மேதகுவிற்கு வணக்கம்...: நாடாளுமன்றில் முதலாவது உரையை ஆற்றினார் வைத்தியர் அர்ச்சுனா
நாட்டில் சமாதானம் மற்றும் சமத்தும் நிலவ வேண்டும் என்பதற்காக தன்னுயிர் நீத்த ஈழ உறவுகளுக்கும், அதேபோல் சிங்கள மற்றும் முஸ்லிம் உறவுகளையும் நினைவு கூருவதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தமது உரையில் அவர் மேதகு தலைவர் அவர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்துவதாகவும் கூறினார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீது இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தனது கன்னிரையை ஆற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
“வரலாற்றை அர்ப்பணிப்பில் இருந்து ஆரம்பிக்க ஆசைப்படுகின்றேன். என் உயிரிலும் மேலான, என் இனத்தின் மானம் காத்த வீரத் தமிழன், இருந்தால் தலைவன்... இல்லையேல் இறைவன் எனப் போற்றப்படுகின்ற அன்புக்கும், மதிப்பற்குறிய மேதகு அவர்களுக்கும், அவர் காட்டிய வாழ்வில் உயிரை துச்சமென மதித்து என் இனத்தின் மானம் காத்த வீர மறவர்களுக்கும், அதேபோல் இதுவரை காலமும் நடந்த இந்த கோர யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சகல தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர்களுக்கும், முக்கியமாக ரோஹன விஜேவீர மற்றும் அவர்களுடைய தோழர்களுக்கும் எனது வீர வணக்கத்தையும், அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” எனக் கூறி அர்ச்சுனா எம்.பி தமது உரை ஆரம்பித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
”வடக்கு மாகாண மக்களை பிரதிநிதித்துப்படுத்தி இந்தச் சபைக்கு நான் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன். மிகவும் பொறுப்புடனும், நன்றியுடையவனாகம் இதனைக் கூறிக்கொள்கின்றேன்.
இந்நாட்டில், சமாதானம் மற்றும் சமத்துவத்தை அடைய வேண்டும் என்பதற்காக தன்னுயிரை நீத்த ஈழ உறவுகளுக்கும், அதேபோல் சிங்கள மற்றும் முஸ்லிம் உறவுகளையும் இந்த இடத்தில் நினைவு கூற விரும்புகின்றேன்.
இந்த நேரத்தில் எனது தந்தையையும் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். அவர் 1966ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் கால்பந்தாட்ட அணியின் தலைவராகவும் ஒரு வீரராகவும் இருந்தார்.
1983ஆம் ஆண்டு அப்போது நிலவிய சூழ்நிலை காரணமாக நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற நேரிட்டது.
எனினும், நான் உண்மையை கூற கடமைப்பட்டுள்ளேன். இரண்டு தசாப்தங்கள் எனது தந்தை விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவில் சேவையாற்றினார் என்பதை கூறிக்கொள்கின்றேன்.
எவ்வாறாயினும், எனது தந்தை இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டார். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் நான் உண்மைமைய பேச வேண்டியிருக்கின்றது. நான் இன்று இங்கிருப்பது நாட்டை பிரிப்பதற்காக அல்ல. நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் நிலவ வேண்டும். அதனையே நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம்.
நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பிரிவினைகளும் இன்றி இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். நான் வைத்தியராக கடமையாற்றிய காலப்பகுதியில் பல்வேறு ஊழல் மோசடிகளை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளேன்.
இதனால் பல எதிர்ப்புகளை நான் சந்திக்க நேரிட்டது. இந்த நாடாளுமன்றம் சுயாதீனமாக செயற்படும் என நான் நம்புகின்றேன். இதன் ஊடாக பொறுப்பு கூறல் மற்றும் அனைவருக்கு சமத்துவம் கிடைக்கும் என நம்புகின்றேன்.
கடந்த காலங்களில் எமக்கு ஏற்பட்ட கடுமையாக காயங்களுக்கு நாம் நிவாரணம் தேட வேண்டும். எமக்கு மிகவும் துயரமான ஒரு கடந்த காலம் இருக்கின்றது. பலர் தங்களில் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களை மீள குடியமர்த்த வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வடக்கு கிழக்கில் அதிகளவான ஆயுதம் தாங்கிய படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு நல்லிணக்கம் என்ற பெயரில் தீர்வுகாண வேண்டும்.
மேலும் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் மக்களுக்கு இலங்கை குடியுரிமை பெற்றுக்கொடுத்து அவர்களின் பூர்வீக தாய் நிலத்திற்கு திரும்ப வழிசெய்ய வேண்டும்.” என அர்ச்சுனா எம்.பி வலியுறுத்தினார்.
Reviewed by Author
on
December 04, 2024
Rating:


No comments:
Post a Comment