உயிருக்காகப் போராடும் பிரபல கிரிக்கெட் வீரர்
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய தேசிய அணி வீரர் பில்ஹியூஸ் தலையில் பந்து தாக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் உயிருக்காக போராடி வருகின்றார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடிய பில் ஹியூஸ், எகிறும் பந்து (பவுன்சர்) ஒன்று தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு அவுஸ்திரேலிய அணிக்காக 63 ஓட்டங்களை பெற்று ஆடி வந்த பில் ஹியூஸ், நியூசௌத் வேல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஷோன் அபோட் வீசிய பயங்கர பவுன்சர், இடது காதையொட்டி தலைப்பகுதியில்பயங்கரமாகத் தாக்க அவர் சிறிது நேரம் முழங்காலில் தன் கையை ஊன்றி தள்ளாடினார். இந்நிலையில் அவர் உடனடியாக ஆடுகளத்தில் மயங்கி விழுந்தார்.
மயங்கி விழும் போதும் தரையில் தலை சற்றே வேகமாக மோதியுள்ளது. பவுன்சர் பந்தை அவர் எதிர்கொண்டு ஆட முயன்றார் ஆனால் பந்து மட்டையில் சிக்கவில்லை. இதனையடுத்து மூளையை தாக்கும் விதமாக குறித்த பந்து மண்டையில் அடிபட்டுள்ளது.
உடனடியாக மைதானத்திற்கு அம்பியுலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனேயே அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. பந்து அடிபட்டதனால் மூளையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் அல்லது அதிர்ச்சியை குறைக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
அறுவை சிகிச்சையின் விளைவுகள் தெரிய 24 மணி முதல் 48 மணி நேரங்கள் ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இப்போதைக்கு அவர் மருந்துகள் மூலம் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். உயிர்காப்பு அமைப்புகளுடன் அவர் தற்போது மருத்துவமனையில் உள்ளார். அவரது உடல் நிலைகுறித்து தற்போதைக்கு ஒன்றும் கூறுவதற்கில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பில் ஹியூஸ் ஆடும்போது மைதானத்தில் அவரது ஆட்டத்தை தாயாரும், சகோதரியும் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் பில் ஹியூஸ் ஆபத்தான காயமடைந்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலிய வீரர்கள் அவர் உயிர் பிழைக்க வேண்டி தமது வேண்டுதல்களை டுவிட்டரில் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
உயிருக்காகப் போராடும் பிரபல கிரிக்கெட் வீரர்
Reviewed by NEWMANNAR
on
November 25, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 25, 2014
Rating:






No comments:
Post a Comment