மது அருந்தி வாகனம் செலுத்திய ஓட்டுநரால் விபத்து: இரண்டு பெண்கள் பலி
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம - பனாகொட வீதியில் கார் ஒன்று மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (06) மாலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் எம்புல்கம நோக்கி பயணித்த கார் ஒன்று, அதே திசையில் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தப்படாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த இரண்டு பெண்களும் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 42 மற்றும் 44 வயதுடைய ரனால மற்றும் கிராந்துருகோட்டே பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தின் பின்னர் சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரான ஓட்டுநரைக் கைது செய்துள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய காரையும் பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
விபத்து நடந்த தருணத்தில் ஓட்டுநர் மது அருந்தியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
June 07, 2026
Rating:


No comments:
Post a Comment