மன்னாரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதில் சர்ச்சை- தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையில் வெடித்தது சர்ச்சை-
மன்னாரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதில் சர்ச்சை- தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையில் வெடித்தது சர்ச்சை-
முன்னாள் எம்.பி.சாள்ஸ் நிர்மல நாதனுக்கு எதிராக போர்க்கொடி
(02-07-2025)
மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் குறித்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்ய ப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (1) மீண்டும் திறந்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில்,குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த சிலையை புனர் நிர்மானம் செய்யும் நடவடிக்கையை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் புனர் நிர்மாண பணிகள் இடம் பெற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை(1) தந்தை செல்வாவின் சிலை மீண்டும் திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மத தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கட்சியின் உறுப்பினர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மத தலைவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் நகர கிளை தலைவராக உள்ள நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் மாலை அணிவிக்க வேண்டிய தருணத்தில் , நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மலர் மாலை அணிவித்து உள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த நிகழ்வின் இறுதியில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சலசலப்பு ஏற்பட்டது.
குறித்த சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் தலைவர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு எதிராக கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கடும் தொனியில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள சில கருத்து முரண்பாடு காரணமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் சாள்ஸ் மற்றும் பொருளாளர் பரஞ்சோதி ஆகிய இருவருடைய கடிதங்கள் எமக்கு கிடைக்க பெற்றுள்ளது.
ஆனால் குறித்த கடிதத்தை நாங்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment