அண்மைய செய்திகள்

recent
-

கவின் கலைகளைப் பயிலும் இன்றைய சிறுவர்கள்தான் நமது கலாசாரத்தின் தூதுவர்கள் தமிழ் நேசன் அடிகளார்


இணையத் தளங்கள் ஆட்சி செய்யும் இன்றைய விரைவான வாழ்க்கைச் சூழ்நிலையில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் நமது தமிழ்ச் சிறார்கள் பாரம்பரியக் கலைகள்பால் ஈர்ப்புக்கொண்டு தகுந்த ஆசிரியர்களிடம் இக்கலைகளைப் பயில்வது ஆச்சரியமான விடயமாகும். இவர்கள்தான் நமது பாரம்பரியச் சிறப்புக்களை, பண்பாட்டுப் பெருமைகளை, கலைச்செல்வங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்க்கும் கலாசாரத் தூதுவர்கள். இந்த மாணவர்கள் நமது வாழ்த்துக்கு மட்டும் உரியவர்கள் அல்ல நமது வணக்கத்திற்கும் உரியவர்கள் என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.

தமிழ் நேசன் அடிகளார் மங்களவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கின்றார். 





கொழும்பு கம்பன்கழக அமைப்பாளர் வாழ்த்துரை வழங்குகின்றார்.



தமிழ் நேசன் அடிகளார் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்
  கடந்த சனிக்கிழமை (13.10.2012) கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கும் நடேஷ்வராலயா நுண்கலைக் கல்லூரியின் 10வது ஆண்டு நிறைவையயொட்டி மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற கலைவிழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

 வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் மன்னார் மறைமாவட்ட கலையருவி அமைப்பின் இயக்குனரும் மன்னா பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து கூறியதாவது,
  கலைகள் வாழ்வுக்கு வளம் சேர்ப்பவைளூ மனதுக்கு மகி;ழ்ச்சி ஊட்டுபவை. நவரசங்களும், மெய்ப்பாடுகளும், கருத்துக்கோலங்களும், யதார்த்தநெறிகளும், அழகும் கொண்டவை கலைகள்! கலைகள் மானிட இனத்தின் மகத்தான படைப்புக்கள்! படைக்கும் ஆற்றல் கொண்டதனாலேயே மனிதன் பக்குவப்படுகின்றான், பரவசப்படுகின்றான், பலசாலியாகிறான். காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மனிதன் கலைகளைப் படைக்கின்றான். கற்றுக்கொள்வதற்கும், கற்றுக்கொடுப்பதற்கும், விழிக்கச்செய்வதற்கும், வெளிச்சத்தைக் காட்டுவதற்கும் கைவந்த கருவியாக கலை கையாளப்படுகிறது.

  மனிதனின் வயிறு பசித்ததுளூ தொழில்கள் பிறந்தன. மனிதனின் இதயம் பசித்ததுளூ கலைகள் பிறந்தன. மனிதன் தன் உணவுக்காகத் தொழில்களை உருவாக்கினான்ளூ மனிதன் தன் உணர்வுகளுக்காக கலைகளைப் படைத்தான். ஆம் உடலுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நம் இதயத்திற்கு கலைகள் முக்கியமானவை!

 இணையத்தளங்களின் செல்வாக்கு உலகை ஆட்சிசெய்யும் இன்றைய காலகட்டத்தில் நமது மரபரீதியான கலைகளுக்கு இனி என்ன நேருமோ என நாம் அச்சப்படவேண்டி உள்ளது இப்படியான ஒரு சூழ்நிலையில் இந்த நடேஸ்வராலயா நுண்கலைக் கல்லூரி நமக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கின்றது. இக்கல்லூரியின் ஸ்தாபகர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலையை வளர்க்கவும், வளப்படுத்தவும் எடுக்கும் முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

  எப்பொழுது ஒரு கலை வாழும் கலையாக மாறுகின்றது?  எத்தகைய தொன்மையான கலையும் அதன் பாரம்பரியம் கெடாதவண்ணம் காலத்திற்கு ஏற்ப புது முயற்சிகளுடன் படைக்கப்படும்போதுதான் அது வாழும் கலையாகிறது என்றார்.

 தலைநகரிலே கலை வளர்க்கும் கல்விக்கூடங்களில் நடேஷ்வராலயா நுண்கலைக் கல்லூரியும் ஒன்றாகும். இக்கல்லூரியில் ஏறக்குறைய 400ற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இக்கல்லூரியின் பணிப்பாளர் திருமதி மாலதி சிவகுமார் அவர்களின் திறமையான நிர்;வாகக் கட்டமைப்பில் இக்கல்லூரி கடந்த பத்து வருடங்களாக பல நூறு மாணவர்களை உருவாக்கியுள்ளது. ஒரே கூரையின்கீழ் சகல கலைப்பாடங்களையும் கற்கின்ற வாய்ப்பு இங்கு உண்டு. நடேஷ்வராலயா நுண்கலைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் பாரம்பரியம் வழுவாது கலைகளை காத்து வளர்க்கவேண்டும் என்பதற்காகவே. இங்கு கர்நாடக இசை, பரதநாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம், புல்லாங்குழல், கீ போட், சித்திரம், யோகா போன்ற கலைப்பாடங்கள் திறமைமிக்க ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுகின்றன.

இக்கலைவிழாவின்போது இந்தக் கலைகளைப் பயிலும் மாணவர்கள் ஏறக்குறைய 200 பேர் தமது திறமைகளை மேடையில் சிறப்பாக வெளிக்காட்டியிருந்தனர்.


  சங்கீதப் பரீட்சைகள், உள்ளுர்;, சர்வதேச மேலைத்தேய கீ போட் பரீட்சைகள் போன்றவற்றிக்கு மாணவர்கள் தவறாது அனுப்பப்படுகின்றார்கள். மாணவர்கள் 100 வீதம் திறமான சித்தி எய்துகின்றார்கள். கீ போட் ஆசிரியர்களின் வழிநடத்தலில் பல மாணவர்கள் தங்கப் பதக்கங்கள், வெள்ளிப் பதக்கங்கள் போன்றவற்றைப் பெற்றுள்ளனர்.

  வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சையில் 6 பேர் பரதகலாவித்தகர் பட்டத்தையும், 4 பேர் சங்கீத கலாவித்தகர் பட்டத்தையும் பெற்று இந்த நுண்கலைக் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கவின் கலைகளைப் பயிலும் இன்றைய சிறுவர்கள்தான் நமது கலாசாரத்தின் தூதுவர்கள் தமிழ் நேசன் அடிகளார் Reviewed by NEWMANNAR on October 18, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.