அண்மைய செய்திகள்

recent
-

முல்லையில் எரிபொருள் பற்றாக்குறையால் மீனவர்கள் அவதி

முல்லையில் எரிபொருள் பற்றாக்குறையால் மீனவர்கள் அவதி; அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில்கள் - நீதிமன்றை நாடவுள்ளதாக கடற்றொழிலாளர் சம்மேளனம் தெரிவிப்பு. தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக முல்லைத்தீவுமாவட்டத்திலுள்ள மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவரும் நிலையில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் அருள்நாதன் வின்சன்டீபோல் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு உட்பட்டு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எரிபொருக்காக இடர்படும் நிலையில், சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வாறு எரிபொருள் கிடைக்கின்றது எனவும் அவர் கேள்விஎழுப்பியுள்ளார். 

 அதேவேளை சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு உரியதரப்பினரிடம் நீண்டகாலமாக, பலதடவைகள் தெரியப்படுத்தியபோதும் உரியவர்கள் இதுதொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்காத நிலையில், தாம் நீதிமன்றை நாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில்செயற்பாடுகளை, ஊடகவியலாளர்களுக்கு நேரடியாகக் காண்பித்து பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் பற்றாக்குறைபோன்ற பல்வேறு காரணங்களால், ஒருபுறம் எமது மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். 

 இந் நிலையில் மறுபுறம் முல்லைத்தீவு மாவட்டத்தில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளும் அதிகரித்துவருகின்றன. குறிப்பாகத் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்கள் பலரும், எரிபொருள் இன்மையால் கடற்றொழிலுக்கு செல்லமுடியாத நிலையில் உள்ளனர். அத்தோடு பலரிடமும் சிறியஅளவில் எரிபொருளைப் பெற்று, சேகரித்து, ஓரிரு மீனவர்களே கடற்றொழிலுக்குச் சென்றுவருகின்ற நிலையும் காணப்படுகின்றது. அவ்வாறு கடற்றொழிலுக்குச் சென்று வருகின்ற மீனவர்களுக்கு, மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைக்கின்றது. எரிபொருளுக்காகச் செலவிடும் பணத்தைக்கூட, மீன்பிடியின்மூலம் பெற்றுக்கொள்ளமுடியாத அவலநிலை காணப்படுகின்றது. இவ்வாறாக மீனவர்கள் பல்வேறு அவலநிலைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். 

 இந் நிலையில், முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், ஊடகவியலாளர்களை நேரடியாக கடலுக்குள் அழைத்துச்சென்று காண்பித்துள்ளதுடன், அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதை ஆவணப்படுத்தியுமுள்ளோம். சட்டத்திற்கு உட்பட்டு கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற எமது மீனவர்களுக்கு எரிபொள் இல்லாதநிலை காணப்படும்போது, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வாறு எரிபொருட்கள் கிடைக்கின்றது? மேலும் இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு பலதடவைகள் நாம் கடற்றொழில் அமைச்சர், முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம், முல்லைத்தீவு மாவட்டசெயலர், கடற்படையினர் உள்ளிட்ட உரியதரப்பினரிடம் முறையிட்டுள்ளோம். 

 இருப்பினும் இந்த விடயம்தொடர்பில் உரியவர்கள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் தொடக்கம், பேப்பாரப்பிட்டி வரையில் கடற்றொழிலில் ஈடுபடும் 1800இற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட உணவைப் பெற்றுக்கொள்வதற்கே, எமது மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கின்ற அவல நிலையும் காணப்படுகின்றது. எனவே இதுதொடர்பில் தொடர்ந்தும் உரியதரப்பினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், நீதிமன்றை நாடி, சட்டநடவடிக்கை எடுக்கும் முயற்சியிலும் நாம் ஈடுபட்டுள்ளோம். முல்லைத்தீவில் மீனவர்களுக்கு நீண்டகாலப் பிரச்சினையாகக் காணப்படும் இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டினை தடுப்பதற்கு நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பினை வழங்கும் எனவும் நாம் எதிர்பார்க்கின்றோம் - என்றார்.



முல்லையில் எரிபொருள் பற்றாக்குறையால் மீனவர்கள் அவதி Reviewed by Author on June 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.