதாக இருக்கின்றது. கடந்தகால யுத்த வடுக்களிலிருந்து அவர்கள் இன்னமும் விடுபடவில்லை. உயிர் இழப்புக்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள் என பொருளாதார நிலையில் மீண்டெழ முடியாமல் சிக்கியுள்ளவர்கள் கொடிய நோய்த்தொற்று, பயணத்தடை காரணமாக பசியால் இன்று வாடுகின்றனர்.

 தொற்றினால் இறப்பவர்களில் எத்தனை பேர் பட்டினியாலும் அதன் விளைவுகளாலும் இறக்கின்றனர் என்ற கணக்கெடுப்பு நடாத்தப்படுவதில்லை. இதனால் இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்துக்கான எனது வன்னி மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டினை வறுமை நிலையிலுள்ள எனது மாவட்ட ஏழை மக்களின் பசி, பட்டினியைப் போக்க நிவாரணம் வழங்குவதற்காக பயன்படுத்துமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றேன். வன்னி தேர்தல் மாவட்டத்தின் மூன்று நிர்வாக மாவட்டங்களுக்கும் இந்நிதியினை பகிர்ந்தளித்து அவர்களை பட்டினியிலிருந்தும், மரணப்பிடியிலிருந்தும் மீட்டெடுக்குமாறும் தங்களை வினயமாக கேட்டுக் கொள்கின்றேன். 

 சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அபிவிருத்தி திட்டங்களும் மக்களுக்காகவேயெனினும் அவர்கள் இப்போ உண்ண உணவோ குடிக்க கஞ்சியையோதான் கேட்கின்றனர். அபிவிருத்தி திட்டங்களை அடுத்த வருடமும் முன்னெடுக்க முடியும். பன்முக நிதி ஒதுக்கீட்டை கையாளும்; நிதி அமைச்சர் என்ற வகையில் எனது பத்து மில்லியன் ரூபா நிதி மட்டுமல்லாமல், வன்னி மாவட்டத்தின் ஏனைய ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதிமட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இக் கொடிய கோவிட் தொற்றுப் பரவலால் வறுமையும், பட்டினியும் தலைவிரித்தாடுவதால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் 2250 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டினையும் அந்தந்த மாவட்ட கொரோணா நிதிக்காக, பசிபோக்கும் நிவாரண பணிக்காக விடுவிப்பது காலத்தின் தேவை கருதிய ஓர் முன்மாதிரி நடவடிக்கை என கருதுகின்றேன். 

 இது அவசரமும் அவசியமும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது என நம்புகின்றேன். எனது நிதியினை விடுவித்து வன்னியிலுள்ள மூன்று மாவட்டச் செயலகங்களூடாக இடர் நிவாரண உதவியாக வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க அனுமதி வழங்குமாறு தங்களை தயவாக கேட்டுக் கொள்கின்றேன்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது


இவ் வருடத்திற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டினை வன்னி மாவட்டத்தில் பட்டினியில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க கோரிக்கை Reviewed by Author on June 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.