மன்னார் மறைமாவட்ட ஆழமான விசுவாசம் கொண்ட பொதுநிலையினரால் பாதயாத்திரை-02-03-2016
வருடந்தோறும் மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் கொண்ட நிர்வாக குழுவினால் மேற்கொள்ளப்படும் வவுனியா கோமரசன்குளம் கல்வாரிக்கான பாதயாத்திரை இவ்வருடம் இவர்களால் மேற்கொள்ளப்படாத போதும் ஆழமான விசுவாசம் கொண்ட பொதுநிலையினரால் இவ்வருடம் இப்பாதயாத்திரை இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வருடந்தோறும் கத்தோலிக்கர்கள் அனுசரித்துவரும் தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் வவுனியா உள்ளடக்கப்பட்ட மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்கர் வவுனியாவில் அமைந்துள்ள கோமரசன்குளம் கல்வாரிக்கு பாதயாத்திரை செல்வது வழமையான விடயமாக இருந்துவந்தது.
இப்பாதயாத்திரைக்கான சகல ஒழுங்குகளையும் கடந்த காலங்களில் மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் இவ்வருடம் இப்பாதயாத்திரைக்கான ஒழுங்குகளை மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களால் ஒழுங்கமைப்பு செய்யாதபோதும் ஆழமான விசுவாசம் கொண்ட இறைமக்கள் இவ்வருடம் இப்பாதயாத்திரைக்கான ஒழுங்கமைப்பை மேற்கொண்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இப்பாதயாத்திரையில் தலைமன்னார் பங்கு, பேசாலை பங்கு, மன்னார் பேராலய பங்கு, வங்காலை பங்கு ஆகிய பங்கு மக்கள் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று புதன்கிழமை காலை மன்னாரிலிருந்து ஆரம்பமாகும் பாதயாத்திரையில் தலைமன்னார் பேசாலை மன்னார் பேராலய பங்குகளின் பாதயாத்திரிகர்கள் இன்று புதன் கிழமை காலை மன்னார் பேராலயத்தில் நடைபெறும் வழிபாட்டைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் தங்கி பின் நாளை வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டு வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரவு தங்கி பின் வெள்ளிக்கிழமை அதிகாலை வவுனியா கோமரசன்குளம் கல்வாரியை நோக்கி புறப்படுவர்.
இதேவேளை வங்காலை பங்கு பாதயாத்திரிகர்கள் வங்காலை புனித ஆனாள் ஆலயத்திலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை அங்கு நடைபெற்ற வழிபாட்டைத் தொடர்ந்து புறப்பட்ட இவர்கள் பரப்புக்கடந்தான் ஊடாக சென்று பெரியபண்டிவிரிச்சான் புனித மரியகொறற்றி ஆலயத்தில் இரவு தங்கி பின் இவர்கள் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் தங்கி மன்னார் தலைமன்னார் பேசாலை பாதயாத்திரிகர்களுடன் இணைந்து அனைவரும் வவுனியா கோமரசன்குளம் கல்வாரியை நோக்கி புறப்படுவர். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இவர்கள் கோமரசன்குளம் கல்வாரி புனித யாத்திரிகர்கள் தலத்தை அடைந்ததும் அங்கு நடைபெறும் திருச்சிலுவைப்பாதை மற்றும் திருப்பலியிலும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதி பங்கு தந்தையர்களின் ஆலோசனையுடன் மன்னாரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கு இராணுவம், பொலிஸ், மன்னார், வவுனியா இலங்கை செஞ்சிலுவை சங்கங்கள் என்பனவும் மன்னார் பிரதேச செயலக கிராம அலுவலர்கள் மற்றும் உயிலங்குளம் முருங்கன் வர்த்தகர்கள் ஆகியோர் இவர்களுக்கான தண்ணீர் பந்தல் குளிர்பானங்கள் உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2013ஆம் ஆண்டும் இவ்வாறான பாதயாத்திரிகைக்கு மன்னார் மறைமாவட்ட நிர்வாகம் ஒழுங்குகள் மேற்கொள்ளாதிருந்தபோதும் விசுவாசிகள் கொண்ட பொதுநிலையினர் குழுவினரே தாங்களாக இவ்வாறான செயல்பாட்டை மேற்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்த க்கது
மன்னார் மறைமாவட்ட ஆழமான விசுவாசம் கொண்ட பொதுநிலையினரால் பாதயாத்திரை-02-03-2016
Reviewed by Author
on
March 02, 2016
Rating:
Reviewed by Author
on
March 02, 2016
Rating:



No comments:
Post a Comment