ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம் - வட மாகாண ஆளுநர்
நான் நான்கு மாவட்டங்களில் மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தைவிட இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம். இன்றும் மறக்க முடியாத காலம். என்னிடம் கற்ற மாணவர்கள் உயர் பதவிகளில் இருப்பதைப்பார்க்கும் போது பெருமையாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
தேசியப் பாடசாலையான முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இந்த வைரவிழாவில் ஆளுநராகக் கலந்துகொள்வதிலும் பார்க்க முன்னாள் ஆசிரியர் என்ற வகையில் பங்கேற்பதையே பெருமையாகக் கருதுகின்றேன். அந்தக் காலத்தில் என்னுடன் விடுதிகளில் ஒன்றாக தங்கியிருந்து கற்பித்த சக ஆசிரிய நண்பர்கள் இருக்கின்றார்கள். நாங்கள் அன்றைய நாள்களில் பாடசாலை நிறைவடைந்த பின்னர் போட்டிபோட்டுக்கொண்டு மேலதிக வகுப்புக்களை மாணவர்களுக்கு எடுத்தோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து தங்கி நின்று கற்பித்து சனிக்கிழமை காலையிலிருந்து இங்கிருந்து யாழ்ப்பாணம் சென்று மீண்டும் ஞாயிறு இங்கு திரும்பவேண்டும். அன்றைய சூழலில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலம். யாழ்ப்பாணம் சென்று வருவதில் பெரும் நெருக்கடிகளையும், சோதனைகளையும் எதிர்கொண்டிருந்தேன். ஒரு தடவை பாடசாலை மாணவர்களுடன் சேர்ந்து நாங்கள் ஆசிரியர்களும் ஷெல் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்து ஓடினோம். அத்தகைய பயங்கரமான சூழலில் கற்பித்திருந்தாலும் அது என்றும் மறக்க முடியாத பொற்காலம்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் மிகக் குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதனிலை பாடசாலையாக வளர்ந்திருக்கின்றது. அதற்கு இந்தப் பாடசாலைக்கு தலைமைத்துவம் வழங்கியவர்கள், ஒத்துழைப்பு வழங்கியவர்கள்தான் காரணம்.
எந்தவொரு நிறுவனமும் வளர்ச்சியடைவதும் பின்நோக்கிச் செல்வதும் அதன் தலைமைத்துவத்தில்தான் தங்கியிருக்கின்றது. எங்கு தலைமைத்துவம் பிழையாகப்போகின்றதோ அங்கு சரிவு ஆரம்பிக்கின்றது. அதைப்போல வெளிப்படைத்தன்மையும் முக்கியம். எவரும் நம்பிக்கை வைத்துச் செயற்படக்கூடிய நிறுவனமாக இருக்கவேண்டும். பாடசாலை அதிபர் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதால்தான் அவர் மீது நம்பிக்கை வைத்து பழைய மாணவர்களும் உதவிகளைச் செய்கின்றனர்.
இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்கள் பலர் புலம்பெயர் தேசங்களிலிருந்து இங்கு கைகொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள். அவர்களால்தான் இன்று இந்த நிலைமைக்கு வளர்ச்சியடையக்கூடியதாக உள்ளது. வைத்திய கலாநிதி விமல் ஜெயரட்ணம் இந்தப் பாடசாலையுடன் நேரடித் தொடர்புடையவராக இல்லாதபோதும் அவர் பல்வேறு உதவிகளைச் செய்திருக்கின்றார். அவருக்கு பாடசாலைச் சமூகமும், ஊர்மக்களும் இணைந்து கௌரவிப்பு நிகழ்வு நடத்தவேண்டும்.
நான் இந்தப் பாடசாலைக்கு ஆசிரியராக ஆரம்பத்தில் நியமிக்கப்படவில்லை. புதுக்குடியிருப்புக்கே எனது நியமனம் கிடைத்தது. இந்தப் பாடசாலைக்கு இரசாயனவியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் பதவியேற்க தாமதமாகும் என்பதால் நானாக விரும்பிக்கேட்டு இங்கு வந்தேன். இரண்டு வருடங்களில் அவர் இங்கு வர விரும்பியபோதும் நான் இந்தப் பாடசாலையை விட்டுச் செல்ல விரும்பவில்லை. என்னோடு கற்பித்த ஆசிரியர்கள், என்னிடம் படித்த அந்தப் பண்பாண மாணவர்கள், இந்தச் சமூகத்தைவிட்டுச் செல்வதற்கு எனக்கு மனம்வரவில்லை.
இப்போது ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு தினமும் வந்து செல்கின்றார்கள். அதன் ஊடாக ஆரோக்கியமான மாணவர் சமூகத்தை அவர்களால் உருவாக்க முடியாது. இங்கு தங்கியிருந்து சேவையாற்றவேண்டும். இப்போதும் ஆசிரிய இடமாற்றங்கள்தான் எங்களுக்கு சவாலாக இருக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்தே ஆசிரியர்கள் இங்கு வருகின்றார்கள்.
இந்தப் பிரதேசத்திலிருந்தே எதிர்காலத்தில் ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள், கணக்காளர், இலங்கை நிர்வாகசேவை அதிகாரிகள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உருவாகவேண்டும். மாணவர்களுக்கு அதற்குரிய வகையில் தலைமைத்துவப் பண்புகளுடன் வளர்க்கவேண்டும்.
மாணவர்களே நீங்கள் மற்றையவர்களுக்கு உதவும் சிந்தனையை வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். உயர் பதவிகளுக்குச் செல்லும்போது உங்களுக்கு பணிவு வேண்டும். மக்களுக்காக சேவையாற்றவேண்டும், என்றார்.
ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம் - வட மாகாண ஆளுநர்
Reviewed by Vijithan
on
May 24, 2025
Rating:

No comments:
Post a Comment