அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி - சரணடைந்த விடுதலைப்புலிகள் கொலையா என சந்தேகம்

இலங்கையில் 30 வருடங்களுக்கு மேல் அவ்வப் போது அடையாளம் காணப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சுமார் ஒரு வார காலத்திற்குள் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பகுதியிலேயே இந்த மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில், நீர் வழங்கலுக்கான குழாய்களை பொருத்துவதற்காக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது, வெட்டப்பட்ட குழியிலிருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டதுடன், அது குறித்து கொக்கிளாய் போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

குறித்த இடத்தில் மனித எச்சங்கள் மாத்திரமன்றி, ஆடைகள் சிலவற்றையும் காணக்கூடியதாக இருந்தது என அந்த இடத்திலிருந்தவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடத்தில் பெண்களின் உள்ளாடைகளும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

குறித்த மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

இந்த நிலையில், அந்த பகுதியில் அகழ்வு நடவடிக்கைகளின் போது மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, அந்த இடத்திற்கு வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் விஜயம் செய்து, விடயங்களை ஆராய்ந்துள்ளார்.


அந்த இடத்தில் தான் நேரில் கண்ட விடயங்களை பிபிசி தமிழுக்கு, துரைராசா ரவிகரன் தெளிவூட்டினார்;

'' தகவல் கிடைத்ததும் உடனடியாக நான் சென்றேன். போலீஸார் அந்த இடத்தில் நின்றார்கள். எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, நீர் வழங்கல் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தார்கள். என்னையும், என்னுடன் வருகைத் தந்த சிலரையும் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் ஒன்று இரண்டு பேர் இல்லை. அதற்கும் கூடுதலானோரின் எலும்பு எச்சங்கள் காணப்படுகின்றன. 

ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டதை அவதானித்து, மக்கள் கவலையடைந்திருந்தார்கள். அது விடுதலைப் புலிகளுடையது என்ற உறுதிப்பாடுடன் இருக்கின்றோம். இறுதி யுத்தத்தின் போது 2009ம் ஆண்டு காலப் பகுதியில் வட்டுவான் பகுதியில் சரணடைந்த ஆட்களாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. 84ம் ஆண்டிற்கு பிறகு கொக்கிளாய், கொக்குதொடுவாய் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். 

அவர்கள் 2012,13,14 ம் ஆண்டு காலப் பகுதிகளிலேயே அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டார்கள். 2009ம் ஆண்டு சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் குழுவை ஏதாவது செய்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக பேசப்படுகின்றது. இருந்தாலும், இது தொடர்பில் தாம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக போலீஸார் எம்மிடம் தெரிவித்தார்கள். நீதிமன்றத்தின் ஊடாகவே நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கொக்கிளாய் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி என்னிடம் கூறினார்" என அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான ஆடைகளை ஒத்த ஆடைகள் குறித்த பகுதியில் காணப்பட்டதை தான் அவதானித்ததாக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் குறிப்பிடுகின்றார்

இந்த நிலையில், குறித்த பகுதியில் தற்போது நீதவான் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் மேலதிக அகழ்வு பணிகள் எதிர்வரும் 6ம் தேதி முன்னெடுக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அகழ்வு பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொக்கிளாய் போலீஸாருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்ற இடத்தில் தற்போது போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தடயங்களை மறைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ள போதிலும், தான் நேரில் கண்ட தடயங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறைக்க முடியாது என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறுகின்றார்.

அகழ்வு பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொக்கிளாய் போலீஸாருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான ஆடைகளை ஒத்த ஆடைகள் குறித்த பகுதியில் காணப்பட்டதை தான் அவதானித்ததாக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

''பெண்களின் ஆடைகள், விடுதலைப் புலிகளின் ஆடை என்பதை என்னால் உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தது. பச்சை நிற உடுப்பு. ராணுவ ஆடையிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. ஆனால், இது விடுதலைப் புலிகளின் ஆடை என்பதை உறுதிப்படுத்த முடியும். பெண்களின் ஆடைகளும் காணப்பட்டன. குறிப்பாக பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டன. இதனை அங்கிருந்து வெளியான படங்களில் காணக்கூடியதாகவும் உள்ளது." என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

எனினும், விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

BBC Tamil 







முல்லைத்தீவில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி - சரணடைந்த விடுதலைப்புலிகள் கொலையா என சந்தேகம் Reviewed by NEWMANNAR on July 03, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.