பொடுகை விரட்ட… இளநரையைத் தடுக்க…
இன்று பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்னை, பொடுகு மற்றும் நரைமுடி. இவற்றைக் களைய கடை கடையாய் ஏறி இறங்கி, கண்ட கண்ட ஹேர் ஆயில், ஷாம்பூகளை வாங்கித் தேய்த்து, டாக்டர் அறிவுரை வரைக் கேட்டும் பலன் எதுவும் கிடைப்பதில்லை; ஆனால் பக்கவிளைவுகளுக்கும் பஞ்சமில்லை!
பிரேசிலில் உள்ள அமேசான் காடு, அயர்லாந்து காடு, ஆப்பிரிக்க காடுகள் போன்றவற்றில் விளையக்கூடிய அரிய வகை மூலிகைகளைவிட, நம் பாட்டிகள் கற்றுக்கொடுத்த கேசத்திற்கான இயற்கை சிகிச்சைகளை செய்து பார்க்கலாமே..!
பொடுகை விரட்ட…
* நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய வசம்பை இடித்து தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு தலையில் தேய்க்கலாம்.
* பசலைக்கீரையை மையாக அரைத்து தொடர்ந்து 3 நாட்கள் தலையில் தடவி குளித்து வரலாம்.
* நல்லெண்ணெயுடன் வேப்பம்பூ, வெல்லம் சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வரலாம்.
* அரை கப் தேங்காய்ப் பாலை 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து வாரம் ஒருநாள் தலைக்குத் தேய்த்துக் குளித்து வரலாம்.
* வில்வக்காயைப் பொடியாக்கி சம அளவு சீகக்காய்த்தூள் சேர்த்து தினமும் தலையில் தேய்த்து குளித்து வரலாம்.
நரை முடியைத் தடுக்க…
* தாமரைப்பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கஷாயம் செய்து காலையும், மாலையும் குடித்து வந்தால் காலப்போக்கில் நரைமுடி கருமையாகும்.
* கடுக்காய், நெல்லி வற்றல் (காய்ந்த நெல்லிக்காய்), தான்றிக்காய் தலா 50 கிராம் எடுத்துப் பொடித்து, அதனுடன் வெல்லம் சேர்த்து சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாகச் செய்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் நரை முடி மறையும்.
* நெல்லி வற்றல், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் சம அளவு எடுத்து பால்விட்டு அரைத்து, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் நரை விலகும்.
* நெல்லிச்சாறுடன் அதே அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் இளநரை மறையும்.
* மருதாணி, வெந்தயக்கீரை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி எடுத்து 1 லிட்டர் தேங்காய் எண்ணெயில் இளஞ்சூட்டில் காய்ச்சி ஆற வைத்து தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் நாளடைவில் நரைமுடி மாறும்.
குறிப்பு: சைனஸ், சளி தொந்தரவு உள்ளவர்கள் மழை & குளிர் காலத்தில் இவற்றைச் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களும் வெதுவெதுப்பான நீரில் தலைக்குக் குளிப்பது நல்லது.
பொடுகை விரட்ட… இளநரையைத் தடுக்க…
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:


No comments:
Post a Comment