அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் மூன்று கிராமங்களிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

மன்னார் மாவட்டத்தில் தம்பனைக்குளம், மடுக்கரை மற்றும் வேப்பங்குளம் ஆகிய மூன்று கிராமங்களிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு உள்ளமை அக்கிராமங்களில் உள்ள சூழல் பாதுகாப்பு குழுக்களினால் கண்டறியப்பட்டுள்ளதோடு அக்கிராம மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால் களுக்கும் முகம் கொடுத்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தினால் மிசிறியோ (misereor) அமைப்பின் நிதி உதவியுடன் மாவட்டத்தில் 5 கிராமங்களில் சூழல் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. -இந்த நிலையில் குறித்த கிராமங்களுக்கு இன்றைய தினம் (22) காலை விஜயம் செய்த தேசிய நிலையத்தின் சூழல் பாதுகாப்புக் குழுவினரிடம் கிராமங்களில் உள்ள சூழல் பாதுகாப்பு குழுவினர் குறித்த பிரச்சினையை முன் வைத்துள்ளனர். 

மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 5 கிராமங்களில் சூழல் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், குறித்த குழுக்களின் செயற்பாடுகளை ஆராயும் வகையிலும் அவர்களை வழிப்படுத்தும் முகமாகவும் தேசிய நிலையத்தின் சூழல் பாதுகாப்புக் குழு களப்பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) காலை மன்னாரில் உள்ள குறித்த இலக்கு கிராமங்களுக்கு விஜயம் செய்திருந்தனர். இதன் போது மன்னார் -மதவாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள தம்பனைக்குளம் ம.வி பாடசாலைக்கு குறித்த குழுவினர் விஜயத்தை மேற்கொண்டனர். 

 இதன் போது குறித்த குழுவின் பிரதிநிதிகள் மாணவர்களுக்கு சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கியதோடு,பாடசாலைக்கு தேவையான உதவிகளை அடையாளம் கண்டு குறித்த தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர். மேலும் குறித்த பாடசாலை வளாகத்தில் ஒரு தொகுதி மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அதனைத்தொடர்ந்து தம்பனைக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சேதனைப் பசளை உற்பத்தியையும் குறித்த குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர். இதன் போது சேதனைப் பசளை உற்பத்தி,உள்ளூர் விதை உற்பத்தியை மேற்கொள்ளும் 40 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் குறித்த பயனாளிகளுக்கு பயிற்சிகள் வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர் மடுக்கரை மற்றும் வேப்பங்குளம் கிராமங்களுக்கும் விஜயம் செய்தனர். 

 மடுக்கரையில் கிராம அலுவலர்,மற்றும் மடுக்கரை சூழல் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து குறித்த குழுவினர் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டனர். இதன் போது குறித்த கிராமத்தில் குடி நீர் பிரச்சினை காணப்படுவதோடு, குறித்த கிராமத்தில் காணப்படும் பொது கிணறுகள் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதோடு, அவற்றை மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டிய நிலை உள்ளதாக மடுக்கரை சூழல் பாதுகாப்பு குழுவினர் வருகை தந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். 

 மேலும் வேப்பங்குளம் கிராமத்திற்குச் சென்ற குழுவிடம் வேப்பங்குளம் கிராம சூழல் பாதுகாப்பு குழுவினர் பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்தனர். குறிப்பாக நீர் பிரச்சினை,அபிவிருத்திக்கு என மரங்கள் வெட்டப்பட்டு ள்ளமையினால் அங்கு ஏற்பட்டுள்ள சூழல் பிரச்சினை,சட்டவிரோத மண் அகழ்வினால் ஆற்று நீருடன் கடல் நீர் கலப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தெரிவித்துள்ளதோடு, விவசாயம் மற்றும் கால்நடைகளின் தேவைக்காக பயன்படுத்துகின்ற சிறிய குளத்தை புனரமைப்பது தொடர்பாக தமது முன்மொழிவுகளை முன் வைத்துள்ளனர்.


 -குறித்த இலக்கு கிராமங்களில் குடிநீர் பாரிய பிரச்சினையாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கிராமங்களில் இடம் பெற்று வருகின்ற மண் அகழ்வினால் ஆற்று நீருடன் கடல் நீர் கலக்கிறது.இதனால் மக்களின் குடிநீர் உப்பு நீராக காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மடுக்கரை வேப்பங்குளம் மற்றும் தம்பனைக்குளம் போன்ற கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு உள்ளமை அக்கிராமங்களில் உள்ள சூழல் பாதுகாப்பு குழுக்களினால் கண்டறியப்பட்டுள்ளதோடு அக்கிராம மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

எனவே குறித்த மூன்று கிராம மக்களும் இணைந்து தமது கோரிக்கையை முன் வைத்துள்ளதோடு, குறித்த கிராமங்களில் இடம் பெற்று வருகின்ற மண் அகழ்வை நிறுத்த தேசிய ரீதியில் நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர். தேசிய நிலையத்தின் சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் சஜித்,திட்ட இணைப்பாளர்களான கசூம்,சோபா,வைஷ்ணவி மற்றும் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய பணியாளர்கள் ஆகியோர் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












மன்னார் மாவட்டத்தில் மூன்று கிராமங்களிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது Reviewed by Author on March 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.