அண்மைய செய்திகள்

recent
-

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும் செயற்பாடு போராட்டத்தால் தடுக்கப்பட்டது

 வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, யாழ். போதனா வைத்தியசாலைக்கு, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தனியார் காணியில் வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்படுவதால் பிரதேசவாசிகள் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டி, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வைத்தியசாலை அதிகாரிகளுக்கு மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.


இந்த நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான குப்பைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக பிரதேச   ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


எவ்வாறாயினும், நிலத்தடி நீர் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


அரியாலைப் பிரதேசத்தில், யாழ்ப்பாணம்-கண்டி பிரதான வீதியை மறித்து, சுமார் மூன்று மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள், கழிவுகளை உடனடியாக அகற்றி, மக்கள் வாழ்வதற்கு ஆரோக்கியமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.


எந்தவொரு வைத்தியசாலையும் நிர்மாணிக்கப்படவில்லை எனினும் மிகவும் ஆபத்தான வைத்தியசாலைக் கழிவுகள் காணியில் கொட்டப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் வலியுறுத்தினார்.


“குறித்த இந்த காணி 10 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கண் வைத்தியசாலை அமைப்பதற்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. நீண்டகாலமாக இங்கு எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இந்த காணியில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. கழிவு பொருட்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்  துர்நாற்றத்தை  தாங்கிக்கொள்ள முடியாமல் அருகில் இருப்பவர்கள் சென்று பார்த்தபோது, மிகவும் ஆபத்தான வைத்திய கழிவுகள், இரத்தத் துணி துண்டுகள், ஊசி ஏற்றும் சிரஞ்சுகள், குளுகோஸ் ஏற்றும் குழாய்கள் என அனைத்தும் இங்கு இருக்கின்றன. இது மிகவும் ஆபத்தான வைத்திய கழிவுகள்.”


இப்பகுதியில் எவ்வளவு காலமாக வைத்தியசாலை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றது என்பது பிரதேசவாசிகளுக்கு தெரியவில்லை எனவும், அண்மைக்காலமாக துர்நாற்றம் வீச ஆரம்பித்ததோடு, அங்கு எரிக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து பொது மக்கள் ஆராய்ந்தபோதே இந்த விடயம் அம்பலமானதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில், பிரதேச மக்கள் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என போராட்டக்காரர் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.


“என்ன அடிப்படையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் இந்த வைத்திய கழிவை போட்டீர்கள்? இதனை எப்போது பாதுகாப்பாக அகற்றித் தருவீர்கள்? இவற்றை அகற்றிய பின்னர் நிலத்தடி நீரிலும், சுற்றுச்சூழலிலும் பாதிப்பு ஏற்படாமல் எப்படித்  தடுப்பீர்கள்?”


போராட்டத்தை தடுத்து நிறுத்த பொலிஸாரின் முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவிக்கும் பிரதேச ஊடகவியலாளர்கள், வைத்தியசாலை அதிகாரிகள் வந்து தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை நிறுத்துவதற்கு பிரதேச வாசிகள் இணங்கவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.


பின்னர் யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து வைத்தியசாலை கழிவுகளை ஏழு நாட்களுக்குள் (ஏப்ரல் 18ற்குள்) அகற்றுவதாக உறுதியளித்ததையடுத்து, அரியாலை பிரதேச மக்கள் போராட்டத்தை கைவிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.






வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும் செயற்பாடு போராட்டத்தால் தடுக்கப்பட்டது Reviewed by Author on April 18, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.