அண்மைய செய்திகள்

recent
-

பல்துறை விற்பன்னர் பேசாலை மண் பெருமை கொள்ளும் முதுபெரும் கலைஞர் கலாபூஷணம் S.A. மிராண்டா ஐயா அவர்களின் அகத்தில் இருந்து.


கலைஞனின் அகம்கணனியில் முகம்

கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக எம்மை காணவருபவர் ஆங்கில ஆசிரியர் ஓய்வு
பெற்ற அதிபர் கவிஞர், ஓவியர் நாட்டுக்கூத்துக் கலைஞர் ஒப்பனையாளர் பின்னணி இசையமைப்பாளர் என பல்துறை விற்பன்னர் பேசாலை மண் பெருமை கொள்ளும் முதுபெரும் கலைஞர் கலாபூஷணம் S.A. மிராண்டா ஐயா அவர்களின்அகத்தில் இருந்து. ......................

• தங்களைப்பற்றி?

எனது தந்தையொரு அண்ணாவியார் அத்தோடு அவர் ஒரு நாட்டுவைத்தியரும் கூட எனது தந்தை நாடகம், நாட்டுக்கூத்துகலைகளில் சிறந்தவர் அவரின் ஆற்றல் அப்படியே என்னிலும் பிரதிபலித்து தொடர்கிறது. நான் ஒரேஆண்பிள்ளை என்னுடன் பிறந்த 6 பேரும் சகோதரிகள்  அன்று நான் செல்லப்பிள்ளை கால ஓட்டம் இன்று நான்திருமணமாகி 3 பிள்ளைகள் மனைவியோடு கடல்வளமும் கடவுள் அருளும் ஒருங்கே பெற்று விளங்கும். பேசாலை மண்ணில்பெருமையாக வாழ்ந்து வருகின்றேன்.

• உங்களது இளமைக் காலம் பற்றி?

என்னுடைய இளமைக்காலம் எனும் போது பன்னிரண்டு வயது வரைதான் நான் எனது குடும்பத்தினருடன் இருந்தேன்.ஆரம்பக்கல்வியை றோ.க.த.க பாடசாலையிலும் பேசாலை அதன்பின்பு புனித ஜோசப் கல்லூரி அனுராதபுரம்,
புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மன்னார். புனித யோசப் யூனியறேற் நுகேகொட கொழும்பு அதன்பின் குருத்துவப்படிப்பு தேசிய குருமடம் அம்பிபிட்டிய கண்டி இவ்வாறாக காலங்களில் எனது இளமைக்காலம் கல்வியோடு தான் கழிந்தது.

• ஆசிரியர் ஆக நீங்கள்?

சிரேஷ்டப் பாடசாலை ஆங்கில ஆசிரியராகவும், ஆங்கில டிப்ளோமாவினை பெற்றுக் கொண்டு 7ஆண்டுகள் மெய்யியல் இறையியல் கற்று அதன் பின்புதான் ஆசிரிய நியமனம் பெற்று மன்/பத்திமாமகாவித்தியாலயத்திலும் றோமன் தமிழ்க்கலவன் பாடசாலையில் இரண்டிலும் தொண்டர் ஆசிரியராக ,
ஆசிரியராகி, அதிபராக 35 ஆண்டுகள் உன்னதமான மகத்தான தேவையான சேவையை செயலாற்றினேன் என்வாழ்நாளில் நான் ஆசிரியராக அதிபராக பணியாற்றி அந்த 35 ஆண்டுகள் என் வாழ்நாளில் இறைவன் தந்தபரிசு என்றுதான் சொல்வேன்....

• கலைக்குள் உங்கள் பிரவேசம் எவ்வாறு அமைந்தது?

ஆசிரிய நியமனம் பெற்று பாடசாலையில் 0/L ,A/L  மாணவர்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த பொழுதுஎனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஏன் இவர்களை வைத்து நாடகம் பழக்கி மேடை ஏற்றக் கூடாது என்று அவ் யோசனைக்கு ஏற்றால் போல் சந்தர்ப்பமும் அமைந்தது. அவ்வாறே எனது மாணவர்களை வைத்து எழுதிய நாடகம் மாவட்டம், கோட்டம்,தேசியம் என பரிசுகளைப் பெற்றது. அத்தோடு தொடங்கியது. எனது கலைச் சேவை பலபல நாடகங்களை எழுதினாலும்மேடையேற்றினாலும் தற்போது என் கைவசம் உள்ள நாடகங்கள் 22 தான் மீதி பல சந்தர்ப்பங்களில் பலரிடம்
கொடுத்தும் தொலைந்தும் போயுள்ளது.

• அன்றைய சூழலில் பேசாலையில் ஏதும் அமைப்பு இருந்ததா?

 இல்லை மன்னாரிலே பேசாலையிலே 1972, 1973 என நினைக்கிறேன். முத்தமிழ் விழாவை 2 நாட்களாக நடத்தினேன்
11 மன்றங்கள் கலந்து கொண்டார்கள் விடிய விடிய அவ்விழாவை நடத்தி சிறப்பு பரிசும் வழங்கினோம்.அன்று இருந்த மன்றங்கள் கலைஞர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு செயலாற்றுவோம் கலை வளர்ந்தது.கலைஞர்களும் உயர்ந்தார்கள் இப்போது சொல்லவே தேவையில்லை பொறாமையின் சின்னங்களாய் …….

கொட்டை போட்டவன் ஒரு ஆள்
தண்ணீர் ஊற்றியவன் ஒரு ஆள்
பழம் தின்பவன் ஒரு ஆள்
பழம் தின்பவனுக்கு தெரியாது கொட்டை போட்டு தண்ணீர் ஊற்றியவன் யார் என்று தெரிந்தவர்கள் இருந்தாலும்
சொல்வதில்லை சொன்னாலும் அவனை அவர்களை நினைப்பதில்லை அதுதான் இப்போதைய நிலை.

• உங்கள் நாடகப்பாத்திரத்தின் சிறப்பு பற்றி?

என்னுடைய நாடகம் பாத்திரத்தின் சிறப்பு எனும் போது சிறப்பாக சொல்ல வேண்டுமானால் அதுஉதயாதான் இப்போது பிரபல நாவலாசிரியர் எஸ்.ஏ.உதயன் என அறியப்படுபவர் அன்னைய காலங்களில் எனதுநாடகங்களின் வெற்றிக்கு காரணமானவர் பெண் வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர் அச்சு அசல் பெண்தான்பெண்ணுக்கே உரிய நளினம் உடல் வாகு நடிப்பு என்பன அவரிடம் காணப்பட்டது. தமயந்தியாக, சகுந்தலையாக
என்னுடைய எல்லா நாடகத்திலும் பெண் வேடம் என்றால் அது உதயாதான் மாற்றுக் கருத்து இல்லை அதற்கு ஒரு சம்பவத்தைசொல்கிறேன்.மன்னார் கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிதி சேகரிப்பிற்காக அனைத்து மன்றங்களினதும் நாடகஅரங்கேற்றம் நடைபெற்றது. அதில் எனது நெறியான்கையில் நளதமயந்தி நாடகம் இரண்டு முறை மேடையேற்றிமதிய உணவிற்காக இடைவேளை விட்டு நான் உணவருந்திக் கொண்டு இருக்கும்போது எங்கள் கொட்டகைப்பக்கம் ஏனையநாடகத்தில் நடித்த பார்க்கவந்த பெண்கள் கூடினர். என்ன என்று கேட்டேன் இல்ல சேர் நான் ஆடைகளைக் களைய ….அடியே இங்க பாருடி அது ஆணடி. உங்கட நாடகத்தில் தமயந்தி பெண் வேடத்தில் நடித்தது பெண்ணா...? ஆணா...? என்று
பார்க்க வந்தனாங்கள்... அப்போது உதயா எனக்கும் பசிக்கிகுது சேர் என பலர் வியந்தனர் சிலர் சிரித்தனர் அவ்வளவிற்கு எஸ். ஏ. உதயாவின் பெண் பாத்திர நடிப்பு அபாரம் என்பேன்.

• நாடகம் நாட்டுக்கூத்து வீழ்ச்சிக்கு காரணம் என்ன? 

நாடகம் நாட்டுக்கூத்து வீழ்ச்சி என்பதைவிட விருப்பமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்... எமது ஊரில் முதல்(பெரியநாடகங்கள்) என்றுதான் இருந்தது. இது புனிதர்கள் பெயரால் ஒவ்வொரு ஊரிலும் அவரவர்கள் வழக்கத்திற்குஏற்றாற் போல் மேடையேற்றினார்கள் உதாரணமாக தொம்மையப்பர் நாடகம், வாசாப்பு இதுவும் ஊருக்கு ஊர் வேறுபடும் எங்கள் பேசாலையில் மூவீராசாக்கள் வாசாப்புத்தான் பிரபல்யம் அந்தக் காலத்தில் நாடகங்கள் இரண்டு இரவுகள் 3 இரவுகள் என்றுதான் போடுவார்கள். எல்லோரும் வண்டி கட்டி வந்து ஒன்று கூடுவார்கள். பெரியவிழாக்கோலம்பூண்டிருக்கும் இரவு 8.00 மணிக்கு மேலதான் தொடங்கும் அதற்கு முன்னமே பாய்களை விரித்து இடம் பிடித்து கொள்வார்கள்நாடகம் தொடங்கி சிலமணி நேரங்களில் எல்லொரும் தூங்கி விடுவார்கள் இடைக்கிடை சத்தம் கேட்டு எழுவதும்பார்ப்பதும் மீண்டும் தூங்கி விடுவார்கள் நாடகங்களை போடுவதற்கு குருக்கள் சுவாமிமார்தான் பெரிதும்
உதவினார்கள். இதற்கு சரியான செலவும் சிரமமும் ஏற்பட்டது. அதேபோல் தொடர்ச்சியாக இருந்து யாரும்பார்ப்பதும் இல்லை இதனால் ஓர் இரவு நாடகமாகவும் பின் 3மணி நேர நாடகமாகவும் மக்களை கவர இசைநாடகங்களாக1மணிநேர நாடகங்களாகவும் அரங்கேறினார்கள். இவ்வாறு இருக்கத்தான் சினிமா வந்தது ஊமைப்படமாக பின்பு பேச்சுடன் கறுப்பு வெள்ளை யாக இப்பேர்து கலர்கலராய் சொல்லவே தேவையில்லை மக்களின் இரசனையும் மாறியது இருப்பினும் நாடகம் தனது மவுசை இழக்காது.


• தமிழ், ஆங்கிலம், சிங்களம் லத்தீன் இந்த நான்கு மொழிகளின் புலமைக்கு என்ன காரணம்.?

எனது சிறுவயது முதலே 12 வயதில் இருந்தே விடுதியில்தான் இருந்தேன். அதனால் ஆங்கிலக்கல்விகற்கக்கூடியதாக இருந்தது. 0/L  சித்தியடைந்த பின் எனது எண்ணம் திசைமாறியது. ஒரு குருவாக வரவேண்டும் என நினைத்தேன்.அவ்வழியே நடந்தேன் ஆறு சகோதரிகள் கடைசி ஒரு ஆண் பிள்ளை என்பதால் எனது தந்தையும் தாயும் நான் குருவாக செல்லவிரும்பவில்லை காரணம் தமக்கு வாரிசு இல்லாமல் போய்விடும் என்று பெரிய போராட்டத்தின் மத்தியில் இறைவனின்திருவுளம் என்று என்னை அனுப்பி வைத்தார்கள் எனது எண்ணத்தின் படி 13 வருடங்களாக இறையியல் மெய்யியல் மொழிகள்என கற்றுத் தேர்ந்தேன் யாழ் ஆயர், மட்டக்களப்பு ஆயர் இவர்களுடன் நான் குருத்துவத்தில் கல்வி கற்றிருக்கிறேன்.

அப்போதுதான் எனக்கு அந்த அனர்த்தம் நேர்ந்தது. பின்னேரப்பொழுதில் கரப்பந்து விளையாடிக் கொண்டு இருக்கும்போது தவறுதலாக கீழே விழுந்து எனது தலை அடிபட்டு காதினால் இரத்தம் வடியத்தொடங்கியது. மருந்து எடுத்தும் இரத்தம்வருவதும் திடீரென மயங்கி விழுவதுமாக இருந்தேன். குருவாகத் திருநிலைப்படுத்தப்பட ஆறுமாத காலம்தான் இருந்தது. இந்த
நிலையினால் என் எண்ணம் சிதறியது. குருகுல கல்வியில் தான் எனக்கு இந்த மொழிப்புலமை வந்ததென உறுதியாகச் சொல்வேன். ஆனால் இறைவன் என்னை குருவாக ஏற்கவில்லை. குடும்பஸ்தனாக மாற்றிவிட்டார். எல்லாம் அவர் திருவுளமே.

• 35 ஆண்டுகள் ஆசிரியராக அதிபராக இருந்த நீங்கள் மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் எவ்வாறு அணுகுவீர்கள்?

அதிபராக இருக்கும்போது ஆசிரியர்களுக்கு சொல்வது நீங்கள் முதலில் மாணவர்களை நேசியுங்கள் உங்கள் பிள்ளைகளாகப் பாருங்கள் அப்போதுதான் அவர்களின் நிறைகுறைகளை கண்டு அதற்கு ஏற்றால் போல் கல்வி கற்பிக்கமுடியும் கடமைக்காக கற்பிக்காதீர்கள் அவர்கள் வாழ்க்கை பாழகி விடும் எதிர்கால் சுபீட்சமாக இருக்க இப்போதுபெறும் கல்விதான் அவசியம். இன்னொன்று பாடசாலைக்குள் நான் (எப்போதும் மாணவர்களின் பக்கம்தான் இருப்பேன்)எனக்கு மாணவர்கள் முக்கியம் அதுபோல பாடசாலைக்கு வெளியில் எனக்கு (ஆசிரியர்கள் தான் முக்கியம்) யாரும் எது
சொன்னாலும் அவர்கள் பக்கம்தான் இதை கடைசிவரை கடைப்பிடித்தேன்.

• அன்றைக்கும் இன்றைக்கும் மாணவர்கள் ஆசிரியர்களின் குரு சிஷ்சியன் உறவுமுறை உள்ளதா?

அருமையான கேள்விஅன்றைய காலம் எல்லாவற்றிலும் அருமையானது அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கும் மாணவர் அவ்வாறுமரியாதை செலுத்துவார்கள் பெயர் சொல்லி அழைக்கமாட்டார்கள் இன்று அவ்வாறில்லை எல்லாம் காலமாற்றமும் நவீனவளர்ச்சியும் தான் பேசாலை மண்ணைப் பொறுத்த மட்டில் இப்போது 40 – 50 வயதில் இருப்பவர்களில் முக்காவாசிப்பேர்  எனது மாணவர்கள் தான் தற்போது தலைமன்னார் RTMS அதிபரும், மன்னார் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் AC. துரம்முன்னாள் DMO பீரீஸ் இன்னும் பலர் கச்சேரிகளிலும் பாடசாலைகளில் பல இடங்களிலும் பணிபுரிகின்றார்கள்என்னை எங்கு கண்ணடாலும் எழுந்து மரியாதை செய்துதான் அமர்வார்கள் எனக்கு ஞாபகமில்லாத போதும் அவர்கள் என்னைதெரியவில்லையா சேர் நீங்க எனக்கு ஆங்கிலம் படிப்பிச்சனிங்க என்று சொல்லி மதிப்பு செய்யும் போது எனக்குஎல்லையில்லா ஆனந்தம் இப்பவும் பலர் என்னிடம் ஆசிர்வாதம் வேண்டிக் கொள்வார்கள். அப்போது இறைவனுக்குத்தான் நன்றி சொல்வேன் என்னை ஆசிரியனாக்கியதற்கு இப்போதுள்ள இளம் மாணவர்களிடம் இப்பண்பு இல்லை ஆசிரியர்என்று இல்லாமல் முதியவர் என்று மதிக்கிறார்களா அதுவும் இல்லை...

• கவிஞராக, ஆசிரியராக நாட்டுக்கூத்து கலைஞராக ஓவியராக உள்ள நீங்கள் இவற்றில் எதை அதிகம்விரும்புகின்றீர்கள்?

எனக்கு கற்பித்தல்தான் பிடிக்கும் கற்பித்தல் என்பது எனக்கு “பொரித்த இறால் உண்பது போல்” அவ்வளவுவிருப்பம் இந்த வயசிலும் நான் O/L,A/L,பட்டதாரிகள். தொழில் புரிபவர்கள் என எல்லோருக்கும் ஆங்கிலம் கற்பித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். குறிப்பாக பல்கலைக்கழக இறுதியாண்டு நிறைவு செய்பவர்கள் தங்களின்உயர் படிப்பினை நிறைவு செய்ய (Project) கொடுக்க வேண்டும். அதற்காக என்னை அணுகுவார்கள் அவர்களுக்கு கலைநாட்டுக்கூத்து ................... இன்னும் ஏராளமான நுணுக்கங்களைம் அறிவுரைகள் தகவல்களையும் வழங்கியுள்ளேன் வழங்கி
வருகின்றேன். ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்பார்கள். அதுபோல எனது மூன்று பிள்ளைச் செல்வங்களும் இஞ்சினியராக விரிவுரையாளராக, மருத்துவதாதியாக பணிபுரிகின்றார்கள் மகிழ்ச்சியே...


• ஆசிரியப்பணிக்காலத்தில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று?

1990 காலப்பகுதியில் தலைமன்னார் பாடசாலைக்கு சென்று கொண்டு இருக்கின்றோம் பேரூந்தில் பிரச்சினையானசூழல் வீதிப்பாதுகாப்பில் நின்ற பொலிஸ்காரர் எங்கள் பேரூந்தை மறித்து சிங்களத்தில் கூறினார் “குருவரயோவித்தராய் வைண்ட” ஆசிரியர்கள் மட்டும் இறங்குங்கள் என்று மரியாதை இல்லாத தொனியில் ஒவ்வொரு ஆசிரியரும்என்னைப் பார்க்கின்றார்கள் 15 ஆசிரியர்களும் நான் அதிபர் எல்லோரும் இறங்குங்க பிள்ளைகள் நான்ஆசிரியர்களை பிள்ளைகள் என்றுதான் அழைப்பேன் நான் அந்த அதிகாரியிடம் மரியாதையாகப்பேசு எனக்குகோபம் வந்துவிட்டது. இன்றைக்கு பாடசாலை விடுமுறை இந்த இழிவான செயலுக்காக நாங்கள் கல்வித்திணைக்களம் போய் ஒருமுடிவெடுக்கத்தான் போறோம் என்றேன் அவர் அதை பெரிதாக எடுக்கவில்லை.

நான் பாடசாலை வந்து அனைத்த மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் சொன்னேன் இன்று பாடசாலை இல்லை அவ்வளவுபேரும் மன்னார் கல்விக்கோட்டத்திற்கு போவம் என்று சொல்லி ஒன்று திரள எங்கள் பாடசாலைக்கு முன்தான்பொலிஸ் நிலையம் பொலிஸ் பெரிய அதிகாரியும் அந்த அதிகாரியும் எங்கள் பாடடசாலையை நோக்கி வருகிறார்கள்.

சேர் இதை பெரிது படுத்த வேண்டாம் என்றார் உயர் அதிகாரி இல்லை இவர் எங்கள் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் அது போலவே அந்த பொலிஸ் அதிகாரியும் மன்னிப்பு கேட்டார் நான் சொன்னேன் இங்கு நீர் இந்த
பதவியில் நிற்பதற்கு காரணம் யார்.. நிர் சுயமாக கற்றீரா உமது தாய், தந்தை கற்பித்தார்களா.. இல்லை நீர்மட்டுமல்ல உமது உயர் அதிகாரியும் ஏன் எல்லாருமே ஒவ்வொரு ஆசிரியரினால் கற்பிக்கப்பட்டவர்கள் தான்அதை மனதில் வைத்துக்கொள்ளும் ஆசிரியர்களை முதலில் மதிக்கப் பழகும் என்று சொல்லி அனுப்பி பாடசாலையினைஆரம்பித்தோம். பாடசாலை முடிந்து மதியம் பேரூந்தில் நின்று ஏறிக் கொள்கின்றோம் அங்கு அதிகாலையில்
எம்மை அவமானப்படுத்திய அந்த பொலிஸ் அதிகாரி மூட்டை முடிச்சுகளோடு இருக்கிறார். விசாரித்தபோதுவேறு இடத்திற்கு மாற்றமாம். இதைப் போல இன்னும் பல சம்பவங்களை உள்ளன. சில நேரங்களில் பேரூந்து இல்லாமல்நடந்து சென்றும் திரும்பியுள்ளோம் தலைமன்னார் பாடசாலைக்கும் பேசாலைக்குத் இடையில் வீதியில் நிற்கும்நாவற்பழம் மாங்காய்களை பிடிங்கி தின்றுகொண்டு நடந்து வந்த காலம் அது .

• வாழ்வில் மிகவும் துயரமான சம்பவம் என்றால் அது?


என்னுடைய அன்புத்தந்தையின் இறப்புத்தான் என் தந்தையின் இறப்பை என்னால் ஈடு செய்ய முடியாது பல மாதங்கள் என்னால் தூக்கமே இல்லை அவ் நினைவுகள் இன்னும் என்னை கொலை செய்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல இப்போது எனது உறவுகளினால் மிகவும் துன்பப்படுகிறோம் எவ்வளவு கொடுமையானது என்றால் அக்கொடுமையை 28 பக்கங்கள்எழுதிவைத்துள்ளேன் என் இறப்பிற்கு பின் இதை படிக்க வேண்டும் என்று வெறுப்பு சாசனம்

• உங்கள் வாழ்வில் சந்தோஷமான விடயம்?

அது எனது கலாபூஷண விருது பெற்ற போதும் மன்னார் மண்ணில் உள்ள சர்வதேச சமாதானத்திற்கான சம்மேளனம்வழங்கிய சமாதானத்தூதுவர் விருது கிடைத்தவர்கள் 7 பேர்களின் நானும் ஒருவன். பெரிதாக சந்தோஷம் என்பதற்குஒன்றும் இல்லை எனது ஆசைகள் ஏராளம் நானே திருப்திப்பட்டுக் கொண்டு இருக்கின்றேன்.

• நீங்கள் இதுவரை செய்த சேவையில் பெரிய சேவை?

அருமையான கேள்வி என்னுடைய 78 வருட வாழ்க்கையில் பெரிய சேவையும் சவாலான விடையமும் என்றால் எங்கள் பழமை மிக்க பேசாலை மண்ணில் அமைந்துள்ள புனித வெற்றிநாயகி ஆலயத்தினுள் அமைந்திருக்கும் காண்பவரை வியக்கவைக்கின்ற அழகும் தோற்றமும் கொண்டு வெற்றிநாயகி வீற்றிருக்கும் அரியனை சிங்காசனமாகும். 115 வருட
பழமைவாய்ந்த இவ் அரிய சிங்காசனத்தினை 2004 புதிய ஆலயக்கட்டிடத்தினை கட்டியபோது இது புதுமைவிரும்பிகளால் புறக்கணிக்கப்பட்டு சில்லம் சில்லமாக சிதறடிக்கப்பட்டது அங்கும் இங்குமாக கிடந்தது. நான் பங்குத்தந்தையிடம் மக்களிடமும் சொன்னேன் இவ்வரிய ஆசனத்தை அழியவிடக்கூடாது திருத்த வேலைகள் செய்து மீண்டும் கோயிலே வைக்க வேண்டும்என்றேன்... யார் திருத்தியமைப்பது...? பலமுனைகளில் இருந்து கேள்வி…..? நான் திரும்பி பங்கு தந்தையிடம்
திருப்பிக் கேட்கிறேன்..இந்தக்கோயிலை நீங்களா கட்டினீர்கள் இல்லையே பணம் கொடுத்தால் மேசன் கட்டுகிறான்.. அதுபோல பணம் கொடுத்தால்
தச்சன் இதைச் செய்வான் இந்தச் சிங்காசனத்தை 10 வருடங்களுக்கு முன் “10 இலட்சம் ரூபாவிற்கு’ வெள்ளைக் காரன் கேட்டான்...திரும்பவும் யார் இதை பொறுப்பெடுத்து செய்யிறது என்ற கேள்வி நான் செய்யிறன் என்றேன். சத்தமாக.... நீங்கள்எப்படி செய்வீங்கள் நான் செய்வன் என்றால் செய்வன். எனக்கு சிலரின் உதவி வேண்டும் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு
100 ரூபா வீதம் கொடுங்க என்றேன். எல்லோரும் ஏளனமும் நக்கலுடனும் இதை இவர் எப்படிச் செய்யப்போகின்றார்என்ற பல கேள்விகளுடன் சம்மதித்தார்கள் ஒவ்வொரு இடத்திலும் கிடந்த தூண்களை பாகங்களை ஒவ்வொன்றாக சேர்த்துக்கொண்டேன் பின்பு என்னைப்போல ஓய்வு பெற்றவர்களை சந்தித்தேன் அவர்களை ஒன்று திரட்டினேன் முதலில்
முரண்பட்டவர்கள் பிறகு இணைந்து கொண்டார்கள் ஏன் இந்த தேவையில்லா வேலை நமக்கு என்றார்கள்.. எங்களுக்கு ஒன்றுமேதெரியாது என்றார் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என்றேன். நானும்எனது நண்பர்கள் மூன்று பல்கலைக்கழகமாணவர்கள் 7 பேரும் இணைந்து கொண்டோம் நான் மாதாவின் முன் நின்று மன்றாடினேன் உன்னில் நம்பிக்கை கொண்டுதான் இக்காரியத்தை செய்யப் போகிறேன் இந்த பாரிய வேலையில் வழித்துணையாக இருக்கவேண்டும் தொடர்ந்தோம்வேலையை 53 நாட்கள் இரவும் பகலுமாய் இணைந்து செயலாற்றினோம்  பதினெட்டரை அடி அகலமும் 22 அடி உயரமும்கொண்ட சிங்காசனம் மீண்டும் நிமிர்ந்து நின்றது.! எல்லோரும் வியந்து போனார்கள் என்னையும் எனது குழுவையும்
மாதா உயர்த்தினார் என் வாழ்நாளின் உன்னத நாள் அன்று 12அடி தூண்களையும் செடி கொடி மலர்கள் அடங்கியபடைப்புச் சிற்பங்களையும் உடைய பரந்த சிங்காசனத்தில் வெற்றிஅன்னை வீற்றிருக்கின்றாள்.

• இவ்வுலக கலை வாழ்வில் உங்களது இலக்கை அடைந்து விட்டீர்கள்.?

இல்லை என்றுதான் சொல்வேன் என்னால் செய்யப்பட வேண்டிய பல விடயங்கள் இன்னும் உள்ளது. பேசாலை மண்ணின்பண்பாட்டு வேர்கள் எனும் நூல் 504 - 2014 வரையான வரலாற்றை எழுதியுள்ளேன் இப்போது வரை 2014 வரை இரண்டாவதுபதிப்பாக யார் இதை எழுதப் போகிறார்கள.; அது போல என்னுடைய கவிதைகள், நாடகங்கள், கட்டுரைத்தொகுப்புக்கள்எனது தந்தையின் நாட்டு வைத்திய குறிப்புக்கள் எல்லாம் அழிந்து கொண்டு இருக்கின்றன இவற்றை எல்லாம் யார் வெளிக்கொண்டுவரப் போகிறார்கள்..? வெளிவருமா என்றால் அதுவும் கேள்விக்குறிதான்..? என் பிள்ளைகளுக்கும் இதில் உடன்பாடும் விருப்பமும் இல்லை எனது தூரஷ்டமே. அதுபோல எம் மண்ணுக்கே உரிய மகிமையானஉடக்குபாஸ், இயேசுவின் திருப்பாடுகள் காட்சியினை அதே சிறப்போடு மகிமையோடு புதுமையாக எனக்கு பிறகு யார்
செய்யப் போகிறார் எனக்கு இப்பவே இயலாமையாகவுள்ளது காரணம் முதுமை என்றால் இவற்றையும் காப்பாற்றமுடியாமல்உள்ளதே என்பது பெருங்கவலையாகவே உள்ளது....

• தற்கால இளைஞர் யுவதிகளுக்கு உங்கள் அனுபவத்தில் இருந்து?

தத்துவஞானி பிளேட்டோ சொல்கிறார் நீ வெள்ளை காகிதமாய் இரு அப்போதுதான் அதில் நல்ல விடயங்களை செயல்களைஎழுதி விட முடியும் ஆசிரியர்களாலும் சான்றோர்களாலும் அவற்றைக் கொண்டு நீ வாழ்வில் சாதனை புரியலாம்ஆனால் நீங்களோ உங்கள் மனத்திரையில் பல அசிங்கமான சிந்தனைகள் எண்ணங்களோடு வாழ்வதினால் வாழ்க்கையின்
மகத்துவத்தினையும் புனித மனிதம் பண்பினையும் இழந்து வாழ்கிறீர்கள் பெற்றோர் பெயரியவர்களுக்கு எங்களை விட என்ன தெரியும் என்று நினைக்கிறார்கள் நினைப்பது தவறு. “மாதா பிதா குரு தெய்வம்” இதை நினைவில் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் வெற்றி உங்கள் கைகளில் தான்.

• கலைஞர்களின் கௌரவம் மனித வாழ்வை பற்றி தங்களின் கருத்து?

மனிதன் தனது வாழ்நாளில் இரண்டில் ஒன்றையாவது செய்து விட வேண்டும.; ஒன்று மரம் நட வேண்டும் இரண்டாவது நூல் ஒன்றைவெளியிட வேண்டும். மனிதன் வாழ்ந்தான் என்பதற்கும் அடுத்து வரும் சந்ததிக்கு எதையாவது எச்சங்களை விட்டுச்செல்லவேண்டும். அப்போதுதான் அவனின் வாழ்விற்கான அங்கீகாரம் அடையாளம் இருக்கவேண்டும் இருக்கும். இங்கு பலர் வாழ்ந்து இருக்கின்றார்கள். அவர்களில் சிலரையே நாம் நினைவில் கொள்கிறோம் அது அவர்கள் விட்டுச் சென்றஎச்சங்கள் சும்மா வாழ்வில் இல்லாமல் பலரின் உள்ளத்தில் வாழ வேண்டும். கலைஞர்கள் முன்வர வேண்டும்.கலைஞர்கள் கௌரவம் எனும் போது அன்றைய காலகட்டத்தில் புலவர்கள் கவிஞர்களுக்கு பொன்னும் பொருளும் ஊரும் ஏன்நாடும் கொடுத்து கௌரவித்தார்கள் சிறப்புச் செய்தார்கள் இப்போது எந்த அரசு என்ன செய்கின்றது ஏன் எங்கள்திருச்சபை கலைஞர்களுக்கு என்ன ஊக்கம் கொடுக்கின்றது. எவரும் கலைஞர்களை கண்டுகொள்வதில்லை நாங்களாகவே எம்மை கௌரவத்தால் மட்டுமே......................

• நீங்கள் எழுதிய நாடகங்கள் பற்றி?

வானொலி நாடகங்கள் 

1. மாதாவின் மகிமை 1965ம் ஆண்டு
2. உத்தானம் 1968 (இயேசுவின் உயிர்ப்பு)
3. வெள்ளிச் செபமாலை 1974 (பத்திரிகைக் குறிப்பு)
4. இறைவாக்கின் நிறைவு 1978 (இயேசுவின் பிறப்பு)
சமூக நாடகங்கள்
1. பாசமா? பாவமா? 1967ல் (மன்னாரில் நடைபெற்ற கலைவிழாப் பேட்டியில் முதல் இடம்
பெற்றது)
2. யார் குற்றம் 1955ல் யோசப் யூனியறேற்றில் அரங்கேற்றம்
வரலாற்று நாடகங்கள்
1. கொற்றம் சரிந்தது (சங்கிலியன் நாடகம்)
2. பிலிமத்தலாவை
இசை நாடகம்
1. மாயை விலகியது (மயான காண்டம் - 5 முறை அரங்கேற்றம்)
2. வாய்மை வென்றது (நளவெண்பா – 2 முறை அரங்கேற்றம்)
3. மதுரை வீதியில் மலர்ந்த விதி (சிலப்பதிகாரம் - 1ம் இடம்)
4. கலியின் சூழ்ச்சி (நளவெண்பா 1ம் இடம்)

ஹாசிய நாடகம்

1. ஆவி அகப்பட்டது2. மன்னவன் வந்தானடி
சமய நாடகங்கள்
1. மன்னிக்க மறுத்தால் (மறைக்கல்வி விழா உயிலங்குளம்)
2. தாழ்ச்சியின் உயர்ச்சி
3. அம்மா என்றால் சும்மாவா (மரியன்னையைப் பற்றியது)
4. ஒளியின் உதயம் (கிறிஸ்துவின் பிறப்பு – யாழ் கொழும்புத்துறை)
நாட்டுக்கூத்துக்கள்
1. இராம இராவணன். 3முறை அரங்கேற்றம் - (அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில்
நடைபெற்ற போட்டியில் 2ம் இடம்)
2. மர்மத் தளபதி (புனித செபஸ்தியார் வரலாறு) நூல் வடிவம் பெற்றுள்ளது.
(மூன்று முறை அரங்கேற்றப்பட்டது)
3. மனம் மாறிய மைந்தன் (ஊதாரிப்பிள்ளையின் உவமை)
4. பிரமாணிக்க மங்கை – தழுவல் - அரங்கேற்றப்படவில்லை
அரங்கேற்றப்பட்ட அனைத்து நாடகங்களும் நெறியாள்கையுடன் பின்னணி ஆர்மோனிய வாத்தியமிசைத்து ஒப்பனை
செய்துள்ளேன்.

வில்லிசைகள் :

1. வானொலியில் விவசாய வில்லுப்பாட்டு
2. மன்னித்தால் மன்னிப்புண்டு
3. இயேசு மனுவுருவானவர் - 2005
4. இடுக்கண் கழைவதாம் நட்பு (தமிழ்த்தின விழாவுக்காக)
5. வைத்தியசாலைப் பணியாளர்கள் (தாதியர் தினத்துக்காக)
(கையெழுத்துப் பிரதிகள் உண்டு)

நீங்கள் எழுதிய நூல்கள்?

1. மர்மத் தளபதி (புனித செபஸ்தியார் நாட்டுக்கூத்து) 2002
2. பேசாலைச் சமூகத்தின் பண்பாட்டுவேர்கள் வரலாற்று ஆவணம் (504- 2004) 2006
3. உள்மனயாத்திரை – 2012 உளவியல் சார்பானது
பவளவிழா கொண்டாடும் வீரகேசரிப் பத்திரிகையில் “மன்னார் மாவட்ட நாட்டுக் கூத்துக்கள்” என்ற தலைப்பில் நீண்ட
கட்டுரை. (கையெழுத்துப் பிரதி கைவசம் உண்டு)
“கூத்துக்கலை” என்ற தலைப்பில் நீண்ட ஆய்வுக் கட்டுரை
பல்வேறு சந்தர்ப்பங்களுக்காக எழுதப்பட்ட கவிதைகள் கட்டுரைகள் வாழ்த்துப்பாமாலைகள் இரங்கற் பாக்கள் ஆலய
திருவிழாக்களுக்கான தேவாரம் கவிதைகள் கொச்சக்கலிப்பாக்கள் ஆகியவற்றின் தலைப்புக்கள்
1. விவிலியம் தனித்தன்மை வாய்ந்தது
2. இளைஞர்களும் இன்றைய எதிர்பார்ப்பும் 3. போதை இன்றிய நாளை
4. ஆலயம் கலாலயம் சமூகம்
5. ஒளியும் வழியும்
6. மனிதம் மலர்ந்திட வேண்டும்
7. எது கவிதை (பேச்சு 5நிமிடம்)
8. பத்திமாவே நீ வாழி! (வைரவிழா வாழ்த்துக் கவிதை)
9. தாதியத்தின் மகத்துவம் (கவிதை)
10. வாழும் மொழி தமிழ்மொழி (ஆய்வுக் கட்டுரை)
11. போதை இன்றிய நாளை தினம்
12. தமிழ் நீதிப்பாடல்கள்
13. ஆசான்களின் அளப்பரிய சேவை
14. உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன் (பேச்சு 6நிமிடம்)
15. முதியோர் ஒவ்வொருவரின் இறப்பில் ஒரு நூலகம் எரிகின்றது
16. சமூகத்திற்கு ஊடகங்கள் ஆற்றக்கூடிய கடமைகள்
17. செபமே வாழ்வின் ஜெயம் (கவிதை)
18. நெஞ்சில் நிறைந்தவர் (திருத்தந்தை பற்றியது)
19. நாளை எங்கள் வானில்
20. தாவீது அரசன்
21. வண யாக்கோமே கொன்சால்வேஸ் அடிகளாரிடம் காணப்பட்ட ஆழமான இலக்கியப்பண்பு
22. விடுதலைப் போராட்டத்தில் கிறீஸ்தவத் தலைவர்கள்
23. இன்றைய சமூகத்திற்குத் தேவையான வியாகுல பிரசங்கம்
24. மனிதம் மலர்ந்திட வேண்டும்
25. குருத்துவ வெள்ளிவிழா நாயகர் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இரா.யோசப் ஆண்டகைக்கு வாழ்த்துரை (ஆங்கிலம்)
26. ஆலயம் கலாலயம், சமுதாயம் - பொன்விழா மலர்
27. பொன்விழா நாயகர் அருட்பணி அ. சேவியர் குருஸ் அடிகளாருக்கு வாழ்த்து மடல்
28. வெள்ளி விழா நாயகர் அருட்பணி எஸ். விக்ரரின் அவிதப்பர் அடிகளாருக்கு பாராட்டிதழ் (ஆங்கிலம்)
29. அருட்பணி சூ.ட. மில்டன் லோகு அவர்களுக்க வாழ்த்து மடல்
30. அருட்பணி ச. நெ. யோகராஜ் அவர்களுக்கு வாழ்த்து மடல்
31. அருட்பணி மி. டேவின் ஜெ. குமார் அடிகளாருக்கு பாராட்டிதழ்
32. சமாதானத் தூதுவர் உயர் திரு. ஆபேல் றெவல் அவர்கட்கு வாழ்த்துப்பா
33. புலவர் அ. செபஸ்தியான் குருஸ் அவர்களுக்கு புகழாரம்
34. உலக ஆசிரியர் தினம்

ஆங்கிலத்தில் கவிதைகள் கட்டுரைகள்

35.Greetings on the occasion of silver jubilee of Dr.G.pilenran professor in jaffna university 
36. 'Fairwell greetings to
37. Souvenir Greetings in occasion of Matrimonial Jubilations
38. Of Mr. Marcus Augustine Leon & Miss Rohini Ratnam
39. Oh! Fatima Dear (Soneet)
40. The mission of Fatima 
மேற்சொல்லப்பட்டவை போன்ற இன்னம் பல கட்டுரைகள் பல..

1. துள்ளுக்குடியிருப்பு காணிக்கை மாதாவை நோக்கி தேவாரம் கவிகள் வேண்டற்பா
2. பாவிலுப்பட்டாங்கட்டிக் குடியிருப்பு குழந்தை இயேசுவை நோக்கி தேவாரம் கவிகள் வேண்டற்பா
3. கீளியன் குடியிருப்பு புனித சவேரியாரை நோக்கி தேவாரம் கவிகள் வேண்டற்பா
விளையாட்டுத்துறை :
கல்லூரிகளிலும் ஆசிரியர் பயிற்சிக் கலாச்சாலையிலும் மும்முறை வெற்றி வீரனாகி சான்றிதழ்களையும்
கிண்ணங்களையும் பெற்றுள்ளேன்.

ஓவியக்கலை :

திருமணங்கள் பூப்பெய்தல் நாடகங்கள் முதலிய வைபரங்களுக்கான சோடினைகள் மயிற்கொலு தாமரைக்கொலு சிகரங்கள்
சீன்ஸ்கள் முதலியவற்றையும் தீட்டியுள்ளேன்.
வரவேற்றுப்பாக்கள்
வாழ்த்துப்பாக்கள் பிரியாவிடைப்பாக்கள் : அருட்பணியாளர்கள் கபிரியேல் அன்ரனிற்ரோ அருள்ராஜ் குரூஸ், சூ.ட.மில்டன்
லோகு ஆகியோருக்கு (வெண்பா, விருத்தப்பா, கொச்சகப்பா, நாடகமெட்டிலான பாக்கள் உட்பட) பேசாலை மக்கள் உவந்தளித்த பாமாலைக்
கொத்து.
சமரகவிகள்
1. அருட்பணி N.குரூஸ் அடிகளாருக்கு (கவிப்பாடல்)
2. அமரர் அதிபர் ஓ.கு.பங்கிராஸ் பெர்ணாண்டஸ் அன்னாருக்கு (கவி)
3. சவாலியூர் து.ஏ.பெல்தானு அவர்களுக்கு (கவிப்பாடல்)
4. அமரர் நீக்கிலான் சூசையப்பு குரூஸ் அவர்களுக்கு (கவி) பாடல்
5. அமரர் சந்தியா செபஸ்தியான் குலாஸ் அவர்களுக்கு (கவி) பாடல்
6. அமரர் தளைவுந்தர் இராக்கினி அவர்களுக்கு தொள்பின் சபையின் துயரம்
7. அமரர். இ.க.துரைராசாவுக்கு தாதியரின் உள்ளக் குமுறல்
8. அமரர் பேதுரு இராயப்பு இளைப்பாறிய அதிபர் முதியோர் சங்கத்தினால்
9. அமரர். சந்தியா பிலேசியஸ் டயஸ் அவர்களக்கு பத்திமா கழக பெயரால்
10. அமரர் சயோசப் நிமால் பீரிஸ் அவர்கட்கு மரியாஸ் பெ.வித்தியா சார்பாக
11. அமரர் அ.பேதுரு குரூஸ் அவர்கட்கு உறவினர் சார்பாக
12. அமரர். தேவராஜன் துயரப் பகிர்வு
கட்டுரைகள்
• வெள்ளிவிழாக் கோலம் பூணும் சின்னப்பண்டிவிரிச்சான் புனித சவேரியார் ஆலயம் தொடர்பானது
• பேசாலைப் பதியில் திருக்குடும்ப அருட்சகோதரிகள் கால்பதித்து 75 வருடங்களாக ஆற்றிய இறைப்பணிகளின் தொகுப்பு• “பேசாலைப் பாரம்பரிய உடக்காலான திருப்பாடுகளின் காட்சி “மன்னார் மாவட்ட நாட்டுக் கூத்துக்கள்” என்ற இரு தலைப்பிலும்
மன்னார் பிரதேச இலக்கிய விழாமலர் (2008) “மன்னல்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகள்.
மேற் சொல்லப்பட்ட அனைத்து நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் சிறு கட்டுரைகள், கவிதைகள், சமரகவிகள் என்பவற்றின் கைப்பிரதிகள்
அச்சுப்பிரதிகள் உண்டு.

இதுவரை நீங்கள் பெற்றுக் கொண்ட விருதுகள் பற்றி?

01. கலாபூசண விருது – 2004.02.04
02. ஆளுநர் விருது வடமாகாணம் 2012 கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சு
03. கௌரவ விருது – கலைஞர்கள் கௌரவிப்பு 2008,
04. எழுத்தாளர் கௌரவிப்பு 2008 – பிரதேச கலை இலக்கிய விழா, மன்னார் பிரதேச செயலகம்
05. கௌரவ விருது – தமிழ் செம்மொழி விழா – 2010. மன்னார் தமிழ்ச் சங்கம்
06. கலைஞர் சங்கமம் பேசாலை – 2014 நினைவுச்சின்னம்
07. எழத்தாளர் தனிநாயகம் அடிகளார் 2013 – மன்னார் தமிழ்ச் சங்கம். நூற்றாண்டு விழா நினைவுச்சின்னம்.
08. 8. Ambassador for peace  – (The Universal peace Federadion Interreligious and International Federadion for world peace)

சமூகப்பணிகள்

நீண்ட காலமாக “வளர்கலை மன்றத்தின்” போ~கராக இருந்து பல நாட்கள் நாட்டுக் கூத்துக்களை எழுதி பழக்கி ஒப்பனை ஹார்மோனிய
பின்னணி இசையுடன் அரங்கேற்றி கலையை வளரக்கிறேன்.
3 முறை முத்தமிழ் விழாவை நடத்தியமை. (முத்தமிழ் மன்றம்)
இப்பொழுது பேசாலை பத்திமா கழகத்தின் “போசகராக பணியாற்றுகிறேன்.
பல முறை ஆலய அருட்பணி பேரவையில் உறப்பினராக இருந்து பணியாற்றியமை.

பல வருடங்கள் பத்திமா ம.ம.வித்தியாலயத்தின் பெற்றோர் ஆசிரிய சங்கத்தின் செயலாளராக பணியாற்றியமை.மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிசியத் தலைவராக 4 வருடங்கள் பணியாற்றியமை
இப்பொழுது 200க்கும் அதிகமான பேசாலை புனித வெற்றிநாயகி முதியோர் சங்கத் தலைவராக கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன்.

பல்கலைக் கழக கல்விக்கல்லூரி மாணவர்களுக்கு பேசாலை பாரம்பரிய உடக்காலான இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி பற்றியும்,நாடகம், வாசாப்பு, நாட்டுக்கூத்து என்பவை பற்றியும் ஆழமான விளக்கங்களையும் கொடுத்து வருகின்றேன்.ஓய்வு பெற்று 18 வருடங்களாகியும் வளர்ந்தோருக்கான ஆங்கில வகுப்புக்களை நடாத்தி வருகின்றேன்.

மன்னார் மாவட்டம் மக்கள் கலைஞர்கள் முன்னுரிமையளிக்கும் நியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து.?

நியூமன்னார் இணையத்தின் விம்பம் பகுதி ஊடாக கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் வளர்க்க வேண்டும். என்ற எண்ணம்முன்னேற்ற வேண்டும் என்ற சிந்தனை மகத்தான சிந்தனை செயலாற்றும் மன்னார் இணைய நிர்வாகிக்கும் அவருடைய இணையக் குழுவிற்கும் குறிப்பாக வீடு தேடி வந்து நீண்ட நேர செவ்விகண்ட கவிஞர் வை.கஜேந்திரன் உங்களுக்கும்
முதற்கண் வாழ்த்துக்களும் பாராட்டும்... எனக்கும் என்னைப் போன்ற கலைஞர்களுக்கும் இது அளப்பரிய சேவைதான்அத்தோடு எனது வேண்டுகோள் ஒன்று..? என்னைப் போன்ற மூத்த கலைஞர்களின் தரமான படைப்புகளை இனம் கண்டு அவற்றைமன்னார் இணையத்தின் மூலமாகவோ வேறு யாரிடமாவது நிதியுதவியோடு கலைஞர்களின் படைப்புக்களை வெளிக் கொணர்ந்துகலைக்கும் கலைஞர்களுக்கும் உதவிபுரிந்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும் இனிவரும் காலத்தில் இவ்வாறான பல சேவைகளை
செய்வீர்கள் என எதிர்பார்த்து இணைய சேவையை இன்னும் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்.

நியூ மன்னார் இணையத்திற்கான சந்திப்பு,
வை. கஜேந்திரன் 



























































பல்துறை விற்பன்னர் பேசாலை மண் பெருமை கொள்ளும் முதுபெரும் கலைஞர் கலாபூஷணம் S.A. மிராண்டா ஐயா அவர்களின் அகத்தில் இருந்து. Reviewed by NEWMANNAR on November 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.