எல்லோரது நன்மைகளுக்காகவும் வாழ்வோம்! நோன்புப் பெருநாள் செய்தியில் அய்யூப் அஸ்மின்
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய இஸ்லாமிய உறவுகளே
உங்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்,
ஈத் முபாரக்
மகிழ்ச்சிகரமான இந்த சந்தர்ப்பத்திலே தங்களோடு ஒருவனாக ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த தேசத்தில் இன்றைய திகதியில் எமது எதிர்பார்ப்புகள் எல்லாம் எமது தேசத்தில் கௌரவமான பிரஜைகளாக! இந்த தேசத்தின் நலன்களை முதன்மைப்படுத்துகின்ற சமூகமாக! உண்மை, நேர்மை, மனிதநேயம், நீதி மேலோங்க உழைக்கின்ற சமூகமாக! அமைதி, சமாதானம், சகவாழ்வு, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி காணுகின்ற தேசத்தின் பங்காளிகளாக வாழ்வதேயாகும். இதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இதுவரைகாலமும் எமது சமூகத்தின் வரலாறு மிகச்சிறப்பான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கின்றது; என்றாலும் அண்மைக்காலமாக அதன் தோற்றத்தில் மாறுதல்களை ஏற்படுத்த விசமமான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இவற்றை நாம் துள்ளியமாக அறிந்துகொள்தல் வேண்டும். நிலைதடுமாறி எமது இயல்புகளை மீறி, மார்க்கத்தின் வழிகாட்டல்களை புறந்தள்ளிவிட்டு வேறு ஒருவழியில் நாம் பயணிப்பது பொறுத்தமற்றது. எனவே நிதானமான போக்கில் எமது மார்க்கத்தின் இயல்புகளோடு, எமது மக்களின் அபிலாஷைகளோடு இயைந்த ஒரு வழிமுறை குறித்து நாம் சிந்திக்கின்றோம்.
மக்களுக்கு விசுவாசமான ஆட்சிமுறைமை, சட்டரீதியான நடைமுறைகள், ஊழல்கள் இல்லாத நிர்வாக முறைமை, வெளிப்படைத்தன்மையோடு நேர்மையோடு மனிதாபிமானத்தோடு கூடிய அரசியல் செயற்பாடுகள் எமது தெரிவுகளாக இருக்கின்றன, இவற்றை நாம் வலியுறுத்தவேண்டும், இத்தகைய வழிமுறைகளை நாம் எமது வழிமுறைகளாக மாற்றியமைக்கவேண்டும். அப்போது இந்த நாட்டில் நிரந்தரமான அமைதி நிலவும்.எல்லோரது நன்மைகளையும் உறுதிசெய்கின்ற சமூகமாக எம்மால் வாழ முடியும்.
இத்தகைய நல்ல சிந்தனைகளைச் சுமந்தவர்களாக இந்த ஈகைத் திருநாளை நாம் எல்லோரும் நோக்குவோம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மனிதாபிமான அவஸ்த்தைகளை எதிர்கொண்டுள்ள அனைத்து மக்களுக்காகவும் அவர்களது விடுதலைக்காகவும் நாம் பிரார்த்திப்போமாக, குறிப்பாக பலஸ்தீனத்தின் காஸா மண்ணில் அரங்கேறும் அடக்குமுறைகள் உடனடியாக முடிவுக்கு வருவதற்காகவும் பிரார்த்திப்போமாக. ஈத் முபாரக், ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
அ.அஸ்மின்
வடக்கு மாகாணசபை உறுப்பினர்.
எல்லோரது நன்மைகளுக்காகவும் வாழ்வோம்! நோன்புப் பெருநாள் செய்தியில் அய்யூப் அஸ்மின்
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:

No comments:
Post a Comment